சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் நடிப்பில் இயக்குனர் தாமிராவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவான ‘ஆண் தேவதை’ படத்தின் இசை வெளியீடு இன்று 10ஆம் தேதி நடப்பதாக இருந்தது. போஸ்டர்களும் ஒட்டப்பட்டன.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழின தலைவர் கலைஞர் இயற்கை எய்த இந்த நேரத்தில் நிகழ்ச்சி வேண்டாம் என்று படக் குழுவினர் ஒருமித்தமாக கூடி முடிவு செய்தனர்.
இது குறித்து ‘ஆண் தேவதை’ திரைப்படத்தின் திரை அரங்கு விநியோக உரிமை பெற்ற நியூ ஆர். எஸ். எம். பிலிம் புரடக்ஷன்ஸ் நிறுவனர் மாரிமுத்து கூறுகையில் “ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்துக்கு இந்தக் காலக் கட்டம் சோதனையானது. கலைஞர் அவர்கள் தமிழ்த் திரை உலகிற்கு செய்த சேவைகள், சாதனைகள் அதிகம்.
‘ஆண் தேவதை’ இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மிக விமரிசையாக நடைபெற்று கொண்டு இருந்த கட்டத்தில்தான் கலைஞர் அவர்களின் மறைவு செய்தி இடி போலத் தாக்கியது. கடைசி நேர மாற்றம் செய்ய.வேண்டிய கட்டாயம். கலைஞர் அவர்களுக்கு மரியாதை என்று வரும் போது இந்த இடையூறுகள் பெரிய விஷயமா என்ன, என்று எண்ணியாவாறே நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டோம்.
ஆனாலும் இசை வெளியீடு இன்றைய காலத்தின் கட்டாயத்தில் இன்று வெளி ஆவதை தவிர்க்க முடியாதது என்று இசை உரிமையை பெற்ற சரிகம நிறுவனம் கூறியபோது மறுக்க முடியவில்லை.
தமிழ் சமுதாயத்துக்கு மிக நல்ல கருத்துகளை சொல்லும் இந்தப் படத்துக்கு நம்மை சொல்லொணா துயரத்தில் ஆழ்த்தி விட்டுச் சென்ற கலைஞர் ஒரு ‘ஆண் தேவதை’ போல் இருந்து ஆசிர்வதிப்பார் என்று நம்புகிறேன். எல்லோருக்கும் உகந்த மற்றுமொரு நாளில் இசை விழா நடைபெறும்..!” என்றார்.