ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து ஆண் பெண்ணுக்குள் நிலவும் ஈகோ மோதல்கள் தான் கதை.
உலகுக்கே தெரிந்த மெல்லிய லைன்தான் இது என்றாலும் அதை ஒரு இடத்திலும் சுவாரசியம் குறையாமல் கொடுத்திருப்பதில் கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் கலையரசன் தங்கவேல்.
ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் ரியோ ராஜுக்கும் மாளவிகா மனோஜ்க்கும் காதல் வருகிறது. கட்டுப்பாடான குடும்பத்தில் வளர்ந்ததால் தன்னிச்சையாக வாழத் துடிக்கும் மாளவிகாவின் எண்ணத்துக்கு மதிப்பு கொடுத்து அவரது விருப்பப்படியே வாழும் உறுதியுடன் திருமணம் செய்து கொள்கிறார் ரியோ ராஜ்.
இன்னும் 400 வருடங்களுக்கு நாம் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆரம்பிக்கும் அவர்களது வாழ்க்கை 400 நாள்களில் புட்டுக் கொள்கிறது. தம் அடிப்பதில் தொடங்கி ஆணுக்கு நிகரானவள் பெண் என்று நடந்து கொள்ளும் மாளவிகா அதன் காரணமாகவே மண வாழ்க்கைக்கு பெரும் சுமையாக அமைகிறார்.
இந்த விஷயம் இருவருக்குள்ளும் பிரச்சனையை உருவாக்க, மாளவிகாவின் கர்ப்பம் கலைந்து கோர்ட்டில் விவாகரத்துக்குப் போய் நிற்கிறது.
மாளவிகாவின் கோபத்துக்கு தூபம் போடும் முகமாக அவர் சென்று சேர்ந்த பெண் வக்கீல் ஷீலாவும் ஏற்கனவே விவாகரத்தானவராக இருக்க அவரும் சேர்ந்து பிரச்சனையை பெரிது படுத்துகிறார்.
ஆனால் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கும் ரியோ ராஜுக்கு உறுதுணையாக வந்து சேர்கிறார் வக்கீல் விக்னேஷ் காந்த்.
இரண்டாவது பாதியில் கோர்ட் டிராமாவாக செல்லும் இந்தக் கதை எப்படி முடிந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
அலட்டிக் கொள்ளாத ரியோ ராஜின் நடிப்பு கவர்கிறது. மாளவிகாவின் காதலுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளும் அவர் ஒரு கட்டத்தில் வெடித்து எங்கெங்கே தான் விட்டுக் கொடுத்தேன் என்பதைச் சொல்லும் போது தியேட்டர் அமளி துமளிப் படுகிறது.
தனக்கான பாத்திரத்தில் சரியாகப் பொருந்துகிறார் மாளவிகா மனோஜ். எல்லாம் தெரிந்தவள்… பெண்ணிய சிந்தனை உள்ளவள் என்று தன்னை நினைத்துக் கொண்டாலும் எதுவுமே தெரியாத அப்பாவி என்பதை நடிப்பின் மூலமே அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆர். ஜே. விக்னேஷ் காந்த் இதுவரை வந்த படங்களில் எல்லாம் நமது வெறுப்பை சம்பாதித்தவர். அவர் நடித்தாலே படம் ஊற்றிக் கொள்ளும் என்கிற நினைப்பை இந்த படத்தில் மாற வைத்திருக்கிறார். அதற்கு இயக்குனருக்குதான் அவர் நன்றி சொல்ல வேண்டும்.
அவரது விவாகரத்தான மனைவியாக வரும் ஷீலாவும் தன் பாத்திரத்தில் பொருந்தி இருக்கிறார். வழக்கமாகவே கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்பவருக்கு இந்த பாத்திரம் சரியாக அமைந்திருக்கிறது.
நடிப்பில் பெரிய ஹைலைட் ஜென்சன் திவாகரின் நகைச்சுவைதான்.
தொழில் நுட்ப கலைஞர்களில் முதன்மை பெறுகிறார் இசையமைப்பாளர் சித்து குமார். பாடல்களில் மட்டுமல்லாது பின்னணி இசையால் அந்தந்த உணர்வுகளை அங்கங்கே மிகச் சரியாக கடத்துகிறது அவரது திறன்.
இளமையான இந்த படத்துக்கு தன்னுடைய கலர்ஃபுல் ஒளிப்பதிவின் மூலம் வனப்பை கூட்டுகிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம்.
ஊர் அறிந்த கதைக்கு தனது திறமைமிக்க திரைக்கதை, உரையாடல்கள் மூலம் ரசிக்க வைத்திருக்கிறார் கலையரசன் தங்கவேல்.
இன்றைய இளைஞர்களை கவரும் விதமாக திரைக்கதை அமைத்திருந்தாலும் தவறான தலைப்பின் மூலம் தள்ளாடுகிறது இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு.
அதை நச்சென்று பிடித்திருந்தால் முதல் நாளில் இருந்தே படம் பெரிதளவு பேசப்பட்டிருக்கும்.
படம் ரசிக்கும்படி இருந்தாலும் படத்தின் அடிநாதம் ஆணாதிக்கம்தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த வகையில் அதை ரசிக்க முடியவில்லை.
ஆண்பாவம் பொல்லாதது – பெண்களின் நியாயம் இல்லாதது..!
– வேணுஜி