அறிமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமியின் இந்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை தற்போது தமிழ் சினிமாவே கொண்டாடி வருகிறது. அந்த அளவுக்கு படம் நன்றாக இருக்கிறது.
அதே சமயம், படத்திற்கு சரியான முறையில் விளம்பரம் செய்யாததால், மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலிலும் மிகப்பெரிய சாதனையை படைக்க வேண்டிய படம் தற்போது தடுமாறுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், படத்தை பாராட்டியதோடு, மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். துல்கர் சல்மான், ரிது வர்மா, கெளதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். படத்தை வாங்கி வெளியிட்ட வியோகாம் 18 நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மட்டும் பங்கேற்கவில்லை, மாறாக அவரது வீடியோ பதிவு ஒன்று நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, “படத்தை பாராட்டிய பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, படத்தை பார்த்துவிட்டு அவரை தொடர்பு கொண்டு வாழ்த்திய திரையுலக நண்பர்களுக்கும், அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தவர், இறுதியாக, இரண்டு போஸ்டர் மட்டுமே ஒட்டப்பட்ட ஒரு படம் என்றால் அது இந்த படமாகத்தான் இருக்கும். அப்படி இருந்தும் இந்த படத்தை வெற்றியடைய செய்தவர்களுக்கு நன்றி, என்று தெரிவித்தார். அதாவது, படத்தை வாங்கிய மும்பை கார்ப்பரேட் நிறுவனமான வியோகாம் 18 படத்தை சரியான முறையில் விளம்பரம் செய்யவில்லை, என்பதை அவர் மறைமுகமாக கூறி, தனது வருத்தத்தை பதிவு செய்தார்.
இயக்குநர் கெளதம் மேனன் பேசுகையில், “சில திரைப்படங்களுக்கு மட்டும் தான் தியேட்டரில் மேஜிக் நடக்கும், அதற்காக தான் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த மேஜிக் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்கு நிகழ்ந்திருக்கிறது. நானே தியேட்டருக்கு சென்று நான்கு முறை இந்த படத்தை பார்த்தேன். இதில் நான் நடித்ததற்கு காரணம் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியின் எதார்த்த நிலை தான். மனதில் உள்ளதை அப்படியே பேசுபவர் அவர். அதனால் தான் நான் நடித்தேன். பல படங்களில் கெளரவ தோற்றம் போல நான் நடித்திருக்கிறேன். ஆனால், முழுமையாக ஒரு கதாப்பாத்திரத்தில் என்னால் நடிகக் முடியும் என்று நான் என்றுமே நம்பியதில்லை. ஆனால், எனக்கு அந்த நம்பிக்கையை முதலில் கொடுத்தவர் விஜய் மில்டன் தான். அவரது ‘கோலி சோடா 2’ படத்தில் என்னை நடிக்க வைத்து, என்னாலும் ஒரு முழுமையான நடிகராக நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தார்.” என்றார்.
துல்கர் சல்மான் பேசுகையில், “ஒரு படம் வெற்றி பெற்றால் தான் அப்படத்தில் இடம்பெற்ற அனைவரும் அடுத்தக் கட்டத்திற்கு போக முடியும். இவருக்கு நிறைய காட்சிகள் இருக்கிறது, எனக்கு இல்லை என்று பார்த்து நடித்தாலும், படம் வெற்றி பெற்றால் தான், மற்றவை எல்லாமே வெற்றியாகும். அந்த வகையில், இந்த படத்தின் வெற்றியால் தான் நாங்கள் இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்த படத்தை சிறப்பாக விளம்பரம் செய்யுங்கள், விட்டு விடாதீர்கள், என்று பத்திரிகையாளர்கள் என்னிடம் கூறினார்கள். இப்படியும் ஒரு படம் மீது அக்கறை காட்டுவார்களா, என்று நான் வியந்துவிட்டேன். அவர்களின் படம் போல இந்த படத்தை கொண்டாடுகிறார்கள், இந்த படம் பெரிதாக ஜெயிக்க வேண்டும்.” என்று கூறியவர், சற்று கண்கலங்கியவாறும் பேசினார்.
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ துல்கர் சல்மானின் 25 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.