வழக்கமான படமாக இல்லாமல் சற்று வித்தியாசப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம்.
இந்த முயற்சியை சாத்தியப்படுத்தி இருக்கும் டி.ஆண்டனி படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், எடிட்டர் என்று முக்கிய அத்தனை பொறுப்புகளையும் ஏற்று இருக்கிறார்.
பொதுவாக இதுபோன்ற பல முயற்சிகளை ஏற்பவர்கள் அதில் முழுமை பெறாமல் மாட்டிக் கொள்வார்கள். ஆனால் ஆண்டனி அவர்களிடத்திலிருந்தும் வித்தியாசப்பட்டு கவனம் பதிக்கிறார்.
சிறுவயதில் அம்மாவை இழந்து அப்பாவின் கவனிப்பும் இல்லாமல் வளர்ந்து இளைஞனாகி இருக்கும் ஆண்டனி, இரண்டு நண்பர்களுடன் மட்டும் நெருக்கமாக இருக்கிறார்.
சதா மது, சிகரெட் மூலம் மன அமைதி பெறும் அவர் இவற்றையெல்லாம் தாண்டி தினமும் இரவில் ஒரு பாலியல் தொழிலாளியை அழைத்துக் கொண்டு வந்து மனம் விட்டுப் பேசும் வழக்கத்தில் இருக்கிறார்.
அப்படி ஒரு நாள் இரவு அவரது அழைப்பின் பேரில் வரும் பெங்காலி பெண்ணான மதுமிதா தாஸ் ஆண்டனியின் மனதுக்கு மிகவும் நெருக்கமாகிறார். மதுமிதா தாசுக்கும் ஆண்டனியை பிடித்து போய்விட, இருவரும் ஒரு கட்டத்தில் காதல் வயப்படுகிறார்கள்.
ஏற்கனவே திருமண வாழ்க்கை தோல்வி கண்டு ஒரு பெண் குழந்தையை வெளியூரில் தங்க வைத்து படிக்க வைத்துக் கொண்டிருக்கும் மதுமிதா தாஸ், ஆண்டனியை திருமணம் செய்து கொண்டு புது வாழ்க்கை தொடங்க விரும்புகிறார்.
இந்த எண்ணம் நிறைவேறியதா அவர்களது காதல் கைகூடியதா என்பதுதான் மீதிக் கதை.
கேட்பதற்கு சாதாரணமாக இருந்தாலும் நமது வாழ்க்கையை அப்படியே கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போல அத்தனை படு இயல்பாக லைவ் சவுண்டுடன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் ஆண்டனி.
கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் அவர் தனது முகம் மற்றும் உடல் மொழிக்கேற்றவாறு தன் பாத்திரத்தை வடிவமைத்துக்கொண்டது ஆகப்பெரிய விஷயம்.
அந்த பாத்திர வடிவமைப்பு அவர் மீது ஒரு கட்டத்தில் நமக்கே எரிச்சலை தருகிறது. ஆனால் அதுதான் அந்தப் பாத்திரத்தின் வெற்றி. அந்த எரிச்சல் மதுமிதா தாசை தாக்கும்போதுதான் அவர்களுக்குள் பிரச்சனை எழுகிறது.
அறிமுகமாகும் படத்திலேயே ஒரு பாலியல் தொழிலாளியாக நடிப்பது எல்லா பெண்களுக்கும் சாத்தியமில்லை. ஆனால் அதை துணிச்சலாக ஏற்று நடித்திருக்கும் மதுமிதா தாஸ் பாராட்டுக்குரியவர்.
அவரது பாத்திரப்படைப்பு கூட வித்தியாசமாக இருக்கிறது. வாழ்க்கையில் வருமானத்துக்காக மற்ற ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டாலும் தன்னுடைய சுய விருப்பத்தின் பேரில் மட்டுமே தன்னை முத்தமிட அனுமதிக்கும் அவரைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
இருவர் நடிப்பும் வழக்கமான நடிகர்கள் போல் இல்லாத நாம் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் நபர்களை போலவே நடித்திருப்பது படத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கிறது.
ஆண்டனியின் நண்பர்களாக நடித்திருக்கும் இருவரும், அவர்களது இணையர்களும் கூட நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
ஆண்டனியின் தந்தையாக நடித்திருக்கும் ஜீவா ரவி, பெரிய அளவில் கதையில் ஒட்டவில்லை.
இயக்குனரின் மன ஓட்டம் புரிந்து இயல்பாக இருக்கும் வெளிச்சத்திலேயே… முக்கியமாக இரவிலும் கூட படமாக்கி இருக்கும் ஒளிப்பதிவாளர் பியேட்ரோ வில்லானியின் திறமை இருளிலும் பளிச்சிடுகிறது.
ஜெய்கர் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் ஆகியோரது இசையில் அமைந்த பாடல்கள் கூட படத்தின் தன்மை உணர்ந்து இசையமைக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோல் ஜோயி ரெடாவின் பின்னணி இசையும் கலை நேர்த்தியுடன் இருக்கிறது.
கதை எழுதி இயக்கி நாயகனாகவும் நடித்து எடிட்டிங்கை யும் கவனித்திருக்கும் டி.ஆண்டனி, இத்தனை பொறுப்புகளையும் திறம்பட சமாளித்து இருப்பது ‘வெல்டன்..!’
ஆனால் ஒரு விதத்தில் அதுவே அவருக்கு பலமாகவும் அமைந்திருக்கிறது ஏனென்றால் எல்லா விஷயங்களிலும் ஒருமித்த கருத்துடன் மற்ற பொறுப்புகளை அவர் ஏற்று திறமையுடன் பயணித்திருக்கிறார்
இயல்புக்கு நெருக்கமான படம் என்பதால் தமிழ் மொழி சரிவர தெரியாத மதுமிதா தாசும், அவருடன் அவரிடம் பேசியே கட்டாயத்தில் ஆண்டனியும் அவ்வப்போது ஆங்கிலத்தில் பேசிக் கொள்கிறார்கள். அது கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது.
அதேபோல் அங்கங்கே பேசப்படும் அருவருப்பான விஷயங்களும் படத்தின் குறையாகதான் பார்க்கப்படும்.
பாலியல் தொழிலாளியும் ஒரு பெண்தான் என்கிற அளவில் மதுமிதா தாசின் முதல் திருமண பநதம் முடிவுக்கு வந்த பின், பல ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டாலும் அவருடைய ஆழ்மனது ஒரு புனிதமான காதலுக்கு ஏங்குவதாக அமைக்கப்பட்டிருப்பது ஒரு புரட்சிதான்..!
பட விழாக்களுக்கு இந்தப் படத்தை அனுப்பினால் எளிதாக பரிசுகளை தட்டிக் கொண்டு வரும்.
ஏன் என்னை ஏதோ செய்தாய் – வரவேற்கத்தக்க முயற்சி..!
– வேணுஜி