November 22, 2024
  • November 22, 2024
Breaking News

ஶ்ரீகாந்த் தேவா

By on May 24, 2023 0 231 Views
MAY 23, 2023 08:59 AM

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் 100 வது படமாக உருவாகியுள்ள ‘பிரியமுடன் ப்ரியா’!

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் 100 வது படமாக உருவாகியுள்ள ‘பிரியமுடன் ப்ரியா’!

இளம் வயதில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல வெற்றிப் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, 100 திரைப்படங்களை தாண்டி தொடர்ந்து முன்னணி இசையமைப்பாளராக பயணித்துக்கொண்டிருக்கிறார்.

 

இந்த நிலையில், ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த 100 வது படம் என்ற சிறப்பை பெற்றிருக்கிறது ‘பிரியமுடன் ப்ரியா’ திரைப்படம். ஏ.ஜே.சுஜித் இயக்கத்தில், அசோக் குமார், லீசா நடித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இசையமைப்பாளர் தேவா, இயக்குநரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன், சட்டமன்ற உறுப்பினர் தா.வேலு, தயாரிப்பாளர்கள் கே.ராஜன், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்,  தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.கதிரேசன், ஆர்.ராதாகிருஷ்ணன், இணைச்செயலாளர் செளந்தரபாண்டியன், செயற்குழு உறுப்பினர் என்.விஜயமுரளி, நடிகர் காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் அசோக் பேசுகையில், “இது குடும்ப விழா கொண்டாட்டமாக உள்ளது. இந்த படத்துக்கு பாடல் அருமையாக அமைந்துள்ளது. எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம் பாடிய பாடலை நான் இப்போது தான் கேட்டேன். 100-வது படத்துக்கு இது அமைந்தது ஸ்பெஷல் தான். சூப்பர் ஸ்டார் ரஜினியை கொண்டாடும் ரசிகர்கள் அவரின் டைட்டில் வரும் போது வரும் பி.ஜி.எம். தேவா மியூசிக். நான் சினிமாவில் ஜீரோவில் இருந்து ஆரம்பிக்கும் போது ஒரு சில வாய்ப்புகள் தவறும். வாய்ப்பு கிடைத்தால் தான் நிரூபிக்க முடியும். கங்கை அமரன் குடும்பத்தை nepotism என்ற வார்த்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த படம் தமிழ் தெலுங்கில் எடுக்கப்பட்டது. தெலுங்கு அந்தளவுக்கு தெரியாது கொஞ்சம் தான் தெரியும், இருந்தாலும் உதவி இயக்குநர்களின் ஒத்துழைப்போடு நானே டப்பிங் செய்தேன்.” என்றார்.

 

சட்டமன்ற உறுப்பினர் தா.வேலு பேசுகையில், “அரசியல்வாதி சினிமா விழாவிற்கு நான் கலந்து கொண்டது எனக்கு இது புதுசு.எங்கள் மயிலாப்பூர் மண்ணின் மைந்தன் ஸ்ரீகாந்த் தேவா. இசை என்றால் மயிலாப்பூருக்கு தனி இடம் உண்டு. அப்பா மேடையில் பிள்ளைக்கு விழா என்பது மிகப் பெருமையான விஷயம். தேவா அண்ணன் உற்சாகமானவர், உயர்ந்த தன்னம்பிக்கை கொண்டவர். ஸ்ரீகாந்த் தேவா அமைதி புயல்.” என்றார்.

 

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பேசுகையில், “கங்கை அமரன், தேவாவுக்கு முதல் வணக்கம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவுக்கு வாழ்த்துகள். இந்த மாதிரி விழாவில் என்ன பேச வேண்டுமோ அதை சரியாக பேசினார் அசோக். படக்குழுவுக்கு வாழ்த்து. படம் எடுப்பது ஈசி. படத்தை வெளியிடுவதுதான் தற்போது கஷ்டம். படம் எடுக்கும்போது நமக்கு கஷ்டமே தெரியாது‌. ரிலீஸ் இருக்கிறதே மிக வலியானது. பிரசவம் போல.” என்றார்.

