September 16, 2026
  • September 16, 2026
Breaking News
  • Home
  • Uncategorized
  • தி டார்க் ஹெவன் திரைப்பட விமர்சனம்
September 16, 2026

தி டார்க் ஹெவன் திரைப்பட விமர்சனம்

By 0 12 Views

இந்தத் தலைப்பு அறிமுகமான நாளிலிருந்தே நிறைய எதிர்பார்ப்புகளைக் கிளறி விட்டது. அப்படி இயக்குனர் பாலாஜி கிளறிய எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட்டனவா என்று பார்ப்போம்.

ஹாரர் வகை படம் போல் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து கதை தொடங்குகிறது. அப்போது வாழ்ந்த தீர்க்கதரிசியான இளம் பெண் மீது ஊர்மக்கள் வைத்த மரியாதையைக் குறைக்கும் நோக்கில் அவதூறு பரப்பி அவள் உயிருக்கே உலை வைத்த தசரதன் என்கிற தீய எண்ணம் கொண்டவன் அதன் பிறகு கொடூரமாக இறந்து போகிறான்.

அதன் பிறகு ஒவ்வொரு ஏழு வருடத்திலும் அந்த மலை கிராமத்தில் மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தசரதனுடைய வம்சா வழியில் வந்த ரித்விகா, இப்போது அங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த ஊருக்கு இன்ஸ்பெக்டராக வந்தவர், ரித்திகாவை மணக்க அவரும் கொடூரமாக இறந்து போகிறார்.

அதற்குப் பிறகு யாரும் அங்கு இன்ஸ்பெக்டராக வர தைரியம் இல்லாத நிலையில் நாயகன் சித்து தனது இளம் மனைவி தர்ஷிகா மற்றும் கைக்குழந்தையுடன் அந்த ஊருக்கு வருகிறார். வரும்போது மேற்படி கதை மற்றும் அமானுஷ்யங்களைத் தெரிந்து கொள்கிறார். 

அதே நேரம் கேரளாவில் இருந்து வயலின் இசைத்து கொலை செய்யும் ஒரு சைக்கோ கொலைகாரன் தப்பி இந்த ஊருக்குள் வந்திருக்கும் தகவல் கிடைக்க, ஊர் மக்களை கவனமாக இருக்கச் சொல்லி எச்சரிக்கிறார்.

அதையும் மீறி அடுத்தடுத்து அந்த சைக்கோ கொலைகாரன் மலையும் மலை சார்ந்த அந்த கிராமத்தை கொலையும் கொலை சார்ந்த கிராமமாக மாற்ற, அதன் விளைவாக பதவியைப் பறிகொடுக்கிறார் சித்து.

அத்துடன் நில்லாமல் மர்மமான முறையில் அவரது மனைவி தர்ஷிகாவும் தற்கொலை செய்து கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் அந்த சைக்கோ கொலைகாரனை கேரள போலீசார் சுட்டு கொன்று விட்டதாக தகவல் வந்தாலும் அதை சித்து நம்ப தயாராகாத நிலையில் நிகழ்ந்த மரணங்கள் பற்றியும் அந்த சைக்கோ கொலைகாரன் யார் என்பது பற்றியும் நிறைய கேள்விகள் ஏழ அவையெல்லாம் தீர்க்கப்பட்டனவா என்பதுதான் மீதிக் கதை.

வழக்கமாக நடிகர் வெற்றி ஏற்கும் கதை போல தோன்றுகிறது. பெரும்பாலும் வெற்றி நடிக்கும் கதைகள் ஏகப்பட்ட திருப்பங்களையும், குழப்பங்களையும் கொண்டிருக்கும். அதை எதிர்கொள்ளும் சந்தேக முகக் குறியை மட்டுமே வைத்துக்கொண்டு முழுப் படத்திலும் வெற்றி நடித்து முடித்து விடுவார். 

கிட்டத்தட்ட இந்த படத்தில் நாயகன் வேடத்தை ஏற்றிருக்கும் சித்துவும் அதையேதான் மேற்கொண்டு இருக்கிறார். 

