April 28, 2024
  • April 28, 2024
Breaking News
December 10, 2022

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்பட விமர்சனம்

By 0 569 Views

தலைப்பு புரியுதுல்ல..? வைகைப் புயல் வடிவேலு மீண்டும் ஃபார்முக்கு வந்து விட்டார் என்று சொல்கிற தலைப்புதான் இது. அவரே நடித்து புகழ்பெற்ற பாத்திரமான நாய் சேகராக இதிலும் வந்து, லந்து பண்ணியிருக்கிறார்.

வீட்டில் விலை உயரந்த பொருள் காணாமல் போனால் கூட வருத்தப்பட்டு பின்னர் விட்டு விடுபவர்கள், தாங்கள் வளர்க்கும் நாயைக் காணவில்லை என்றால் சாப்பாடு, தூக்கம் இன்றித் தவிப்பார்கள்.

இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி நாய் வளர்ப்பவர்கள் வீட்டில் இருந்து நாயைக் கிட்னாப் செய்து கொண்டு போய், அதற்கு உரியவர்களிடம் பணயத் தொகை கேட்கும் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார் நாய் சேகர் என்கிற வடிவேலு.

அவரிடம் அல்லக் கைகளாக பிரசாந்த், ரெடின் கிங்ஸ்லி மற்றும் லேடி அசிஸ்டன்ட் ஷிவாங்கியும் இருக்க அவர்கள் யோசனைப்படி தொழிலை விரிவுபடுத்த கோடீஸ்வரர்களின் வீட்டிலிருந்து நாய்களைத் திருட ஆரம்பிக்கிறார்கள்.

அப்படி, ஒரு கோடீஸ்வரர் வீட்டு நாய் என்று நினைத்து மிகப்பெரிய ரவுடியாக இருக்கும் ஆனந்தராஜின் நாயைத் திருடி விட வடிவேலுவை போட்டே தள்ளுவது என்று ஆனந்தராஜ் கிளம்ப அது ஒரு தனிக் கதை.

இங்கே மெயின் கதைக்கு வந்து வடிவேலுவின் பாட்டி சச்சு சொல்லும் பிளாஷ்பேக் கேட்டால் வாழ்ந்து கெடட குடும்பம் வடிவேலுவுடையது என்று தெரிகிறது. 

ஒரு முனிவரிடம் வரம் வாங்கி வந்த நாயை வளர்ப்பதன் மூலம் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் வடிவேலுவின் அப்பா அந்த நாயை பார்த்துக் கொள்வதற்காக ராவ் ரமேஷை வேலைக்கு வைக்கிறார். அந்த நாயினால் தான் அவர்களுக்கு அதிர்ஷ்ட வாழ்க்கை கிடைத்ததை தெரிந்து கொள்ளும் ராவ் ரமேஷ், அந்த நாயை திருடிக் கொண்டு போய் விடுகிறார். அத்துடன் வடிவேலு குடும்பம் நொடித்து போக ராவ் ரமேஷ் மிகப்பெரிய கோடீஸ்வரராக மாறுகிறார்.

ஆக மீண்டும் வடிவேலுவின் குடும்பம் தலைநிமிர வேண்டும் என்றால் அந்த நாயை ராவ் ரமேஷிடம் இருந்து மீட்டு வந்தால் மட்டுமே முடியும் என்று சச்சு சொல்ல அந்த நாயை மீட்டு வர, ராவ் ரமேஷ் இருக்கும் ஹைதராபாத் புறப்படுகிறார் வடிவேலு.

ஊரார் நாயை ஊட்டி வளர்த்த வடிவேலு தன் நாயை மீட்டு வர முடிந்ததா என்பது மீதி கதை.

நாய் சேகர் என்ற பாத்திரத்தில் வந்தாலும் வடிவேலு, இன்ன பிற படங்களில் நடித்த கேரக்டர்களிலும் அவ்வப்போது வந்து போகிறார். தன்னுடைய ஆட்டம் பாட்டம் பாடி லாங்குவேஜில் எந்த குறையும் வைக்காத வடிவேலுவுக்கு இன்னும் வளமான ஸ்கிரிப்ட் அமைந்திருந்தால் தேவலை என்று தோன்றுகிறது.

