வாங்கிய கடனுக்காக சொத்துகளை இழப்பது ஒரு வகை. ஆனால், வாங்காத கடனுக்காக சொத்துகளை இழக்க நேர்ந்தால்..?
அப்படித்தான் ஆகி விட்டது நாயகன் விதார்த்துதுக்கு. நாடு முழுதும் நடக்கும் மோசடிதான் இது.
என்பதை விவசாயிகளின் வாழ்வியலாக மட்டும் இன்றி, அவர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளில் மிக முக்கியமான பிரச்சனை பற்றியும், அதன் பின்னணியில் இருக்கும் பெரும் மோசடி கும்பல் பற்றியும் தோலுறிக்கும் விதமாக சொல்வதே ‘மருதம்’.
நாயகனாக நடித்திருக்கும் விதார்த், வழக்கும் போல் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். நிலத்தை இழந்துவிட்டு வருந்துவது, அதே நிலத்தை மீட்க சட்ட ரீதியிலான போராட்டம் என்று பாதிக்கப்பட்டவர்களை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார். பல இடங்களில் வசனம் இல்லை என்றாலும், தனது எக்ஸ்பிரஷன்கள் மூலமாகவே தன் மன ஓட்டத்தை நேர்த்தியாக வெளிப்படுத்தி தனி நபராக படத்தை தன் தோளில் சுமந்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ரக்ஷனா, தோற்றத்திற்கு பொருந்ததாத வேடமாக இருந்தாலும், வசன உச்சரிப்பு, உடல் மொழி மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருப்பவர், பல காட்சிகளை மிக சாதாரணமாக கையாண்டிருக்கிறார். எந்த இடத்திலும் ஏற்றம் இறக்கம் இன்றி, அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான ரியாக்ஷன், நடிப்பு என்று பயணித்திருக்கிறார்.
சிறிய வேடம் என்றாலும், நெஞ்சில் ஈரம் உள்ள மனிதர்களை நினைவுப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்து பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார் அருள்தாஸ்.
நகைச்சுவை கதாபாத்திரமாக அறிமுகமாகி சில இடங்களில் சிரிக்க வைக்கும் மாறனின் இறுதி முடிவு அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது.
வங்கி மேலாளர் வேடத்தில் நடித்திருக்கும் சரவண சுப்பையா, ஒரு சில காட்சிகளில் வந்தாலும் வழக்கறிஞராக மக்கள் மனதில் நிற்கும் இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் ஆகிய இருவரும் பொருத்தமான தேர்வு.
இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்களில் மண்ணின் வாசம் வீசுகிறது. பின்னணி இசையில் கிராமத்து காற்றின் இனிமையும், கதை மாந்தர்களின் இன்னல்களின் வலியும் தெரிகிறது.
ஒளிப்பதிவாளர் அருள் கே.சோமசுந்தரம், கிராமத்தின் இயல்பான அழகையும், இயல்பான கிராம மக்களின் முகங்களையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
எளிமையான கதையாக இருந்தாலும், அதை ஒரு வாழ்வியலாகவும், நீதிமன்ற வழக்காடல் கதையாகவும், ரசிக்கும் வகையில் காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பி.சந்துரு.
விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விவசாயிகள் பலவிதங்களில் பாதிக்கப்படுவதும், அதனால் பலர் உயிரிழப்பதும் நாம் செய்திகளாக படித்து விட்டு கடந்து போவதுண்டு. ஆனால், அவர்களுக்கே தெரியாமல், அவர்களின் ஆதாரமான அவர்களது நிலம் அவர்களிடம் இருந்து பறிக்கப்படும் மிகப்பெரிய மோசடி பற்றி தோலுறிக்கும் முயற்சியாக எழுதி இயக்கியிருக்கிறார் வி.கஜேந்திரன்.
விவசாயிகளுக்கான திட்டங்கள் மற்றும் அவர்களது சலுகைகளை தங்களது சுயநலத்துக்காக தவறாக பயன்படுத்தும் அரசு அதிகாரிகள் கொண்ட மோசடி கும்பல், அவற்றின் மூலம் அதே விவசாயிகளை எப்படி சுரண்டுகிறது, என்பதை மிக தைரியமாகவும், அதிர்ச்சியளிக்கும் விதமாகவும் சொல்லியிருக்கும் இயக்குநர் வி.கஜேந்திரன், அத்தகைய மோசடியில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நல்லது ஒரு தீர்வையும் சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதையாக இருந்தாலும், அதை திரைப்பட மொழிக்கான அம்சங்களோடு சொல்லியிருக்கும் இயக்குநர் நீதிமன்ற வழக்காடல் காட்சிகளை சுவாரஸ்யமாக கையாண்டதோடு, பல விசயங்களை சுருக்கமாக சொல்லி திரைக்கதையை தொய்வின்றி நகர்த்தி சென்றிருப்பது படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
தலைப்புக்கு ஏற்ப வயலும் வயல் சார்ந்த பகுதிகளையும் சுற்றி படமாக்கப்பட்டிருக்கும் இப்படம், விவசாயிகளின் சோக கதையை சொல்லாமல், அவர்கள் சுரண்டப்படும் முக்கியமான மோசடி பற்றியும், அதில் இருந்து மீள்வதற்கு அல்லது எச்சரிக்கையோடு இருப்பதற்கு நல்லதொரு வழியாகவும், பார்த்து ரசிக்க கூடிய நல்ல பொழுதுபோக்கு படமாகவும் இருக்கிறது.
மொத்தத்தில், ‘மருதம்’ விவசாயிகள் மட்டும் அல்ல, அனைத்து மக்களும் பார்க்க வேண்டிய படம்.