நஞ்சிலேயே கொடியது ஆலகாலம் என்கிறது புராணம். அதைத் தலைப்பில் வைத்து புதுமுக இயக்குனர் ஜெயகிருஷ்ணா என்ன சொல்லப் போகிறார் என்பதுதான் படம் பார்க்கும் முன் நம் முன் எழுந்த கேள்வியாக இருந்தது.
ஆனால் படம் பார்த்து முடிந்ததும் நமக்கு ஏற்பட்ட அனுபவமே வேறு.
ஜெய கிருஷ்ணா இந்தப் படத்தை முதல்முறையாக இயக்க மட்டும் செய்யவில்லை – தயாரிப்பாளரும் படத்தின் நாயகனும் அவரேதான்.
விஷ சாராயத்துக்கு கணவன் பலியாக, மகனைப் படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தில் ஜெயகிருஷ்ணாவின் தாய் ஈஸ்வரி ராவ் அவரை சிரமத்துடன் படிக்க வைத்து பட்டணத்துக்கு பொறியியல் கல்லூரியில் படிக்க அனுப்புகிறார்.
ஜெய கிருஷ்ணாவும் ஒழுக்கம், கல்வி இவற்றில் சிறந்து விளங்கி நல்ல மாணவனாகத் திகழும் வேளையில் அந்த நற்குணங்களே உடன்படிக்கும் மாணவி சாந்தினிக்கு அவர் மீது காதலை ஏற்படுத்த, சக மாணவர்களுக்கு அந்த காதல் பொறாமையை ஏற்படுத்த… அதன் விளைவு அவரை எங்கெங்கோ கொண்டு சென்று கடைசியில் குடிகாரனாகவும் மாற்றி விடுகிறது.
ஒழுக்க சீலனாக மகன் வளர்கிறான் என்று நினைத்த ஈஸ்வரி ராவுக்கு அவர் குடிகாரனாக மாறிய விஷயம் தெரிந்தால் என்ன ஆகும் என்கிற பதை பதைப்பு இடைவேளையில் இருந்தே நம்மைப் பற்றிக் கொள்கிறது.
படத்தின் முடிவு நம்மைப் பதற வைத்து விடுகிறது.
கிராமத்து வெள்ளந்தியான பேச்சு, சிரிப்போடு இயல்பாக வரும் ஜெயகிருஷ்ணாவை பட ஆரம்பத்தில் பார்த்தபோது இவரெல்லாம் ஹீரோவாக நிலைக்க முடியுமா என்கிற சந்தேகம் நம்முள் எழுந்தது உண்மை. அத்துடன் கல்லூரி மாணவன் வேடத்திற்கும் அவர் பொருத்தம் இல்லாதவராகவே இருக்க, பளிங்குச்சிலை போன்ற சாந்தினி அவருக்கு ஜோடியாகவும் ஆகும்போது நமக்கு பகீர் என்று இருக்கிறது.
ஏதோ கொஞ்சம் பணத்தை வைத்துக்கொண்டு இப்படி சினிமா ஆசையில் தன் தாகத்தை தீர்த்துக் கொள்கிறார் ஜெய் கிருஷ்ணா என்றுதான் முதல் பாதி வரை நினைக்கத் தோன்றியது.
ஆனால் இரண்டாவது பாதியில் அவர் நடிப்பு வேறு எந்த ஹீரோவும் இந்த வேடத்தை இந்த அளவுக்கு ஏற்று நடித்திருக்க முடியாது என்கிற அளவில் அசுரத்தனமாக அமைந்துவிட்டது.
தன்னுடைய நிலைமை அம்மாவுக்கு தெரியக்கூடாது என்பது ஒரு புறம், காதலித்த மனைவியை நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது இன்னொரு புறம், அவள் வயிற்றில் தன் குழந்தையும் வளர அந்தக் குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்றெல்லாம் அவருக்கு பொறுப்புகள் அதிகமாக, அத்தனையையும் ஒரு கட்டத்தில் மறந்து குடிக்கு அடிமை ஆவது மகா சோகம்.
அதன் விளைவாக ஒரு காலையும் இழந்து காதலிக்குத் தாங்க முடியாத சோகத்தைத் தந்து படத்தை பார்ப்பவர்கள் ஜெயகிருஷ்ணாவை வெறுக்கும் நிலைக்கு நடித்துத் தள்ளி இருக்கிறார்.
