April 3, 2026
  • April 3, 2026
Breaking News
  • Home
  • Uncategorized
  • லீடர் திரைப்பட விமர்சனம் (3.75/5)
April 4, 2026

லீடர் திரைப்பட விமர்சனம் (3.75/5)

By 0 16 Views

இவ்வளவு காலம் இந்த அருமையான தலைப்பை எப்படி தமிழில் விட்டு வைத்திருந்தார்கள் என்று தெரியவில்லை. 

அதை மிகச் சரியாக பிடித்து மிகச் சரியான ஒரு ஹீரோவுக்கு பொருத்திக் கதை செய்து விட்டார் இயக்குனர் ஆர்.எஸ். துரை செந்தில் குமார். 

நம்ம லெஜன்ட் சரவணன்தான் லீடர் என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் கடந்த படம் போல் அசத்தலாக வந்தோம், ஆடினோம்… பாடினோம், சண்டை இட்டோம் என்று இல்லாமல் இந்த முறை வலுவான ஒரு கதையுடன் களம் இறங்கி இருக்கிறார் லெஜண்ட். 

ஒரு பக்கம் சர்வதேச சந்தையில் வெகுமதிப்புள்ள வெடிப்பொருள்கள் ஒரு கண்டெய்னரில் துறைமுகத்தில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. அதைக் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வரும் காவல் தெய்வமாக சால்ட் என்ற அசால்ட் பார்ட்டி இருக்கிறார். 

அதை மோப்பம் பிடித்தவர்களை எல்லாம் அவர் போட்டுத் தள்ளிக் கொண்டிருக்க இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா மட்டும்  அந்த வெடிப்பொருளை கைப்பற்றியே தீர்வது என்று அதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறார். 

ஆனால், போலீஸ் துறையிலேயே சதிக்கு உறுதுணையாக மேல் அதிகாரிகள் இருக்க தனிப்பட்ட ஆணட்ரியாவால் ஒன்றையும் செய்து முடிக்க முடியவில்லை. 

எனவே அதற்கு குறுக்கு வழி ஒன்றை கண்டுபிடித்து துறைமுகத்துக்குள் சால்டின் கார்களை சர்வீஸ் செய்வதற்காக போய்வரும் டிரைவர் லெஜெண்டை பிடிக்கிறார். 

தான் உண்டு தன் பெண் குழந்தை உண்டு… என்று மனைவியின்றி வாழ்ந்து வரும் லெஜன்ட் யார் வம்புக்கும் தும்புக்கும் போகாமல் இருப்பதுடன் ஆண்ட்ரியாவுக்கு உதவி செய்ய மறுக்கிறார். 

ஆனால் ஒரு சதி வலை பின்னி அவரை இதற்குள் ஆண்ட்ரியா கொண்டு வர முயற்சிக்க, அதன் மூலம் சால்ட்டுக்கு மட்டுமல்லாமல் சர்வதேச தாதா சந்தோஷ் பிரதாபின் கோபத்துக்கும் ஆளாகிறார் லெஜன்ட் சரவணன். 

இந்த பெரும் முதலைகளின் கோரப்பற்களில் இருந்து லெஜெண்டும் அவர் மகளும் வாழ முடிந்ததா? சாமானியன் லெஜன்ட் அவர்களை சமாளிக்க முடிந்ததா..? என்பதெல்லாம் மீதிக் கதை.

வாசலில் கோலம் போடுவது தொடங்கி மகளை பள்ளியில் கொண்டு விடுவது, அழைத்து வருவது என்றில்லாமல் இறநத மனைவியின் படத்தை ஏஐ செய்து மகளுடன் பேச வைத்து சந்தோஷப்படுத்துவது வரை ஒரு அன்பான தந்தையாக தெரிகிறார் லெஜெண்ட் சரவணன். 

அதேசமயம் ஒரு வெடிகுண்டுக்குள் இருக்கும் மருந்தை உரசினால் என்ன ஆகுமோ அப்படி வெடிக்க ஆரம்பிக்கிறார் அவரது பாசத்தை உரசுவோர் மீது. 

ரஜினிக்கு பெரும் புகழ் தந்த பாட்ஷா மாதிரியான வேடத்தில் சரவணனை பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவரது ஃப்ளாஷ்பேக் தெரிய வரும்போது படம் தீப்பற்றிக் கொள்கிறது.

பெரிய ஹீரோக்களே நடிக்க தயங்கும் பாத்திரம் இது. காரணம் தன் கையாலேயே சொந்த மனைவியை கொல்ல நேருவது, ஆதரவுற்றோர் விடுதியில் மகளைப் பார்த்து நான்தான் உன் அப்பா என்று சொல்ல முடியாமல் தவிப்பது என்று அதிகபட்ச வோல்டேஜ் கொண்ட சென்டிமென்ட் பாத்திரம் அது.

