ஹீரோ ஆகிவிட்ட வித்தகக் கவிஞர் பா விஜய் ‘வில் மேக்கர்ஸ்’ என்ற தனது பட நிறுவனம் சார்பில் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா ’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி வெளியிடும் இந்தப் படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டில் பிரபலங்கள் பேசியதிலிருந்து…
பேராசிரியர் கு ஞானசம்பந்தம் –
“இது போன்ற விழாக்களில் லேசாக பேதை, பெதும்பை, ரிவை, தெரிவை, பேரிளம்பெண் என தமிழில் பேச ஆரம்பித்துவிட்டால், உடனே செல்போனை எடுத்து காதில் வைத்து கொண்டு ‘மாப்ள இதோ வந்துட்டேன்’ என்று எழுந்துவிடுகிறார்கள். இங்குள்ள நடிகைகளில் பலருக்கும் தமிழ் தெரியவில்லை என்றாலும் தமிழில் பேச முயற்சித்தார்கள். இதற்காக திரையுலகினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பள்ளிக்கூடங்களில் கூட தமிழ் இல்லாத இடத்தில் இவர்களையெல்லாம் திரையில் தமிழில் பேச வைத்திருப்பதற்கு இயக்குநர் பா. விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் எனக்கு ஒரு வித்தியாசமான கேரக்டரை அவர் கொடுத்திருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு உற்சாகமாக இருக்கும்..!”
இசையமைப்பாளர் வித்யாசாகர் –
“எனக்கும் பா. விஜய்க்கும் இருபது வருட பழக்கம். எங்கள் கூட்டணியில் வெளியான பாடல்கள் 98 சதவீதம் வெற்றிபெற்றிருக்கிறது.பாடல் ஆசிரியராகத் தொடங்கி, இன்று இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கும் அவருடைய வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இதற்குப் பின்னணியில் அவரும், அவருடைய தந்தையாரின் உழைப்பும் இருக்கிறது.
இந்தப் படத்தில் அவரை நான் பாடகராகவும் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.வர்ஷா என்ற இளம்பெண்ணையும் பாடகியாக நான் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்..!”
இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் –
“நான் மற்றவர்களின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதில்லை. ஏனெனில் நான் நடிகனில்லை. ஆனால் எனக்கு பா. விஜய்யைப் பிடிக்கும். இந்தப் படத்தின் கதையை முழுவதுமாக இயக்குநர் பா விஜய் என்னிடம் சொல்லவில்லை. என்னுடைய கேரக்டரைப் பற்றியும், என்னுடைய கெட்டப்பைப் பற்றியும் மட்டுமே சொன்னார். அது எனக்கு பிடித்திருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
இயக்குநர் கே. பாக்யராஜ் –
“என்னுடைய உதவியாளராக பா. விஜய் சேரும் போது பாடல் எழுதுவதற்காகத்தான் வந்தேன் என்றார். ஆனால் அவரிடத்தில் ஏரளாமான திறமைகள் இருந்திருக்கிறது. அதைப் பற்றி என்னிடம் சொல்லவேயில்லை. இந்த படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். அவருடைய உதவியாளர் இங்கு பேசும் போது, பாடல் எழுதும் பயிற்சி பெறும் போதே பகுதி நேரமாக அவர் இசைபயிற்சியையும் எடுத்திருக்கிறார் என்று சொன்னார்.
இந்தப் படத்திற்காக பா. விஜய் உழைத்த உழைப்பு எனக்குதான் தெரியும். கஷ்டப்பட்டு உழைக்கும் உழைப்பு எப்போதும் வீணாகாது என்பது என்னுடைய நம்பிக்கை. அதே போல் பா. விஜய், பாடல் எழுதுவதையும், கவிதை எழுதுவதையும் விட்டுவிடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்..!”
இயக்குநர் பா. விஜய் –
“இரண்டு வருட உழைப்பில் உருவாகியிருக்கிறது இந்த ‘ஆருத்ரா’. 1996 ஆம் ஆண்டில் என்னுடைய குருநாதர் கே பாக்யராஜ் அவர்களின் ஆசியுடன் ‘ஞானப்பழம்’ என்ற படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகமானேன். 22 ஆண்டுகளுக்கு பிறகும், கடந்த வாரம் வெளியான ‘மோகினி’ படத்தில் பாடல் எழுதியிருக்கிறேன். அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்துக்கும் பாடல் எழுதியிருக்கிறேன்.
கவியரசு கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற பிரம்மாண்டமான பாடலாசிரியர்கள் வாழும் இந்தத் திரையுலகில் 22 ஆண்டு பயணமென்பது எளிதானதல்ல. இதற்கு காரணமான என்னுடைய குருவிற்கும், ஆதரவளித்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி.
இன்றைய தமிழ்த் திரையுலகில் பழைய படத்தில் யார் நடித்திருந்தாலும் அந்தப் படத்தை ரீமேக் செய்துவிடலாம். ஆனால் என்னுடைய குருநாதர் கே. பாக்யராஜ் நடித்த எந்த படத்தையும் தற்போது எந்த ஹீரோவை வைத்தும் ரீமேக் செய்ய முடியாது. சில்மிஷம், குறும்புத்தனம், ஹீரோயிஸம் இல்லாத ஹீரோயிஸம், புத்திசாலித்தனம் என பல நுணுக்கமான விஷயங்களைத் தன்னுடைய திரைக்கதையில் வைத்திருப்பார். அவரை இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கவைத்திருக்கிறேன்.
எஸ்ஏசி என்னுடைய திரையுலக ஆசான் மற்றும் நண்பர். அவரை இந்தப்படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க வைத்திருக்கிறேன்.
இந்தப் படத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தம் இரண்டு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். அவர் படம் முழுவதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார். இது ரசிகர்களை ஈர்க்கும்.
படத்தின் கதையைப் பற்றி ஓரிரு வரிகளில் சொல்லவேண்டும் என்றால், ‘கருவறைக்குள் இருக்கும் பெண்குழந்தைக்குக் கூட பாதுகாப்பில்லாத வெறியர்கள் இருக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அரசு, சட்டம், காவல் துறை எதுவும் துணைக்கு வராது. இம்மூன்றுமாக பெற்றோர்களாகிய நாம் மாறினால்தான் நம்முடைய பெண் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்.’ என்பதை நான் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறேன்.
இன்றைய சமூகத்தில் இளஞ்சிறுமிகள் மீது திணிக்கப்படும் பாலியல் வன்முறை என்பது உலகளவில் இந்தியா பற்றிய ஒரு தவறான பார்வையைப் பதிவு செய்திருக்கிறது.
சேலம் மாவட்டத்தில் கொல்லிமலை என்ற பகுதியில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு தான் இந்த கதையை எழுதினோம். நிர்பயா, ஆசிஃபா, ஹாசினி, அயனாவரம் சிறுமி என இந்த களையப்படவேண்டிய குற்றங்கள் தொடரும் இந்த சமயத்தில் இந்த படம் வெளியாவது பொருத்தமானது என்று நினைக்கிறேன்..!”