வழி தவறிப்போன இளைஞனின் காதலும் அவனுடைய வாழ்வும் என்ன ஆனது என்று சொல்லும் உணர்ச்சிமயமான கதை. கடத்தல் தொழில் சார்ந்த இந்தக் கதையை துறை சார்ந்து துல்லியமாக இயக்கி நம் கண் முன் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சமய முரளி.
குறுக்கு வழியில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கடனில் சிக்கித் தவிக்கும் எல்லோருக்கும் இருக்கிற ஆசை காரணமாக இருக்கும் துறைமுகத் தொழில் வேலையை விட்டுவிட்டு கடத்தல் தொழிலில் தாதாவாக இருக்கும் ஜேடி சக்கரவர்த்தியிடம் வேலைக்கு சேர்கிறார் நாயகன் சரண். அதே எண்ணத்துடன் அவருடன் இணைகிறார் அவருடைய நண்பரான பால சரவணன்.
சரணுக்கு அன்பான அம்மாவாக ராதிகா சரத்குமார் இருக்க, அதைப் போன்று அன்புடன் காதலும் சேர்த்து நாயகி ஸ்மேகாவின் காதலும் வந்து சேர, கடவுள் வந்து கதவை திறக்கும் போது சாத்தான் வந்து உள்ளே புகுந்த கதையாக பெரும் பொருள் சேர்க்க ஆசைப்பட்டு ஜேடி சக்கரவர்த்தியின் கடத்தல் பொருளையே கடத்தும் சரணும் பால சரவணனும் என்ன ஆனார்கள்… அவர்களது வாழ்க்கை என்ன ஆனது என்பதுதான் கதை.
தாயின் நல்ல வளர்ப்பும் அன்பும் இருந்தும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்படுவதில் தொடங்கி, காதல் மனைவியிடம் எப்படி தன்னை நிரூபிப்பது என்று தெரியாமல் தவிப்பது வரை நாயகன் சரண் சக்தி நூல் பிடித்தாற்போல் நடித்திருக்கிறார். அதிலும் இறுதியில் தன் அம்மாவிடமும் காதலியிடமும் கெட்ட பெயர் எடுக்க நேரும் நிலையை நன்றாகவே வெளிப்படுத்தி இருந்தாலும் பெரிய தாதாக்களையும் சுங்கத்துறை அதிகாரியையும் சுத்தவிடும் அந்த கேரக்டருக்கு இன்னும் அவர் பலவானாக இருந்திருக்க வேண்டும்.
ஆரம்பத்தில் நம்மை கொஞ்சம் சிரிக்க வைத்தாலும் போகப் போக சீரியஸ் வேடம் எடுக்கும் பால சரவணன், நண்பன் படும் துன்பம் தாளாமல் தன்னையே காட்டிக் கொடுக்க முனையும் நட்பில் பாராட்ட வைக்கிறார்.
தானே கதை வசனகர்த்தாவாகவும் இயக்குனராகவும் இருப்பதால் சுங்கத்துறை அதிகாரியாக சமய முரளி, தன் பாத்திரத்தை திறம்பட சமைத்திருக்கிறார். அவர் நல்லவரா, கெட்டவரா என்பதை கடைசி காட்சி வரை நம்மால் கணிக்க முடியவில்லை. அனுபவமிக்க நடிகர்களுக்கு நடுவில் அனுபவம் வாய்ந்த நடிகரைப் போல் அவர் நடித்திருப்பதே ஆச்சரியம்.
தாதா வேடத்துக்கு ஜே டி சக்கரவர்த்தி பொருத்தமாக இருக்கிறார் என்றால் அவரையே ஆட்டுவிக்கும் வேடத்தில் வரும் லால், அதகளப்படுத்துகிறார்.
சரணின் காதல் மனைவியாக வரும் ஸ்மேகா, ஆரம்பத்தில் இருந்து சந்தேகப்பட்டது போல் சரணின் தவறான பாதை புரிந்து வெளியேற நினைக்கும் வேளையில் போலீசில் சிக்கிக் கொள்வது பரிதாபம். எல்லோரும் சரணை சந்தேகம் கொண்டு பார்க்க போலீஸ் காவலில் இருந்தும் கூட அவன் தன்னை மீட்க வந்து விடுவான் என்று நம்புவதில் தன் காதலை ஜெயிக்க வைத்து விடுகிறார்.
தாய் அன்பு எத்தனை சக்தி வாய்ந்தது என்று ராதிகா புரிய வைத்து விடுகிறார். மகன் நம்பிக்கைக்கு மாறாக நடந்தாலும் மருமகளை கடைசி வரை கைவிட்டு விடாமல் நிற்கும் பாத்திரத்தில் நிமிர்ந்து நிற்கிறார் ராதிகா.
இடையில் வரும் சினேகா குப்தாவின் நடனக்காட்சி சீரியஸான கதை நகர்வுக்கு இடையே நம்மை ரிலாக்ஸ் செய்ய வைக்கிறது.
ஒரு பரபரப்பான கடத்தல் கதையை அதன் புரிதலுடன் நகர்த்தி இருப்பதில் ஒளிப்பதிவாளர் கே.ஏ.வின் பாஸ்கரின் திறமை பளிச்செடுக்கிறது. சாம் டானியலின் இசையும் அதற்குக் கட்டியம் கூறுகிறது. பின்னணி இசைகளும் பிரமிக்க வைத்திருக்கிறார் சமய முரளி.
இயக்குனர் சமய முரளியே துறை சார்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருக்க, கதையின் லாஜிக் பற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியது இல்லை. ஆனால் வணிகரீதியான படமாக இதை கொண்டு செல்லாமல் இயல்பான கதையாகச் சொல்லி இருந்தால் இன்னும் ரசித்திருக்க முடியுமோ என்று தோன்றுகிறது.
ஆனாலும் வெகுஜன ரசனைக்கு வித்தாகும் கடத்தல் படம் இது.
எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் – பிரண்ட் ஆஃப் தி சொசைட்டி..!
– வேணுஜி