 

இயக்குநர் பேரரசு பேசுகையில், “ஸ்ரீகாந்த் தேவா 100-வது படம் என்பது ஷாக் ஆகி விட்டது. வெற்றி என்பது கலைஞனுக்கு அடுத்த விசயம் தான். பாசிட்டிவான எனர்ஜி தான் 100-வது படத்தில் கொண்டு வந்திருக்கிறது. எத்தனை படம் ஹிட் கொடுத்தாலும் ஒரு படம் ஹிட் ஆகவில்லை என்றால், அவன் செல்லாத காசாக ஆகி விடுவான். 2,000 ரூபாய் நோட்டு போல… இது தான் சினிமாகாரனின் வாழ்க்கையும். தடுக்கி விழுந்தால் யாரும் உதவ மாட்டான். இதுதான் சினிமா உலகம். அப்படி ஒரு உலகத்தில் 100-வது படம் கொடுப்பது சாதனை.

 

இளையராஜா எவ்வளவோ படங்கள் கொடுத்தார். அது சாதாரண விசயம்தான். அது பொற்காலம், ஆனால் இந்த காலகட்டத்தில் 100 படம் கொடுப்பது எளிதல்ல. ரஜினி வளர்ந்து வரும் போது ப்ரியா ஹிட், விஜய் வளரும் போது ப்ரியமுடன், ப்ரியமானவளே ஹிட். இந்த படத்தில் 2 ப்ரியா இருக்கிறது அப்போது டபுள் ஹிட். 100-வது படம் என்பதால்  நன்றாக  இசையமைத்திருக்கிறார். விழா நாயகன் என்று சொல்வார்கள். ஆனால் ஸ்ரீகாந்த் தேவா இவ்விழாவின் சாதனை நாயகன். 

 

கங்கை அமரன், தேவா ஆகியோர் சம்பாதித்த சொத்து என்னவென்றால் அவர்களின் படைப்புகளும், பாடல்களுமே.. இதை அவர்கள் அனுபவிக்கிறார்களோ இல்லையோ மக்கள் அனுபவிக்கிறார்கள். சினிமா இசையுடன் மக்கள் பயணிக்கின்றனர். சினிமாவில் எல்லாவற்றையும் விட ஆத்மார்த்தமான விசயம் எது என்றால், இசையமைப்பாளர் தான். அதன் பின் பாடலாசிரியர். எங்கு போனாலும் சினிமா பாடல்கள் தான். இப்போதைய காலகட்டத்தில் இயக்குநர்கள் படங்களில் பாடல் வைப்பதில்லை. அது மிகப்பெரிய ஆபத்து.  இன்றைய தலைமுறைக்கு இளையராஜா, தேவா, கங்கை அமரன் பாடல்கள் இருக்கிறது. நாளைய தலைமுறைக்கு எதை கொடுப்பார்கள்? பின்னணி இசை கூட எதார்த்த மீறல் தான்.  பிறக்கும் போது தாலாட்டு, இறக்கும் போது ஒப்பாரி என எல்லாம் பக்கமும் இசைதான். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்.” என்றார்.

 

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், “100 படத்தில் முதலில் இருக்கும் ஒன்று நான் தான். அந்த முதலுக்கு யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றால், பாண்டியராஜனுக்கு தான். ஐசரி கணேஷ் தயாரிப்பில் பிரபுதேவா நடிப்பில் உருவான படத்துக்கு இசையமைத்தவர், லண்டனில் தான் டியூன் போடுவேன் என்றார். படப்பிடிப்பு 3 நாட்களில் நின்று போனது. ஆனால் இசையமைப்பாளரால் மட்டுமே ஐசரி கணேஷுக்கு 2.5 கோடி நஷ்டம். இசையமைப்பாளர்கள் இதயமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

 

தேவா அவருடைய சம்பளத்தை தந்தையிடம் தான் கொடுக்க சொல்வார். பெற்ற தாயும் தந்தையும் போற்றி வணங்குபவர்கள் கடைசி காலம் வரை நன்றாக இருப்பார்கள். இந்த படத்தில் நாயகர்கள் இருவரை மட்டுமே வைத்து பாடல் எடுக்கப்பட்டது. ஆனால் மற்றவர்களாக இருந்தால் அவர்களுடன் நடனமாட நடனக் கலைஞர்கள் கேட்பார்கள். தற்போது ஒரு படத்தின் பாடலில் 2000 பேர் நடனமாடுகிறார்களாம். தயாரிப்பாளரை காப்பாற்றுங்கள் படம் வளரும். இந்த விழாவுக்கு ஹீரோ ஹீரோயின் வந்திருக்கிறார்கள். பல படங்களின் விழாவுக்கு நடிகர் நடிகைகள் வருவதில்லை. இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகள்.” என்றார்.

