வேற்று மொழியில் ஓடி பெரு வெற்றியையும் அற்புதமான விமர்சனங்களையும் பெற்ற ஒரு படத்தை இன்னொரு மொழியில் தயாரிப்பதற்கு ஒரு ‘தில்’ வேண்டும். அந்த ‘தில்’ இயக்குனர் பாலாவுக்கு இருக்க, தன் பி ஸ்டூடியோஸ் சார்பில் மலையாளத்தில் வந்து ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற ‘ஜோசப்’ படத்தை தமிழில் விசித்திரனாக்கி தயாரித்திருக்கிறார். அதுமட்டுமன்றி அங்கே ஜோஜு ஜார்ஜ் நடித்த அந்த முதன்மைப் பாத்திரத்தில் தமிழில் ஒரு நடிகரைப் பிடித்து எடுப்பதற்கும் மகத்தான ‘தில்’ வேண்டியிருக்க, அதற்கு ஆர்.கே.சுரேஷ் சரியாக இருப்பார் என்று உணர்ந்ததுடன், அந்தப் பாத்திரத்தையோ படத்தின் ஜீவனையோ சிதைத்து விடாமல் இருக்க, மலையாளத்தில் இயக்கிய அதே இயக்குனர் எம்.பத்மகுமாரை வைத்து தமிழில் இயக்கி வைத்திருப்பதும் பாராட்டத்தக்க செயல்.
நுட்பமான புலனாய்வுத் திறன் கொண்ட காவல் அதிகாரி மாயனாக ஆர்கே சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் பொருத்தமாக இருக்கிறார். ஓய்வுபெற்று, தனிமை விரக்தியில் வாழும் அவரது திறமையை காவல்துறை அவ்வப்போது பயன்படுத்தி கொண்டேதான் இருக்கிறது.
நகரில் ஒரு இரட்டைக் கொலை நடந்து விட, அதைப் புலனாய்வு செய்ய அவரை அழைக்கிறார்கள். இருக்கிற தடயங்களை வைத்து வேறு கோணத்தில் ஒட்டுமொத்த போலீசும் சிந்தித்துக் கொண்டிருக்க, இவர் மட்டும் இன்னொரு கோணத்தில் செயல்பட்டு குற்றவாளியைக் கொஞ்ச நேரத்திலேயே ஆன் தி ஸ்பாட் பிடித்து விடுவது அட்டகாச அறிமுகம்.
அப்படி வாழ்ந்து கொண்டிருப்பவருக்கு பிரிந்து போன மனைவி ஒரு விபத்தில் இறந்ததாக தகவல் வர, அவளது உறுப்புகளை தானம் செய்ய நேர்கிறது. ஒரு கட்டத்தில் அது விபத்து அல்ல கொலை என்று அவரது புலனாய்வு மூளை எச்சரிக்க அதைத் தொடர்ந்து ஆய்வு செய்யும் அவருக்கு மட்டுமல்ல… நமக்கும் திடுக்கிடும் அதிர்ச்சி சம்பவங்கள் தெரிய வருகின்றன.
மனைவி மட்டும் அல்லாமல் மகளும் இறந்தது தற்செயல் அல்ல; திட்டமிட்ட கொலை என்பதை உணரும் அவர், அதன் பின்னணியில் இருக்கும் சதியைக் கண்டுபிடிக்கும் போது நமக்கு ரத்தம் உறைந்து போகிறது. அந்த சதியை இனியும் நடக்காமல் தடுக்க எப்படி அவர் தன்னையே சதுரங்கக் காயாக வைத்து ஆடி (அடங்கி?) வெற்றி பெறுகிறார் என்பதுதான் மீதிக்கதை.
உருவமும் ஒப்பனையும் மாத்திரமல்லாமல் அந்தப் பாத்திரத்துக்கான உணர்ச்சியையும் கொண்டுவந்து தன் நடிப்பில் இன்னொரு பரிமாணம் காட்டியிருக்கிறார் ஆர்கே சுரேஷ். அவரது முரட்டு தோற்றத்துக்கு இப்படி ஒரு உணர்ச்சிகரமான நடிப்பு வருமா என்பதே சந்தேகமாக இருக்க, ‘வரும்…’ என்று திடமாக நம்பி தன்னையும் ஒரு நடிகராக நிறுவிக் கொள்கிறார் அவர். வசன உச்சரிப்பில் மட்டும் இன்னும் இயல்பு காட்ட முயற்சித்திருக்கலாம்.
