April 27, 2024
  • April 27, 2024
Breaking News
December 21, 2018

விஜய் யின் நன்றி மறவாத உயர்ந்த பண்பு

By 0 711 Views

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ரஜினிக்கு அடுத்த இடம்… அதாவது அடுத்த சூப்பர் ஸ்டாராகக் கருதப்படுபவர் விஜய் தான். கமர்ஷியல் ஃபார்முலாவில் பயணித்தாலும் சமீப காலமாக சமூக அக்கறை சொல்லும் படங்களில் நடிப்பதன் மூலம் தனக்கான சமூகக் கடமையையும் ஆற்றத் தவறாத நடிகராக இருக்கிறார் விஜய்.

இப்படியெல்லாம் ஒரு தனிப்பட்ட நடிகரைச் சொன்னால் அது அவருக்கு ‘ஜால்ரா’ அடிப்பதாகவே கருதப்படும். ஆனால், நாம் இங்கே பாரட்டும் விஷயம் அதற்கல்ல. ‘நட்சத்திரம்’ என்ற தகுதி கிடைத்தாலே வானத்து நட்சத்திரங்கள் அளவுக்கு உயர்ந்து யாருக்கும் எட்டாத உயரத்துக்குப் போய்விடுவதுதான் பொதுவான நடிகர்களின் வழக்கம். இது ரஜினிக்கும் பொருந்தும்.

ஆனால், அனைத்து உச்ச நட்சத்திரங்களிலும் இருந்து விஜய் தனித்துத் தெரிவதற்குக் காரணமே அவர் கடந்து வந்த பாதையை மறக்கவில்லை என்பதுதான். அதற்காக நேரம் ஒதுக்கி இன்றும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து வருகிறார் அவர்.

இந்த வருடம் முடிந்து புதிய வருடம் தொடங்குவதை ஒட்டி நேற்று அவர் அனைத்து மீடியாக்காரர்களையும் சந்தித்து விருந்து அளித்தார். ஒவ்வொரு பத்திரிகையாளரையும் தனித்தனியே சந்தித்து நலம் விசாரித்து புகைப்படமும் எடுத்துக் கொண்டது அவர் உயரத்தில் இருக்கும் இன்னொரு நட்சத்திரம் செய்யாத நன்றிக்கடன்.

Vijay Meet

Vijay Meet

அவர் இதற்காக ஒதுக்கிய நேரம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம். மூன்றுமணிநேரமும் நின்றபடியே ஒவ்வொருவராக சந்தித்து நலம் விசாரித்தார். சீனியர், ஜூனியர், பழகியவர், பழகாதவர், சின்ன பத்திரிகை, பெரிய பத்திரிகை என்றெல்லாம் தரம் பிரித்துக் கொள்ளாமல் எல்லோரையும் அவர் சந்தித்ததுதான் பாராட்டத்தக்க விஷயம்.

எல்லா நட்சத்திரங்களும் ஆரம்பத்தில் இப்படித்தான் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குவார்கள். ஆனால், ஒரு கட்டத்தை எட்டியவுடன் “இனி உனக்கும், எனக்கும் என்ன உறவு… நீ எழுதிதான் நான் வளர்ந்தேனா..?” என்கிற அளவில் யாரையும் சந்திப்பதைத் தவிர்த்து விடுவார்கள். இது கிட்டத்தட்ட எல்லா உச்ச நட்சத்திரங்களுக்கும் பொருந்தும். 

கடந்த தலைமுறை நடிகர்களில் கமல் அணுகக்கூடியவராக இருந்தார். விஜயகாந்த் நடித்தவரை அவரை சந்திக்க முடிந்தது. சரத்குமார், சத்யராஜை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். அதற்குப் பின் வந்த நட்சத்திரங்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் கெட்டு பத்திரிகையாளர்களைச் சந்திப்பதை முற்றிலுமாக தவிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படித் தவிர்த்தால்தான் தாங்கள் உச்சத்தில் இருப்பதாக அவர்கள் நம்புவதுதான் இன்னும் வேடிக்கை.

விஜய்க்குப்பின் வந்த நட்சத்திரங்கள் இன்னும் மோசம். அவர்களுக்கு எந்த மீடியாக்காரர்களுடனும் எந்தப் பரிச்சயமும் கிடையாது. ஆனால், விஜய்க்கு புதிதாக வந்த மீடியாக்கர்களைத் தவிர்த்து பொதுவான அனைத்துப் பத்திரிகையாளர்களையும் பெயர் சொன்னால் தெரிகிற அளவுக்குப் பழக்கம் உண்டு. 

இதுவே விஜய்யை அவர் இன்னும் உயரங்களைத் தொட வாழ்த்தத் தோன்றுகிறது. அவரிடம் இளைய தலைமுறை நடிகர்கள் கற்றுக் கொள்ள வேண்டியதும் இதைத்தான்..!