பெண்கள் ஜாக்கெட் அணிய கூடாது என்ற ஒரு காலம் இருந்தது. ஆனால் ஜாக்கெட் அணிந்து கொள் என்றால் அப்படி அணிய மாட்டேன் என்று சொல்கிற ஒரு வித்தியாசமான பெண்ணின் கதை இது.
ஆக… அணியக்கூடாது என்றாலும் அணிந்து கொள் என்றாலும் அது பெண்ணின் சுதந்திரத்தைக் குறைப்பதாகவே இருக்கிறது. இதில் இந்த கதை நாயகி அங்கம்மாள் எடுக்க முடிவு என்ன என்பதே கதை.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித் துணி கதையை ஒட்டி படைக்கப்பட்ட இந்த நவீனத்தை விபின் ராதாகிருஷ்ணன் இயக்கி இருக்கிறார்.
இரண்டு ஆண் மகன்களுக்கு தாயான அங்கம்மாள் சுதந்திரமாக இருக்கும் வழக்கமுடையவள்.
தன் விருப்பத்துக்கு ஜாக்கெட் அணியாமலும் தன் விருப்பத்திற்கு சுருட்டுப் புகைப்பதையும் வழக்கமாகக் கொண்ட அங்கம்மாள் ஒரு சுதந்திரப் பிரியை. ஆனாலும் தனி ஆளாக தன் பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்குகிறாள்.
அவர்களில் இளைய மகன் காதலித்து மணம் முடிய போகும் பெண்ணின் வீட்டார் மதிக்க வேண்டி அவளை ஜாக்கெட் அணியச் சொல்லி அவன் வற்புறுத்த… என்ன ஆகிறது என்கிறது படம்.
கதையின் நாயகி அங்கம்மாளாக நடித்திருக்கும் கீதா கைலாசம், இதுவரை ஏற்ற அம்மா பாத்திரங்களில் இருந்து வித்தியாசப்பட்டு நிற்கிறார். சற்று அமைதியான குணாதிசயம் கொண்ட அவருக்கு இதில் அவர் ஏற்று இருக்கும் தைரியமான கடினமான பெண்மணி வேடம் சவால் ஆனதாகவே அமைந்திருக்கிறது.
இருந்தாலும் அந்த சவாலை ஏற்று திறம்பட நடித்திருக்கிறார்.
அங்கம்மாளின் மூத்த மகன் பரணி, அவரது மனைவி தென்றல், இளைய மகன் சரண், அவரது காதலி முல்லையரசி மற்றும் சுதாகர், சிறுமி யாஷ்மின் உள்ளிட்டவர் கதைக்களத்தோடு கச்சிதமாக பயணத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அன்ஜாய் சாமுவேல், கதை நடக்கும் களத்தை பூகோள ரீதியாக நமக்கு புரிய வைப்பதில் வெற்றி பெற்று இருக்கிறார்.
இந்தப் படத்துக்குள் பின்னணி இசை இருக்கிறதா என்பதை தெரியாத அளவுக்கு இசையமைப்பாளர் முகமது மக்பூல் மன்சூர் இசையையும் கதையோடு கலந்து கொடுத்திருக்கிறார்.
எந்த காலத்திலும் எத்தனை தைரியமானவளாக இருந்தாலும் பெண்ணின் வாழ்க்கை என்பது ஏதோ ஒரு விதத்தில் கட்டுப்பாடு மிகுந்ததாகவே இருக்கிறது என்ற கருத்தை இந்த படத்தின் மூலம் கடத்து இருக்கிறார் இயக்குனர் விபின் ராதாகிருஷ்ணன்.
அங்கம்மாள் – அடங்க மறுப்பவள்..!
– வேணுஜி