October 5, 2024
  • October 5, 2024
Breaking News
April 27, 2024

ரத்னம் திரைப்பட விமர்சனம்

By 0 360 Views

ஒரு படத்தை சற்றே நீளமாக எடுத்துவிட்டு அதை மூன்றாகக் கத்தரித்து இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் என்றெல்லாம் வெளியிடுவது இன்றைய ட்ரெண்ட். 

ஆனால் இதில் இயக்குனர் ஹரி முற்றிலும் மாறுபட்டவர். மூன்று பாகங்களுக்குத் தேவையான ஒரு படத்தை எடுத்து முடித்துவிட்டு அதை எடிட்டோ எடிட் செய்து ஒரு படமாகச் சுருக்குவதில் கை தேர்ந்தவர். அதனாலேயே அவர் படங்கள் இறக்கை கட்டி பறக்கும் வேகம் கொள்கின்றன.

கதைகளைப் பிடிப்பதிலும் அவர் லைன் பிடிக்கும் விதமே அலாதியானது. இந்தப் படத்தில் அப்படிதான்.

திருப்பதியில் அரங்கேறும் ஒரு கொள்ளை சம்பவத்தில் படம் தொடங்குகிறது. அத்துடன் தமிழக ஆந்திர எல்லையைப் பிரித்தபோது தமிழகத்தின் சில பகுதிகள் ஆந்திரத்தில் சிக்குண்ட போது அங்கு வாழும் தமிழர்களின் நிலை மிகவும் சிக்கலாகிப் போனது. அதன் ஒரு விளைவும் படத்தின் உயிர்நாடியாகிறது.

இங்கே தமிழ்நாட்டில் தன் உயிரைக் காப்பாற்றிய சிறுவனை கார்டியன் ஆக இருந்த வளர்த்து வருகிறார் சமுத்திரக்கனி. இப்போது வேலூரில் எம்எல்ஏவாக இருக்கும் அவருக்கு அந்த சிறுவன் வளர்ந்து விஷால் ஆகி, வலது கையாக இருக்கிறார்.

இன்னொரு பக்கம் மருத்துவராக விருப்பம் கொண்டு நான்காவது முறையாக நீட் தேர்வை எழுத வரும் நாயகி பிரியா பவானி சங்கர் தன் கண் முன்னால் ஒரு உயிர் போய்விடக்கூடாது என்பதில் முனைப்பாக இருப்பவர்.

அதனால் கொலை செய்யும் ரவுடிகளைக் கண்டால் கண்ட இடத்தில் சுட்டுவிட வேண்டும் என்று பிரியா நினைக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட வேலையைத்தான் நாயகன் விஷால் செய்து கொண்டிருக்க… எதிர்பாராமல் அல்லது எதிர்பார்த்தபடியே பிரியாவின் உயிருக்கு ஆபத்து வரும்போது, விஷால் குறுக்கே நின்று அவரைக் காக்கிறார்.

முன் பின் தெரியாத பிரியாவை விஷால் ஏன்  காப்பாற்ற வேண்டும்… பிரியாவை கொலை செய்ய வேண்டிய அவசியம் ஆந்திர ரவுடிகளுக்கு ஏன் வந்தது..? மேற்படி ஆந்திர – தமிழக நிலப் பிரச்சனைக்கும் இதற்கும் தொடர்பு உண்டா..? போன்ற கேள்விகளுக்கு எல்லாம் தொடர்ந்து வரும் திரைக்கதையில் பதில்கள் இருக்கின்றன.

சும்மாவே ஹரியின் படங்களில் ஆக்ஷன் திகட்டலாக இருக்கும் இதில் விஷாலைப் போன்று ஒரு சண்டைக்கோழி கிடைத்தால் விடுவாரா..? அரை மணி நேரத்துக்கு ஒரு ஃபைட் வந்து விடுகிறது. அதுவும் பீட்டர் ஹெயின், கனல் கண்ணன், திலீப் சுப்பராயன் மாஸ்டர்களை வைத்துக்கொண்டு விஷாலை விட்டு அடிக்க வைத்திருப்பது, உங்க வீட்டு அடி எங்க வீட்டு அடி இல்லை. 

விஷால் அடித்துப் போடும் ரவுடியின் ஆட்களை மருத்துவமனையில் சேர்த்தால் வேலூர் சிஎம்சி போதாது. 

ஆனால் அத்தனை ஆக்ஷனுக்கும் விஷால் பொருத்தமாக இருக்கிறார் என்பதை நம்ப முடிகிறது. ஆக்ஷனில் என்றில்லாமல் நடிப்பிலும் குறிப்பாகத் தாய்ப் பாசத்தில் நெகிழ வைத்து விடுகிறார். 

மார்க் ஆண்டனியைத் தொடர்ந்து விஷாலுக்கு நல்ல மார்க் கிடைத்திருக்கும் படம் இது.

சற்று படங்களில் தலை காட்டாமல் இருந்த பிரியா பவானி சங்கருக்கு இந்த படம், அடுத்த சுற்றுக்கான ஆரம்பமாக இருக்கும். விஷால் மீது காதல் கொண்டு, ஆனால் விஷால் ஏன் தன்னைக் காதலிக்கவில்லை என்பதில் குழப்பம் கொண்டு… அதில் தெளிவதில் பிரியா, திருப்தியாக நடித்திருக்கிறார். 

இதில் இரண்டு வேடங்கள் இருக்கின்றன என்பது அவருக்கு கிடைத்த டபுள் டமாக்கா.

“மக்களில் 60% அயோக்கியர்கள் இருக்க, 40% தான் நல்லவர்கள் இருக்க, இந்த 60% இருந்து 40% மக்களை காப்பதே என் வேலை…” என்று ரவுடித்தனத்துடன் கூடிய பாதுகாவலனாக இருக்கும் எம்எல்ஏ வேடம் சமுத்திரக்கனிக்கு. 

