April 12, 2026
  • April 12, 2026
Breaking News
April 11, 2026

TN 2026 திரைப்பட விமர்சனம் (3.45/5)

By 0 9 Views

தமிழ் சினிமாவில் மணிவண்ணனுக்குப் பிறகு அரசியல் நையாண்டிக் கதைகள் குறைந்து விட்டன. ஆனால், ‘அப்படிச் சொல்லிவிட முடியாது…’ என்று களம் இறங்கி இருக்கிறார்கள் தயாரிப்பாளர் கண்ணன் ரவியும், தம்பி ராமையாவும்.

அரசியல் மட்டும் என்றில்லாமல் சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வருவது பற்றிய ஒரு நையாண்டிக் கதையை இதில் சொல்லி இருக்கிறார் இந்தக் கதையைத் திறம்பட எழுதி இருக்கும் தம்பி ராமையா. 

அதிலும் நடிகர்களை நையாண்டி செய்தோம், போனோம் என்று இல்லாமல் அவர்களுக்குப் பின்னால்  இருப்பவர்கள் அவர்களுக்குக் கொடுக்கும் அழுத்தத்தையும் இதில் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார் அவர். 

அந்த அழுத்தமான கதைக்கு உயிர்ப்பான திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் உமாபதி ராமையா. 

வேற்று மாநிலத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் வந்து உச்ச நடிகராகும் பாத்திரத்தில் நட்டி நடராஜ் நடிக்க, அந்தப் பிரபலத்தைப் பயன்படுத்தி அவரை தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஆக்கிவிட வேண்டும் என்கிற முனைப்பில் இறங்குகிறார் பொள்ளாச்சியைச் சேர்ந்த தனவந்தரான ஜமீன் தம்பி ராமையா. 

அப்படி முடிந்ததா என்பதைச் சொல்வதுடன் எம்ஜிஆர் தொடங்கி இன்று வரை அரசியல் வழியே பயணப்பட்ட அத்தனை நடிகர்களையும் நினைவு படுத்தி ஒரு அரசியல் புரிந்துணர்வை பார்வையாளனுக்குள் ஏற்படுத்தி இருப்பதைப் பாராட்டலாம்.

வடமாநிலத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தமிழே சரியாக வாயில் நுழையாமல் இருக்கும் ‘குல்கந்த் குமார்’ பாத்திரத்தை சிறப்பாக ஏற்று நடத்திருக்கிறார் நட்டி. அவர் பேசும் ப்ரோக்கன் தமிழ் செம நாட்டி..!

அடுத்த எம்ஜிஆர் என்கிற அளவில் உயர்ந்து கொண்டிருக்கும் தங்க நட்சத்திரம் நட்டி, தானாகவே நம்பியாராக மாறிவிடாமல் அவரைச் சுற்றி இருப்பவர்கள் எப்படி அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகிறார்கள் என்கிற ரசவாதம் சிறப்பாக திரைக்கதையில் கையாளப்பட்டிருக்கிறது. 

ஆனாலும், அந்தக் கதை நடப்பது இன்றைய 2026 என்கிற அளவில் அந்தப் பாத்திரம் அப்படியே இப்போதைய அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கும் உச்ச நடிகரை உருவகப்படுத்தும் பாத்திரமாக மாற்றம் பெறுகிறது. 

பார்த்த மாத்திரத்திலேயே இது அவர்தான் என்று நாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு ஒப்பனை, நடை, உடை பாவனைகளுடன் உடல் மொழியிலும் துல்லியமாக அதை நிறைவேற்றி இருக்கிறார் நட்டி. அதேபோல் அந்த பாத்திரம் வேறு வேறு நடிகர்களாக பரிணமிக்கும் போதும் அதை அப்படியே தெளிவுபட நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார் அவர்.

அவரை உச்சத்துக்கு கொண்டுவர விரும்பும் ஜமீனாக தன்னுடைய சொத்துக்களை இழந்து மதிப்பையும் இழந்து போகும் பாத்திரத்தில் தம்பி ராமையா வாழ்ந்தே இருக்கிறார். நட்டிக்குத் தளர்வு வரும்போதெல்லாம் கை கொடுத்துத் தூக்கி, தனக்குத் தளர்வு வரும் போதெல்லாம் அதைத் தானே தாங்கிக் கொள்கிற பக்குவத்திலும் பரிமளிக்கிறார்.

அந்தப் பாத்திரமும் கூட இப்போது இருக்கும் உச்சநடிகரை முதலமைச்சர் ஆக்கிப் பார்க்க விரும்பும் ஒரு மனிதரின் பாத்திரத்தையே ஒத்திருக்கிறது.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஷெரிட்டா ராவ் மற்றும் நட்டியின் தொடக்க கால ஜோடியாகும் சாந்தினி தமிழரசன் ஆகியோரை விட, நட்டியின் அன்புக்கு பாத்திரமாகும் யாஷிகா ஆனந்த் பாத்திரம் ரசிக்க வைக்கிறது.

அனுபவ நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ஆகியோர் அரசியல்வாதிகளாக வந்தும் மேற்படி நட்டி மற்றும் தம்பி ராமையா பாத்திரங்களைத் தவிர திரையில் யாரும் அதிகம் ஆதிக்கம் செலுத்தவில்லை.

ஆனால் ரெடின் கிங்ஸ்லீக்கு முக்கியமான பாத்திரம் வாய்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா கதை செல்லும் எல்லா காலகட்டத்தையும் நினைவுபடுத்தி ரசிக்க வைக்கிறார்.

தன் தனித்தன்மையை ஒதுக்கி வைத்து விட்டு இந்தக் கதையின் தன்மைக்காக வித்தியாசமாக இசைத்திருக்கிறார் இசையமைப்பாளர் தர்புகா சிவா.

தந்தை தம்பி ராமையாவின் கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் மகன் உமாபதி ராமையா, அந்தக் கதைக்கு உயிர் கொடுத்து இருக்கிறார் எனலாம்.

அதில் எம்ஜிஆரை போல் யாரும் மக்கள் சேவையில் வெற்றி பெற்றதில்லை என்பதைச் சொல்லி இருப்பதுடன், அரசியல் தலைவராக விரும்பும் மற்ற நட்சத்திரங்கள் அப்படி மக்கள் சேவையை மனதில் கொள்ளவில்லை என்கிற மாபெரும் உண்மையையும் சொல்லி இருப்பது ‘பலே..!’

அத்துடன் தானே நடிகராக இருந்த போதும் தனக்கென ஒரு பாத்திரத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் இயக்கத்தில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி இருப்பது நேர்மையான முயற்சி.

பல நடிகர்களின் நினைவு இந்த படத்தைப் பார்க்கும் போது நமக்கு எழுந்தாலும் அவர்கள் யாரையும் புண்படுத்தாமல் அதே நேரத்தில் ரசிக்க வைக்கிறது இந்த படம் என்பதுடன் ஒரு அரசியல் தெளிவைத் தந்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

TN 2026 – உச்சத்தில் (தங்க)நட்சத்திரம்..!

– வேணுஜி