சிறந்த இயக்குனருக்கான அடையாளம், இதுவரை நாம் பார்த்திருக்கும் சிறந்த படங்களை விஞ்சி இன்னொரு படத்தைப் படைப்பதுதான் என்றிருக்க, இயக்குனர் வெற்றிமாறனோ இன்னும் ஒரு படி மேலே போய், தான் படைத்த சிறந்த படங்களையே கூட இந்தப் படத்தில் விஞ்சி நிற்கிறார்.
களம் நமக்கு நன்றாகத் தெரிந்ததுதான். பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டின் கனிம வளங்களைச் சுரண்ட நம் மலைப் பகுதிகளைத் தங்கள் வசப்படுத்த நினைப்பதுவும், அதற்கு நம் அரசு இயந்திரமும் துணை போக, அப்படி நேர்ந்து விடாமல் பாதுகாக்க முனையும் போராட்டக் குழுவினர் தீவிரவாதிகளாக அடையாளம் காணப்பட்டு வேட்டையாடப் படுவதும், இந்த இரண்டு விசையிலும் சிக்கி நசுக்கப்படும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையும்தான் அந்த(க)க் களம்.
ஆனால் கட்டளைகளுக்கு மட்டுமே அடிபணியும் வேட்டை விலங்குகளான அந்தக் காவல் படைக்குள் மனசாட்சி மிகுந்த ஒரு அப்பாவி இருக்க நேர்ந்தால் அவனது மன நிலை எப்படி இருக்கும் என்பதைக் கருப்பொருளாக்கி அதை நிஜ வாழ்க்கைக்கு சில அங்குல இடைவெளியில் காட்சிப்படுத்தி இருப்பதுதான் இந்தப் படத்தில் வெற்றிமாறனின் சாதனை.
அப்படி ஒரு அப்பாவி கான்ஸ்டபிளாக சூரி முதன்மைப் பாத்திரம் ஏற்றிருக்கிறார். ஒரு போலீஸ் வேலை கிடைத்த அப்பாவி கிராமத்தான் எப்படி இருப்பானோ அதில் அப்படியே துல்லியமாகப் பொருந்தி இருக்கிறார் சூரி. கடைநிலைக் காவலராக இருந்தாலும், தான் செய்தது சரிதான் என்று மேல்நிலை அதிகாரியிடம் மல்லுக்கு நின்று அதன் காரணமாகத் தொடர்ந்து தண்டனைக்கு ஆளாவதே அவர் மீதான நம் கரிசனப் பார்வையை அகல விரித்து வைக்கிறது.
காவலர்கள் எப்போதும் பொதுமக்களுக்கு உதவுபவர்கள்தான் என்ற தன் கொள்கையை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காத அவர் மீது அப்படி ஒரு பாசம் அந்த மலைவாழ் மக்களைப் போலவே நமக்கும் தொற்றிக் கொள்கிறது. அதிலும் நாயகி பவானிஸ்ரீக்கு அவர் செய்த உதவி காலத்தினால் செய்த உதவியாக இருக்க அது காதலுக்கான மூலைக்கல்லை ஊன்றி விட்டுப் போகிறது.
காவலர் கொட்டடிக்குள் மண்டியிட்டு தண்டனை பெறும் அத்தனை வலிகளுக்கும் அந்தக் காதல் மட்டுமே மயிலிறகு ஒத்தடமாக நிற்க, நெருப்பில் நின்றாலும் புடம் போட்ட தங்கமாகப் பூரித்து நிற்கும் சூரிக்கு இந்தப்படம் நடிப்பில் ஒரு நன்னம்பிக்கை முனை.
சூரி அடிப்படையில் நகைச்சுவை நடிகராக இருப்பதால் அங்கங்கே அவரைப் பார்த்து நாம் சிரிக்கவும் வேண்டும் என்பதை புரிந்து கொண்டிருக்கும் வெற்றிமாறன் அங்கங்கே சூரியைப் பார்த்து இயல்பு கெடாமல் நம்மைச் சிரிக்கவும் வைக்கிறார்.
போலீஸ் சித்திரவதை எப்படி இருக்கும் என்பதைத் தன் கண் முன்னால் பார்த்திருக்கும் சூரி தன் காதலியும் அந்த வன்முறை வளையத்துக்குள் வந்துவிட்டதும் அவளை எப்படியாவது காக்க முடிவு எடுத்து ஒவ்வொரு அதிகாரியின் அறைக்கும் ஓடி ஓடிச் சென்று தேடப்படும் குற்றவாளியைப் பிடிக்கும் அனுமதியைப் பெறும் காட்சியும், அதைத்தொடர்ந்த அந்த ஆபரேஷன் கோஸ்ட் உச்சக் காட்சியும் உலகப் பட உயரம் தொட வல்லவை.