அவர் நடை உடை பாவனைகளில் ஒரு லைவ் சிஎம் ஐ நினைவு படுத்தினாலும் அவருக்கும் இந்த வேடத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று புரிந்து கொள்ள முடியும். 

ஆனால் இரண்டு அக்குளிலும் கட்டி வந்தவர் போலவே சமீபகால படங்களில் சமுத்திரகனி கையை விரித்து விரித்து பாடி லாங்குவேஜ் காட்டிக் கொண்டிருப்பது எதனால் என்பது புரியவில்லை. 

மெயின் வில்லனாக வரும் முரளி ஷர்மா மிரட்டி இருக்கிறார். அந்தப் பார்வையே கொடூரமாக இருக்கிறது. அவரது கரியரிலேயே இந்த வேடம் அவருக்குப் புதுமையானதாக இருக்கும். 

அவரது வலக்கையும் இடக்கையும் ஆக வரும் ஹரிஷ் பெராடியும், முத்துக்குமாரும் கூட மிரட்டுகிறார்கள். 

மாநில மந்திரியைக் கூட தன் வீட்டிலேயே வைத்து மிரட்டி “இதே இடத்தில் உன்னைக் கொன்று விடுவேன்…” என்று சொல்லக்கூடிய அளவுக்கு கொக்கரிக்கும் இந்தக் கொடூர வில்லன்கள் விஷால் வரும் காட்சிகளில் மட்டும் எதுவும் செய்யத் தோன்றாமல் ஏன் நின்று கொண்டே இருக்கிறார்கள் என்பதும் புரியாத லாஜிக்.

விஷாலின் நண்பராக வரும் யோகி பாபு அங்கங்கே கலகலக்க வைக்கிறார். ஆனால் சீரியசான காட்சிகள் வரும்போது அதற்கடுத்து இந்தக் காமெடி காட்சிகள் வருவது நெருடலாக இருக்கிறது.

ஒய் ஜி மகேந்திரன், விஜயகுமார், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் சின்ன சின்ன ஆனால் முக்கிய வேடங்களில் வந்து போகிறார்கள்.

விஷாலுக்குப் படத்தில் பூணூல் மாட்டி புதுமை படைத்திருக்கிறார் இயக்குனர் ஹரி. அத்துடன் முனீஸ்வரன் சிலைக்குக் கீழே வைத்து பஞ்சகச்சம் கட்டிய பிராமணர்கள் வில்லனை துண்டு துண்டாக வெட்டும் காட்சியும் தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதுமையானதுதான்.

யார் ஒளிப்பதிவைக் கையாண்டாலும் அவர்களை தன் வசப்படுத்தி விடும் ஹரி, கேமராவை சுற்றி சுழன்று அடிக்க வைத்து விடுவார். அப்படித்தான் இந்த பட ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கும் ஆகியிருக்கிறது. 

சும்மாவே டிஎஸ்பி இருக்கிற வாத்தியங்களை எல்லாம் போட்டு உடைக்கிற அளவுக்கு இசையமைக்கக் கூடியவர். அதிலும் இது ஹரியின் படம் ஆயி ற்றா..? அடித்து தூள் பறத்தி இருக்கிறார். 

வழக்கமாக படங்களில் முதல் அரை மணி நேரத்தைத் தவற விடாதீர்கள் என்பார்கள். ஆனால் இந்த படத்தில் கடைசி அரை மணி நேரத்தை தவற விட்டு விடவே கூடாது – அத்தனை அசுர வேகம். டிஎஸ்பி தன் வரலாற்றிலேயே அதிகபட்சம் மெனக்கெட்டது இந்த கிளைமாக்ஸ் சண்டைக்காகத்தான் இருந்திருக்கும்.

மோதிக் கொள்ளும் இரண்டு தரப்புக்கும் சமாதானம் செய்து வைக்க இரண்டு மாநில அரசுகளும் சேர்ந்து நியமிக்கும் ஐஏஎஸ் அதிகாரியாக வரும் கௌதம் மேனன் கூட ஹரியின் படமானதாலோ என்னவோ சட்டென்று டென்ஷன் ஆகி சவுண்டு விடுகிறார்.

தமிழக ஆந்திர எல்லை பகுதியை ஏதோ பாகிஸ்தான் பார்டர் ரேஞ்சுக்கு பதட்டமான பகுதியாகக் காட்டி இருப்பது எதற்காக என்று புரியவில்லை. தமிழக பார்டரை தாண்டி ஆந்திரா போய் வட்டால் தமிழன் உசிருக்கு உத்தரவாதம் இல்லை என்பது போன்ற தொனி படத்தில் இருக்கிறது..? (தெலுங்கில் தமிழ்நாட்டைச் சொல்வார்களோ..?)

ஒரு கதைக்கே திண்டாடும் சினிமா உலகில் ஏகப்பட்ட கிளைக் கதைகளை வைத்து இப்படி ஒரு கதை புனைந்த ஹரியின் ஆற்றல் அமேசிங்…

அதேபோல் அவர் ரசிகர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் அலாதியானது. ’25 வருடங்களுக்கு முன்னால்…’ என்கிற எந்தவிதமான அறிவிப்பும் போடாமல் தற்காலத்துக்கும் ஃபிளாஷ்பேக்கும் எந்த வித்தியாசமும் காட்டாமல் அடுத்தடுத்து கதை சொல்லிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறார். ரசிகர்கள் கரெக்டாக கேட்ச் செய்து விடுவார்கள் என்பது அவரது எண்ணம்.

ரத்னம் – யுத்தம் + ரத்தம்..!

– வேணுஜி