அவருடைய நடிப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் இப்படி ஒரு சமூக சீர்திருத்த படத்தை எடுத்ததற்காகவும் நிறைய விருதுகள் தந்து அவர் கௌரவிக்கப்பட வேண்டும். வாழ்த்துகள் ஜெயகிருஷ்ணா..!
காதலித்தவனையே கணவனாக அடைய வேண்டும் என்கிற ஒரே கொள்கையுடன் வசதியான வாழ்க்கையையும், கல்வியையும் ஒரு நொடியில் தூக்கி எறிந்து விட்டு வரும் சாந்தினியைப் பார்க்க பாவமாக இருக்கிறது.
அப்படி அமைந்த வாழ்க்கையும் ஒரு கட்டத்தில் கைவிட்டுப் போய் கர்ப்பிணியான நிலையில் கணவனும் தன் கஷ்டம் உணராத குடி நோயாளியாக மாறிப் போக, சாந்தினியை நினைத்து இரண்டு சொட்டுக் கண்ணீர் விட நேர்கிறது.
அந்தப் பக்கம் அம்மா ஈஸ்வரி ராவ் நிலை இன்னும் மோசம். மனது கேட்காமல் அவ்வப்போது மகனுக்கு போனைப் போட்டு எப்படி இருக்கிறாய் என்று கேட்கும் அந்த ஏழைத் தாயைப் பார்க்கும் போதெல்லாம் நமக்குப் பரிதாபமாக இருக்கிறது.
மகனைப் பார்க்க பட்டணத்துக்கு வந்த நிலையில் ‘குடிகாரனை பெற்றவள்’ என்று சாந்தினியின் பக்கத்து வீட்டுக்காரப் பெண் ஏச, பதட்டத்துடன் மகனைத் தேடி போகும்போது அவன் குப்பை மேட்டில் ஒரு கால் இல்லாமல் ஈக்கள் மொய்க்க கிடப்பதைப் பார்த்தால் எந்த தாய்க்குதான் மனசு பதறாது..?
அந்த நிலையிலும் தாயைப் பார்த்து “எனக்கு குடிக்க மது வாங்கி வா… இல்லாவிட்டால் நான் செத்து விடுவேன்..!” என்று அவர் கதற, அந்தப் பதட்டத்துடன் மதுக் கடைக்கு போய் அவனுக்காக மதுவை வாங்கிக் கொண்டு ஓடிவரும் அந்த தாயின் நிலை எந்தத் தாய்க்கும் வந்து விடக்கூடாது.
அற்புதமான காட்சி அமைப்புகள் – உணர்ச்சிமயமான கதை – உலகத்துக்கு ஏற்ற போதனை..!
கிளைமாக்சில் வெகுண்டெழும் ஈஸ்வரிராவ் எடுத்த முடிவுகள் பராசக்தியின் அவதாரம்..!
தீபா சங்கர், தங்கதுரை, சிசர் மனோகர், கோதண்டம் உள்ளிட்டோர் தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.
கா.சத்தியராஜின் ஒளிப்பதிவு படத்தின் தன்மைக்கேற்ப அமைந்திருக்கிறது. அதேபோல் பொருத்தமான பாடல்கள் மற்றும் பின்னணி இசை என்று படத்தின் தன்மையைப் புரிய வைத்திருக்கிறார் என்.ஆர்.ரகுநந்தன்.
ஒரு முதல் பட இயக்குனருக்கு படத்தொகுப்பாளர் மு.காசிவிஸ்வநாதன் போன்ற அனுபவசாலிகளின் ஒத்துழைப்பு மிக அவசியம். அதை சரியாகப் புரிந்து கொண்டு தன் திறமையை பங்களித்திருக்கிறார் மு.கா.
இதுபோன்ற சமூக சீர்திருத்த படங்களுக்கு வரி விலக்கு அளிப்பதுடன் அரசு விருதுகளும் தரப்பட்டு படைப்பாளிகள் கௌரவிக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட எல்லா பெருமைகளுக்கும் சொந்தக்காரராக இருக்கிறார் ஜெய் கிருஷ்ணா.
ஆனால் அரசே முன் நின்று மதுக்கடைகளை நடத்திக் கொண்டிருக்கும்போது இதெல்லாம் சாத்தியமா என்று எதிர்க் கேள்வி கேட்காதீர்கள்.
படத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு படத்துக்கு யு சான்றிதழ் அடித்த தணிக்கைக் குழுவையும் பாராட்டுகிறோம்.
ஆலகாலம் – படக் கருத்தில் அமுதம்..!
– வேணுஜி