நாயகன் வெற்றி பழமையான அரசு சிறப்பக் கல்லூரியில் படிக்க செல்கிறார். அங்கு கட்டப்பட்ட விடுதியில் குறிப்பிட்ட ஒரு அறையில் மட்டும் தொடர் மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இது எதனால் நடக்கிறது என்று கண்டுபிடிக்க முயலுகிறார் வெற்றி. அப்போது கதாநாயகி ஸ்மிருதி வெங்கட் அதே கல்லூரிக்கு டாக்குமெண்டரி எடுக்க வந்து சேருகிறார். வெற்றியும் ஸ்மிருதி வெங்கட்டும் நட்பாகிறார்கள்.
ஸ்மிருதி வெங்கட்டுடன் இணைந்து மர்ம மரணங்கள் குறித்து ஆராய முயற்சிக்கிறார். அப்போது, பல அமானுஷ்ய விஷயங்களும், திடுக்கிடும் அசம்பாவிதங்களும் வெளியே வருகிறது. இறுதியில் மர்ம மரணங்களுக்கான காரணங்களை வெற்றி கண்டுபிடித்தாரா? அமானுஷ்ய விஷயங்கள் நடக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
விமர்சனம்
வெற்றி நடுத்தர குடும்பத்து இளைஞராக வருகிறார். கண்களாலேயே நமக்குத் திகிலூட்டுகிறார். 8 தோட்டாக்கள், ஜீவி படங்களைப் போலவே இதிலும் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான கதாபாத்திரம். கதையின் சீரியஸ் தன்மைக்கு ஏற்றபடி உடல்மொழியும், வசன உச்சரிப்பும் பொருத்தமாக இருக்கிறது. நாயகி ஸ்மிருதி வெங்கட் வந்த பிறகு படம் இன்னும் வேகமாக நகர்கிறது.
புலமையான புத்தகத்தை வாசிக்கும் நிமிடங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஜமீனாக வேல ராமமூர்த்தியின் மிரட்டலான நடிப்பும், வனத்திற்குள் வாழும் பளியர்களின் பரிதாப வாழ்க்கையும் நெஞ்சில் பதிகிறது. வனப்பெண் மல்லியாக அனுசித்தாரா மேக்கப் முகம் உறுத்தல். அழகம் பெருமாளின் சஸ்பென்ஸ் கதாபாத்திரமும், அந்த மாயக்கண்ணாடியும் படத்திற்கு பிளஸாக அமைந்திருக்கிறது.
விமர்சனம்
வனத்தை மையமாக வைத்து திகில், பேண்டஸி, பீரியட் என படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ கண்டன். இடைவேளைக்குப் பிறகு படத்தில் பல இடங்களில் டுவிஸ்ட் ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது. வனத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரு காரணத்திற்காக தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் காட்சி உருக்கம். இயக்குநர் ஸ்ரீ கண்டன் ஆனந்த், மாதவா, ஐசக் பசில் ஆகியோர் திரைக்கதைக்காக உழைத்திருப்பது தெரிகிறது.
ரான் ஈத்தன் பின்னணி இசையும், விக்ரம் மோகனின் ஒளிப்பதிவும் படத்தில் ஒன்ற வைக்கிறது.