April 22, 2024
  • April 22, 2024
Breaking News
  • Home
  • Uncategorized
  • பொம்மை திரைப்பட விமர்சனம்

பொம்மை திரைப்பட விமர்சனம்

By on June 18, 2023 0 187 Views

பந்தயத்தில் ஜெயிப்பதற்கு ஓடத் தெரிந்த குதிரையும், அதைத் திறம்பட ஓட்டுவதற்கு ஏற்ற ஜாக்கியும் கிடைத்தால் போதும். 

இந்தப் படத்தில் அப்படி ஓடும் குதிரையாக எஸ் ஜே சூர்யாவும் அவரை திறம்பட இயக்கும் ஜாக்கியாக இயக்குனர் ராதா மோகனும் கிடைக்க… ரேஸ் எப்படி என்று பார்ப்போம்.

ஆடை விற்பனையகங்களுக்கு பொம்மைகள் சப்ளை செய்யும் நிறுவனத்தில் ஓவியராக இருக்கிறார் எஸ் ஜே சூர்யா. அவரையும் அறியாமல் அவர் உருவாக்கிய ஒரு பொம்மையின் மீது காதல் வயப்பட்டு, அவர் நினைவுகளில் மட்டும் அந்த பொம்மை உயிர் பெற்று காதலிக்கத் தொடங்க… அந்தக் காதல் எங்கு போய் முடிகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை.

நடிப்புக்கு என்று படங்கள் வந்தது ஒரு காலம். இன்றைய சினிமா உலகில் அது இரண்டாம் பட்சமாகிவிட, “இல்லை நாங்கள் இருக்கிறோம்…” என்று ஒரு சில நடிகர்கள் மட்டுமே உறுதி அளித்து மிரட்டும் நடிப்பை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் கொஞ்சம் அதிகமாகவே மிரட்டுபவர் எஸ்.ஜே.சூர்யா. ஹீரோவாகட்டும், வில்லனாகட்டும் எந்த வேடம் கிடைத்தாலும் தன்னுடைய ஏரியாவில் ரணகளம் செய்துவிடும் சூர்யாவுக்கு இந்தப் படத்தின் பாத்திரம், அப்படி அமைந்துவிட்ட ஒரு சாத்தியம்.

பொம்மையின் காதலில் உருகி மருகுவதாகட்டும், அதைப் பிரிந்து உயிருள்ள பொம்மையாய் உருகுவதாகட்டும், பின்னர் காதலியை கண்டெடுத்து அங்கேயே வாழ்க்கையை அர்ப்பணிப்பதில் ஆகட்டும், காதலிக்கு ஒன்று என்றால் கடோத்கஜனாக மாறுவதில் ஆகட்டும், நவரசம் தாண்டியும் நடிப்பில் பிரகாசிக்கிறார் சூர்யா.

“இந்த உடம்புக்குள்ள இப்படி ஒரு வீரியமா..?” என்கிற அளவில் அமைதியான சுபாவத்துடன் திரியும் அவர், காதலிக்கு யாரேனும் துன்பம் இழைக்கும் போது வானத்துக்கும் பூமிக்கும் ஆக எகிறி குதித்து, உயிர் போகும் வரை அடிக்கும் அந்த அதகளம்… ஆர்ப்பட்டத் தாண்டவம்..!

கைது செய்த இன்ஸ்பெக்டரிடம் தன் காதலை மென்மையாக ஆரம்பித்து, வன்மையாக ஓட்டி, வண்ணமாக விவரித்து, “நந்தினி என் தாய்…” என்று திண்ணமாக முடிக்கும் அந்த ஐந்து நிமிட ஒற்றை ஷாட்… அசுரத் தனமான நடிப்பு..! ஆங்கிலப் படங்களைக் குறி வைத்தால் தன் நடிப்புக்கு ஆஸ்கர் கதவைத் தட்டலாம் எஸ்.ஜே.எஸ்.

வளர்ந்த பொம்மையாக வரும் பிரியா பவானி சங்கரின் நடிப்பில் பொம்மைத்தனம் தெரிய வேண்டும் என்று இயக்குனர் சொல்லிவிட்டார் போலிருக்கிறது. 3d அனிமேஷன் பொம்மை போல் அமைந்த அவரது நடிப்பை ‘வேற லெவலி’ல் ரசிக்கலாம்.

இதுவரை பிரியா பவானி சங்கரிடம் பார்க்காத சின்ன சின்ன குடும்பத்தனமான எக்ஸ்பிரஷன்கள் ராதா மோகனின் கைவண்ணமாக இருக்கக்கூடும்.

இந்த இருவர் தாண்டி வரும் மற்ற பாத்திரங்கள் எல்லாமே துணைப் பாத்திரங்கள்தான் என்றாலும் சாந்தினி தமிழரசனின் பாத்திரம் மூன்றாம் இடத்தில் ரசிக்க வைக்கிறது.

சூர்யாவை மென்மையாக காதலித்து அவர் பக்கம் இருந்து காதல் தூது வரும் என்று எதிர்பார்த்து நிற்கும் சாந்தினியின் பாத்திரத்தை இன்னும் கூட ஆழமாக சித்தரித்திருக்கலாம்.

அம்மாவின் அன்பு அகாலமாகக் கருகிப் போகும் நிலையில் சிறுவயது தோழியின் அன்பால் அம்மாவை மீட்டெடுக்கும் அந்த எபிசோட் சூர்யாவின் பாத்திரத்துக்கு வலு சேர்க்கிறது. ஆனால் அந்தச் சிறுமி என்ன ஆனாள் என்பதே கடைசி வரை தெரியவில்லை என்பது நெருடல்.

ஆதரிக்க ஆளே இல்லாததால் எஸ்.ஜே.சூர்யா அப்படி ஆகிப்போனார் என்கிறார் மருத்துவர். அப்படி இருக்கையில், தன்னிலை இழக்கும் சூர்யாவின் பிரச்சனை அறிந்து யார் அவருக்கு மருத்துவ சிகிச்சை எடுக்க உதவி செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. 

அதேபோல் சூர்யாவின் தங்கை, திருமணம் ஆகி ஊரில் இருப்பதும் தாய்மாமன் என்கிற அளவில் அண்ணன் வந்துதான் தன் மகளுக்கு காது குத்த வேண்டும் என்று நினைப்பதாகவும் காட்டி இருப்பது பாத்திரப் படைப்பில் முரண். 

இவற்றில் எல்லாம் ராதாமோகன் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். அவரது வெற்றிப் படஞகலில் விஜி யின் வசனஙஅல் தவிர்க்க முடியாத காரணியாக இருக்கும். இதில் அது மிஸ் ஆனதும் ஒரு குறை.

மற்றபடி இசையில் யுவன் சங்கர் ராஜா இன்னொரு ஹீரோவாக இருக்கிறார். அப்பாவின் தெய்வீக ராகம் பாடலை தீம் மியூசிக் ஆக வைத்துக் கொண்டாலும், அவர் இசைத்த ‘ யாருமில்லாத மாமலை…’ பாடல் காதலின் ஆழததைக் கவித்துவமாக சொல்கிறது.

ஒளிப்பதிவாளர் பங்கும் சிறப்பு.

இருந்தாலும் ஒரு கனவின் சுகத்தை தந்திருக்கும் இந்தப்படம் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.

பொம்மை – காதல் வீரியம்..!