காமெடி ஜாம்பவானாக வடிவேலுவே இருக்க அவர் போதாது என்று ஏன் இயக்குனர் சுராஜ் நினைத்தார் என்று தெரியவில்லை. அதனால் ரெடின் கிங்ஸ்லி, காமெடி ஷிவாங்கி, இட் இஸ் பிரசாந்த், மாறன், முனீஸ் காந்த் ராமதாஸ் என்று ஏகப்பட்ட காமெடியன்களை வண்டி வைத்து தூக்கி வந்திருக்கிறார் அவர்.

அவர்களும் தங்கள் பங்குக்கு எந்த குறையும் வைத்து விடக்கூடாது என்று அவரவர் பங்கை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

இடையே பிரசாந்தும் அதற்குப் பிறகு ஷிவாங்கியம் காணாமல் போகிறார்கள்.

படம் நெடுக ஏக காமெடி சீக்வன்ஸ் வைத்திருக்கிறார் சுராஜ். அதிலும் ஆனந்தராஜ் கதைக்குள் வந்தவுடன் காமெடி டெம்போ இன்னும் ஏறுகிறது.

அவ்வளவு பெரிய ரவுடியான அவரைக் குறி பார்த்து சுடத் தெரியாமல் ‘ குறி ‘யைப் பார்த்து வடிவேலு சுட்டு விட வீல்சேரிலேயே அலையும் ஆனந்தராஜின் நிலைமை அவலம்.

அவரிடம் அடியாள் வேலை பார்த்தவர்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு வேலையில் செட்டில் ஆகிவிட அத்தனை பேரையும் வேன் வைத்து மிச்சர், கோலா வாங்கி கொடுத்து வடிவேலுவைக் கொல்வதற்காக ஹைதராபாத் புறப்படும் ஆனந்தராஜ், ஐயோ பாவம் ராஜாகிறார்.

பாதி படம் வரை வடிவேலுவுக்கு ஜோடி இல்லாமல் இருக்க அதற்கு மேல் ராவ் ரமேஷ் தங்கையாக வரும் ஷிவானி நாராயணனை திருமணம் செய்து கொள்ள நேர்கிறது. ஆனால் அதில் வடிவேலுவும் விருப்பம் காட்ட வில்லை – இயக்குனரும் வடிவேலுவுக்கு ஜோடி சேர்ப்பதில் விருப்பமில்லை போலும். அதை அப்படியே கத்தரித்து விடுகிறார்கள்.

தங்கள் இருவரில் வடிவேலுவை யார் கொல்வது என்பதில் ராவ் ரமேஷுக்கும் ஆனந்தராஜுக்கும் போட்டி வந்துவிட இருவரும் ‘ பஞ்ச் ‘ பேசியே மாறி மாறி அடித்துக் கொள்வதை ரசிக்கலாம்.

லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்திருப்பதால் படத்தில் பிரம்மாண்டத்துக்கு குறைவில்லை. சந்தோஷ் நாராயணனின் இசையில் கம்போசிங்குக்கு லண்டன் எல்லாம் சென்று வந்த கதை எல்லோருக்கும் தெரியும்.

அந்தப் பாடல்களில் ‘ அப்பத்தா …’ பாட்டு மூலை முடுக்கெல்லாம் ஹிட் ஆகி இருக்கிறது. பின்னணி இசையிலும் சந்தோஷ் நாராயணன் சோடை போகவில்லை. 

ஒளிப்பதிவாளர் கேமராவில் வண்ணங்களுக்கு குறைவில்லை. ஆனால் நாடக செட்டப் போல ஏன் நின்ற இடத்தில் நின்றே வடிவேலு அண்ட் கோ பேசிக் கொண்டிருக்கிறது என்பது புரியவில்லை.

குடும்பத்தோடு… முக்கியமாக குழந்தைகளோடு போனால் அதிகமாக ரசிக்க முடியும் இந்த நாய் சேகரை.

நாய் சேகர் – ஜொள்ளு குறைவு… லொள்ளு அதிகம்..!