November 25, 2024
  • November 25, 2024
Breaking News
December 10, 2022

விஜயானந்த் திரைப்பட விமர்சனம்

By 0 763 Views

கர்நாடகாவில் பெரிய தொழில் நிறுவனமான வி ஆர் எல் எப்படி உருவானது… அதை உருவாக்க அதன் நிறுவனர் விஜய் சங்கேஸ்வர் எப்படி பாடுபட்டார் என்பதை ஒரு பயோபிக் ஆக சொல்லி இருக்கும் படம் தான் விஜயானந்த்.

இரண்டு சகோதரர்களுடன் பிறந்து அப்பா பி.ஜி. சங்கேஸ்வர் நடத்தி வந்த அச்சகத் தொழிலையே தானும் கற்றுக்கொண்டு அதில் மேம்பாட்டை கொண்டு வந்த விஜய் சங்கேஸ்வர், அந்த வளர்ச்சியிலும் திருப்தி இல்லாமல் தன் சொந்த முயற்சியில் ஒரு லாரியை வாங்கி அதை வி ஆர் எல் என்ற பெரிய லாஜிஸ்டிக் நிறுவனமாக எப்படி உயர்த்தினார் என்பதுதான் கதை.

அந்த உயர்விலும் மகிழ்ச்சி அடையாமல் அரசியல் மற்றும் பத்திரிகை துறையிலும் தன் கொடியை உயரப் பறக்க விட்டிருக்கிறார் விஜய் சங்கேஸ்வரர். 

இதை ஒரு கற்பனை கதையாகச் சொன்னாலே நம்புவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் இது கண் முன்னே நடந்த நிஜக் கதை என்று இருக்க இதன் ஆரம்பம் முதலே நமக்கு பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.

ஒரு படக் கதையாக இதன் திரைக்கதையை ஆரம்பித்து கடைசியில் நிஜ சங்கேஸ்வர்களையே திரையில் வைத்திருப்பதன் மூலம் இந்த பயோபிக்கை திருப்தியாக நிறைவு செய்திருக்கிறார் இயக்குனர் ரிஷிகா சர்மா.

சாதனை மன்னன் விஜய் சங்கேஸ்வராக நிஹால் நடித்திருக்கிறார். வழக்கமான கமர்சியல் ஹீரோவாக தெரியாமல் ஒப்பனை, உடைகள், உடல் மொழி எல்லாவற்றிலும் நம்பகத்தன்மையை கொண்டு வந்திருக்கும் அவருக்குப் பாராட்டுக்கள்.

அதேபோல் அவரே இளைஞனாகவும், நடுத்தர வயதுள்ளவராகவும், முதியவராகவும் கூட ஒப்பனையை நம்பாமல் இயல்பான உடல் மொழியிலேயே அதனைக் கொண்டு வந்திருப்பது ஆகப்பெரிய உழைப்பு.

அவரது அப்பா பி.ஜி.சங்கேஸ்வரராக நடித்திருக்கும் ஆனந்த் நாகிடம் அனுபவ நடிப்பு பளிச்சிடுகிறது. வெளிநாட்டில் இருந்து புதிய அச்சக இயந்திரத்தை வாங்கிக் கொண்டு ஆடிப் பாடிக்கொண்டு நிஹால்  (விஜய் சங்கேஸ்வர்) வர,  மகனின் பொறுப்பில்லாத தன்மையாக அதைக் கருதி முகம் சுளிப்பதில் ஆரம்பிக்கிறது ஆனந்த் நாக்கின் அற்புத நடிப்பு.

அப்படி ஆரம்பித்து மகனின் வளர்ச்சியில் பெருமிதம் கொண்டு, இறக்கும் தருவாயில் தன் மகனை உலகமே போற்றும் என்று புரிந்து கொண்டு உயிரை விடுவது வரை ஆனந்த் நாக் நடிப்பு அசத்தல்தான்.

அவரது மனைவியாக வரும் வினயா பிரசாத்தும் சாதனையாளர் விஜய் சங்கேஸ்வரின் பாசமுள்ள அன்னையாக நெகிழ வைக்கிறார்.

அதேபோல் அப்பாவின் மீது உயிரையே வைத்திருந்தாலும் அவருடனான புரிதலில் தொடர்பில்லாமலேயே இருந்து விட்ட நிஹாலின் வருத்தமும் நம்மை நெகிழ வைக்கிறது.

அதனாலேயே தனக்கு தன் மகனிடம் அந்த இடைவெளி விழுந்து விடக்கூடாது என்று மகனை தன்னுடனே வைத்து வளர்த்து அவனது வளர்ச்சியில் தோள் கொடுப்பதிலும் விஜய் சங்கேஸ்வரின் பாசத்தை அழகாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள் நடிகர் நிஹாலும் இயக்குனர் ரிஷிகாவும்.

விஜய் சங்கேஸ்வர் நிஹாலின் மகன் ஆனந்த் சங்கேஸ்வரராக நடித்திருக்கும் பாரத் போபனாவும் மிகப் பொருத்தம். இவர் சொல்லும் கதையாகத்தான் ஆரம்பித்து முடிகிறது படம். 

அப்பாவின் ஆசையை நிறைவேற்ற அத்தனை பெரிய சாம்ராஜ்யத்தின் பொறுப்பாளராக இருந்தும் ஒரு பத்திரிகைப் பெயரின் உரிமையை வாங்க ஏழைப் பத்திரிகையாளர் வீட்டுக்குச் சென்று கெஞ்சுவது நெகிழ வைக்கிறது.

படத்தின் தயாரிப்பாளராகவும் நிஜ ஆனந்த் சங்கேஸ்வரே இருப்பது படத்தை மெருகூட்டி இருக்கிறது.

புரிந்து கொள்ளாத அப்பாவை போற்றும்படி செய்வதில் தொடங்கி, தனக்கு எதிரிகளாக இருந்தவர்களையும் அரவணைத்துச் சென்று தொழிலில் வென்று, தன்னை தோற்கடிக்க நினைத்த உச்ச பத்திரிகையாளரையும் தோளில் கை போட்டு அவரை விட உயர்ந்து வெற்றி கொடி நாட்டி, அரசியல் தகுதியும் தேடி வர வைத்த விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கையை பாரபட்சம் இல்லாமல் சொல்லி இருக்கும் இயக்குனர் ரிஷிகா சர்மாவைப் பாராட்டியே ஆக வேண்டும்.

கீர்த்தன் பூஜாரியின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை மேன்மைப்படுத்தி காட்டியிருக்கிறது. கோபி சுந்தரின் இசையில் பாடல்கள் எந்த கமர்சியல் சாயமும் பூசிக்கொள்ளாமல், பின்னணியில்  உத்வேகத்தை கொடுத்திருக்கிறது.

இதனை ஒரு வாழ்க்கை வரலாறாகப் புரிந்து கொள்ள முடியாத பார்வையாளர்களுக்கு இன்னும் கொஞ்சம் கமர்சியல் அம்சங்களை சேர்த்து இருந்தால் ரசிப்பதற்கு வழிவகுத்திருக்கும்.

வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த படம் ஒரு பாடம்.

விஜயானந்த் – வெற்றிச் சரித்திரம்..!

– வேணுஜி