 

Priyamudan Priya

 

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “நான் ஒளிப்பதிவாளராக வேண்டும் என்று தான் சினிமா துறைக்கு வந்தேன். ஆனால் இயக்குநராகி விட்டேன். நம் உணர்வுகளுக்கு தகுந்த மாதிரி பாடல் தற்போது எல்லாம் வருவதில்லை. கொடுமை 3-வது நாளில் எல்லாம் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். முதல் நாள் ஹவுஷ்புல் ஆகி விட்டால் வெற்றி என்று சொல்கிறார்கள். திரைத்துறையை தற்போது காப்பாற்றி கொண்டிருப்பது இசை தான். இசை இல்லாமல் தமிழ் சமுதாயம் இல்லை. இசை இல்லாமல் தமிழன் வாழவே முடியாது. அந்த வரிசையில் 100 படங்களுக்கு இசையமைத்தது சாதாரண விசயம் அல்ல. சுஜித்துக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும்.” என்றார்.

 

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசுகையில், “படக்குழுவுக்கு நன்றி. விஜய் படத்துக்கு வாய்ப்பளித்த பேரரசுவுக்கு நன்றி‌. முதல் படம் வாய்ப்பளித்த இயக்குநர் பாண்டியராஜன், தயாரிப்பாளர் கே.ராஜன் ஆகியோருக்கு நன்றி. என்னுடைய காட் பாதர்அப்பா. எனக்கு மியூசிக் ஒன்னுமே தெரியாது. எங்கள் குடும்பத்தை பார்த்து பார்த்து கற்று இப்போது 100-வது படத்தில் வந்து நிற்கிறேன்.  எனக்கு படிப்பு வராது. அப்போது என்ன செய்ய போகிறாய் என அப்பா கேட்ட போது கீபோர்ட் வாங்கித்தர கேட்டேன். வாங்கித் தந்தார். அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்து விட்டேன் என நம்புகிறேன். 

 

என்னுடைய கோபத்தை மனைவியிடம் மட்டுமே காட்டுவேன். வானொலி பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம் ஆகியோர் பாடியது எனக்கு மிகப்பெரிய சந்தோசமாக இருக்கிறது. பிரியமுடன் ப்ரியா படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்.” என்றார். 

 

இசையமைப்பாளர் தேவா பேசுகையில், “இந்த படத்தில் வானொலி பாடலை ஸ்ரீகாந்த் இசையமைத்தது எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. ஸ்ரீகாந்த் 100 படம் அமைந்தது முக்கிய காரணம் கே.ராஜன் தான். ஸ்ரீகாந்த், 

கே.ராஜனை மறக்க கூடாது. விளக்கேற்றி வைத்த தெய்வம். ராஜன் பேசுவது சண்டை போடுவது போலிருக்கும். ஆனால் நியாயமாக இருக்கும். இது வெற்றிப்படம் நிச்சயமாக, படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.” என்றார்.

 

கங்கை அமரன் பேசுகையில், “தொகுப்பாளினி ரேகா நாயரை பார்த்து, உன்னை என்னால் மறக்க முடியாது. ஜாலிக்கு தான் பேசியது. இளையராஜா ஆர்மோனியத்தை தொடுவதற்கு முன்னரே, பேனாவால் பாடல் எழுதி மெட்டு போட சொன்னேன்.

சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற நாடகத்துக்கு இசையமைக்கும் போது, என் காதலுக்காக பின்னணி இசை வாசித்தவர் இளையராஜா. ஸ்ரீகாந்த் 100 முடிந்து 101-வது தொடர வேண்டும். வாணி ஜெயராம் பாடியதை பார்த்து மனம் ஏதோ செய்தது. ஸ்ரீகாந்த் போட்ட பாடல்கள் எல்லாமே மிகச்சிறப்பாக இருக்கிறது.” என்றார்.

 

facebook sharing button
twitter sharing button
email sharing button
linkedin sharing button
sharethis sharing button