அதை திறமையுடன் சமாளிக்கும் சரவணன், ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் மகளை பார்க்க விடாமல் காவலர்கள் துரத்தும்போது அங்கே ஆசிரியையாக இருக்கும் அம்ரிதா ஐயரின் காலில் விழுந்து மன்றாடும்போது நடிப்பிலும் முத்திரை பதிக்கிறார். 

மற்ற காட்சிகளிலும் எங்கெங்கே எவ்வளவு உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்பதை மட்டும் அவர் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும். 

அவருக்கு ஜோடியாக வரும் பாயல் ராஜ்புத் துக்கு சிறிய வேடம் என்றாலும் அழுத்தமான பாத்திரம் அவருடையது.

அவர்களுடைய குழந்தையாக வரும் சிறுமி இயலும் இயல்பான நடிப்பில் கவர்கிறாள்.

உக்கிரமான வில்லனாக சந்தோஷ பிரதாப்புக்கு இதில் பதவி உயர்வு கிடைத்திருக்கிறது. இங்கே இருக்கும் உளவாளிகளை எங்கோ இருந்து கொண்டு பஸ்பமாக்கும் அவர் தங்கள் அருகிலேயே இருக்கும் சதிகாரனையும் சடுதியில் கொன்று ஆரம்பத்திலேயே மிரட்டி விடுகிறார். 

காவல்துறை உயரதிகாரியாக வரும் ஷாம் அந்த வேடத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். அவர் முயற்சியில்தான் சரவணனின்  இன்னொரு முகம் வெளிவருகிறது.

ஆண்ட்ரியாவின் தைரியமும் பாத்திரமும் போலீசுக்கு பெருமை சேர்க்கிறது. ஆனால் சரவணா லைம்லைட்டுக்கு வந்ததும் ஷாமும் ஆண்ட்ரியாவும் பின்னுக்குப் போய் வடுகிறார்கள்.

ஆண்ட்ரியாவின் அப்பாவாக வரும் லால் நல்லவரா கெட்டவரா என்கிற சந்தேகம் நமக்கு எழும் போது, மிகச் சரியாக அவரே வாயைத் திறந்து அந்த சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறார். 

காமெடியன்கள் இல்லாத குறையைத் தீர்த்து வைக்கிறார்கள் விடிவி கணேஷ், ஆதித்யா கதிர் மற்றும் அறந்தாங்கி நிஷா.

சால்ட் ஆக வரும் பாகுபலி பிரபாகரன் உருவத்திலேயே மிரட்டுகிறார்.

இவர்களுடன் ஐஸ்வர்யா, மரியம் ஜார்ஜ், படவா கோபி, அசோக் பாண்டியன், சோபன்பாபு, குமார் நடராஜன், விஜயலட்சுமி உள்ளிட்டோர் பிற பாத்திரங்களை ஏறகிறார்கள்.

வெங்கடேஷ் எஸ்-சின் ஒளிப்பதிவும், பிரதீப் இ ராகவ்வின் படத்தொகுப்பம் படத்தின் பரபரப்பை பல மடங்கு கூட்டி இருக்கின்றன. 

அதற்கு ஜிப்ரான் வைபோதாவின் இசையும் தோதாக ஒலித்து இருக்கிறது.

அருணகிரிநாதரின் ‘முத்தைத்தரு பத்தித் திருநகை…’ படம் முடிந்தும் பல மணி நேரம்  காதுகளிலேயே ஒலித்துக் கொண்டிருக்கிறது

எழுதி இயக்கியிருக்கும் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் ஒரு மாஸ் ஹீரோவுக்கான கதையை லெஜன்ட் சரவணனை நம்பி எடுத்திருப்பது அவரது தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. 

ஒரு சென்டிமென்ட் உடன் கூடிய கதையை இத்தனை பெரிய ஆக்ஷன களத்தில் சொல்லியிருப்பது எல்லா கிளாஸ் ரசிகர்களையும் கவரும். 

வலது பக்க இதயம், பதட்டப்பட்டு விட்டால் பார்க்கும் எல்லா குழந்தையும் தன் குழந்தை போலவே தோன்றும் மனநிலை என்று ஏகப்பட்ட மெடிக்கல் மிராக்கல்களும் படத்தில் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாவற்றையும் இணைத்து கதையின் மேல் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியிருக்கிறார் துரை செந்தில் குமார். 

லீடர் – லீடிங்கில்..!

– வேணுஜி