அவருடைய மனைவியாக வரும் தர்ஷிகாவுக்கு அழகான முகமும், உடற்கட்டும். அதனால் அவர் அகால மரணம் அடைவதை நம்மால் ஏற்க முடியவில்லை. 

தசரதன் வழிவந்த ரித்விகாவுக்கு படத்தில் முக்கியமான பாத்திரம். அவர் நினைத்தது எதுவுமே வாழ்க்கையில் நடக்காமல் போக ஒரு கட்டத்தில் அவர் மீது பரிதாபம் ஏற்படுகிறது. 

சித்துவுடனேயே பயணப்படும் கான்ஸ்டபிள்  பிரதீப்புக்கும் நல்ல உயரமும் உடற்கட்டும் அமைந்து அவரது பாத்திரத்தை தூக்கி நிறுத்துகிறது. 

இவர்களுடன் வேலராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்யா, சாப்ளின் பாலு உள்ளிட்டோர் நம் பதட்டத்தை அதிகப்படுத்த உதவியிருக்கிறார்கள். 

இதுபோன்ற சஸ்பென்ஸ் திரில்லர்களில் ஒவ்வொரு கட்டத்திலும் நம்முடைய சந்தேகம் ஒவ்வொரு பாத்திரத்தின் மேல் திரும்ப வைக்கும் திரைக்கதை உத்தி இதிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் கடைசியில் இவர்தான் கொலையாளி என்று ஒரு முடிவை இயக்குனர் சொல்லும்போது அதை நாம் எந்த சந்தேகமும் இன்றி திட்டவட்டமாக ஏற்கும் வகையில் அந்த திரைக்கதை நிறைவு பெற வேண்டும். 

ஆனால் இந்த படத்தில் அப்படி ஒரு முடிவுக்கு வந்தாலும் அதற்கு பிறகுதான் நம்முள் நிறைய கேள்விகள் எழுகின்றன. அந்தக் கேள்விகளை முதலிலேயே இயக்குனர் தனக்குள் கேட்டுக் கண்டு அவற்றை தீர்க்க முயற்சித்திருக்கலாம்.

சஸ்பென்ஸ் படம் என்பதால் அந்த கேள்விகள் என்ன என்பதை வெளிப்படுத்த முடியாமல் இருக்கிறது. 

அதேபோல் அமானுஷ்யமாக ஆரம்பிக்கும் கதை சஸ்பென்ஸ் மர்டர் மிஸ்டரியாக முடிவதிலும் எந்தக் கோர்வையும் இல்லை.

பெரும்பாலும் இருளில் கதை நடந்தாலும் அதற்கேற்ற ஒளி அமைப்புடன் ஒளிப்பதிவு செய்து இருக்கும் மணிகண்டன் பிகே பாராட்டுக்குரியவர் ஆகிறார். 

சஸ்பென்ஸ் திரில்லருக்கேற்ற பதட்டத்தையும் பயத்தையும் நமக்குள் விதைத்திருக்கும் இசையமைப்பாளர் சக்தி பாலாஜியும் பாராட்டுக்குரியவர்தான்.

படத்தின் ஆரம்பத்தில் சொல்லப்படும் கதைக்கும் படத்தின் முடிவுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருந்திருந்தால் திரைக்கதை இன்னும் வலுப்பெற்று இருக்கும். 

சைக்கோ கொலைகாரன்தான் கொலைகளை நிகழ்த்துகிறான் என்று இடையில் அழுத்தமாக தெரிவித்து விடுவதால் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட அமானுஷ்ய கதை அங்கேயே மரணித்து விடுகிறது.

ஆனால் லாஜிக் எல்லாம் பார்க்காமல் ஒரு  சஸ்பென்ஸ் திரில்லரை எதிர்பார்த்து வருபவர்களை இயக்குனர் பாலாஜி நிச்சயம் ஏமாற்றவில்லை.

தி டார்க் ஹெவன் – வயலன்ட் வயலினிஸ்ட்..!

– வேணுஜி