அந்நியோன்யமான காதலி, அன்புக்குரிய மனைவி, பாசம் வைத்த மகள் என்று அவரது இதயம் தொட்டவர்கள் எல்லோருமே அடுத்தடுத்து மரணத்தைத் தொட்டிருக்க ஒரு மனிதனின் விரக்தி, எந்த உச்சத்தைத் தொட்டு இருக்கும் என்பதைத் தனது பார்வையாலும் நடிப்பினாலும் உணர்த்தி இருக்கும் அவருக்கு இந்தப் படத்துக்காக சில விருதுகள் கிடைக்கும்.
ஆர்கே சுரேஷின காதலியாக மது ஷாலினி மிகப் பொருத்தம். அந்த லிப்-லாக் ஒன்றே போதும் அவரது அந்நி யோன்யமான காதலைச் சொல்ல… அப்படி நேசித்த காதலியைப் பிரிய நேர்ந்தது மட்டுமல்லாமல், ஒரு கட்டத்தில் பாதி அழுகிய நிலையில் சடலமாகக் காண நேரும்போது அவரது உணர்வு எப்படி காயப்பட்டு இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், அதை மனைவியாக வரும் பூர்ணாவுக்குப் புரிய வைக்க முடியாததால் திருமண வாழ்விலும் தோற்கிறார். மனைவி ஸ்டெல்லாவாக வரும் பூர்ணாவின் நடிப்பு நன்று. கல்லானாலும் கணவன் என்றில்லாமல் கிட்டாதாயின் வெட்டென மற… அல்லது பற என்று பிரிந்து போகும் அவரது பாத்திரம் சற்றே வித்தியாசமானது. மகளாக வரும் பிரியதர்ஷினியும் நல்ல தேர்வு.
பாத்திரங்கள் சரியாக அமைந்து விட்டாலே பாதி வெற்றி என்பதைப் போல காதலி, மனைவி, மகள் என்று அந்தந்தப் பாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகைகளாக அமைந்துவிட்டதுடன் மூலப் படத்தின் உயிர் நாடி சிதைத்து விடாமல் இயக்குனர் காப்பாற்றி இருக்கிறார்.
தமிழுக்கு என்று சில மாற்றங்கள் செய்து இருந்தாலும் மலையாளத்தில் இந்தப் படத்தை பார்க்காதவர்கள் நேரடியாகத் தமிழில் பார்க்கும்போது ஏற்படும் பதைபதைப்பு குறையாமல் இயக்கி இருப்பதை பாராட்டியே ஆகவேண்டும். அதுவும் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் அடுத்து என்ன நடக்கும் என்பது யூகிக்க முடியாத பரபரப்பு.
எல்லா உண்மைகளுக்கும் ஒரே சான்றாக நின்று உண்மைகளை வெளிக்கொண்டு வரும் வழக்கறிஞர் சுதா சந்திரனும் அந்தப் பாத்திரத்தில் பொருந்தி இருக்கிறார்.
அடர்த்தியான இந்தப்படத்தில் இளவரசுவின் பாத்திரமும் வசனங்களும் அங்கங்கே ருசிக்கின்றன. மாரிமுத்து, பகவதி பெருமாளின் நடிப்பு இயல்பாக இருக்கிறது.
படத்தின் பதைபதைப்பை பின்னணி இசை மூலம் ஜி.வி.பிரகாஷ் சரியாக உணரச் செய்திருக்கிறார். பாடல்களும் உணர்வை சிதைக்காமல் ஒலிக்கின்றன. திரைக்கதை வெம்மையாக இருக்க படப்பிடிப்பில் குளிர்ச்சி சேர்த்து ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றி மகேந்திரன்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் சிறந்த இயக்குனருமான பாலாவே சொன்னதுபோல் “இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் பெயர் பெறும் ஆர்கே சுரேஷ், இனி வரும் படங்களிலும் அப்படி நடித்தால் மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்ற குரல் படம் முடியும்போது நம்முள் ஒலிக்கிறது. அதைச் சரியாக செய்வாரா ஆர்கே சுரேஷ் என்பதை இனி வரும் படங்களில்தான் தெரிந்துகொள்ள முடியும்.
விசித்திரன் – வித்தியாசமான சித்திரம்..!
|
|