அதே நேரத்தில் இந்தப் பக்கம் சித்திரவதை வளையத்துக்குள் மாட்டிக்கொண்டு நாயகி பவானி படும் துன்பமும், இந்தச் சித்திரவதை தீருவதற்குள் சூரி அவளை மீட்டு விடுவாரா என்கிற பதைபதைப்பும், நம்மை சினிமா பார்க்கும் உணர்விலிருந்தும், செல்போன் நினைவிலிருந்தும் ஒதுக்கி வைக்கிறது.
“நீ செஞ்சது தப்புதானடா..?” என்று கேட்கும் அதிகாரியிடம், “தப்புதான்யா… ஆனா அந்த சூழ்நிலைக்கு தப்பு இல்லைங்கய்யா..!” என்பதில் தொடங்கி…
ஒட்டுமொத்த போலீசும் யாரைத் தேடிக் கொண்டிருக்கிறதோ, அவர்களுக்கே தன் போலீஸ் ஜீப்பில் லிப்ட் கொடுத்து, “நீ போலீசுக்கு புதுசா..?” என்று கேட்கும் அவர்களின் நக்கல் புரியாமல், “எப்படிக் கண்டுபிடிச்சீங்க..?” என்பதில் தொடர்ந்து…
கடைசியில் அவர்களின் தலைவனே அவர் கையில் சிக்க, “ஐயா… சரண் அடைஞ்சிடுங்க ஐயா..!” என்று கெஞ்சுவது வரை சூரியின் வெள்ளந்தித்தனம் வெள்ளமாகப் பாய்கிறது.
சூரிக்கென்று இனி இயக்குனர்கள் கதையைத் தேட வேண்டியது காலத்தின் கட்டாயம். அதேபோல் தன் வீட்டில் விருதுகளுக்கான ஒரு அலமாரியை சூரி அமைக்க வேண்டியது அவசரமான அவசியம்.
இந்தப் படம் இத்தனை சாத்தியமானதற்கு இன்னொரு முக்கிய காரணம் உள்ளே விஜய் சேதுபதி வந்ததுதான். அவருக்கென்று விரிந்து கொடுத்த பட்ஜெட், அணு அணுவாக இந்தப் படத்தை ரசித்து எடுக்க வெற்றிமாறனுக்கு உதவியிருக்கிறது.
அதிரடிப்படை தேடும் போராளிகளின் தலைவன் பெருமாள் என்கிற வாத்தியாராக வரும் விஜய் சேதுபதி, இந்த முதல் பகுதியில் சில காட்சிகளில் மட்டும் தலை காட்டி இருக்கிறார். ஆனாலும் அவர் நடிப்பு பத்து தலைகளைத் தாண்டி விடுகிறது.
அநீதி கண்டு பொங்கும் அவர் சூரியின் அப்பாவித்தனமும் உதவும் குணமும் புரிந்து அவரை தண்டிக்காமல் விடுவதில் அவருக்குள் இருக்கும் அப்பழுக்கற்ற அப்பாவியும் வெளி வருகிறான்.
எந்த அதிரடிப்படையாலும் நெருங்க முடியாத தன்னை அந்த அப்பாவி சூரி துப்பாக்கி முனையில் நிறுத்தியது கண்டு பார்க்கிறாரே ஒரு பார்வை… அது அசாத்திய நடிப்பின் அற்புத வெளிப்பாடு.
அம்மணப் படுத்தினாலும் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து அதிகாரியிடம் பேசுகிற அந்தத் தோரணையில் இந்த விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்தையும் நம்மை ரொம்பவே எதிர்பார்க்க வைக்கிறார் விஜய் சேதுபதி.
காட்டு மல்லியாக கானகத்தில் திரியும் நாயகி பவானிஸ்ரீயும் படத்துக்குள் ஒளிரும் பளிங்குகளில் ஒன்று. ஒவ்வொரு ஆதரவாக அவரை விட்டு விலக, எஞ்சி நிற்கும் சூரியை ஒரே உறவாக அவர் ஏற்க நினைப்பது நடக்க வேண்டுமே என்று நம்மைப் பதற வைக்கிறது.
சூரி இருக்கும் கம்பெனியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சேத்தன், இந்தப் படம் ஓடும் தியேட்டர்கள் பக்கம் போகாமல் இருப்பது நல்லது. அவர் சூரிக்கு செய்யும் கொடுமைகளில் ஏதாவது ஒன்றை அவருக்கு ரசிகர்கள் செய்யக்கூடும்.
டிஎஸ்பியாக வரும் கௌதம் மேனன் சீராக வெட்டிய அவரது தலை முடியைப் போலவே நூல்கட்டி நடித்திருக்கிறார்.
ராஜீவ் மேனனா அது..? கற்றது அனைத்தும் அதிகார வர்க்கத்தின் கால்களைக் கழுவவே என்கிற ரீதியில் நடந்து கொள்ளும் தலைமைச் செயலாளராக புரோக்கன் தமிழ் பேசிக்கொண்டு… ஆஸம் மேனன் சார்..!
அமெரிக்கா போய் ஒன் டூ ஒன் பேசி காரியத்தை முடித்ததாக புருடா விடும் இணை அமைச்சர் இளவரசு உள்ளிட்டு இந்தப் பாத்திரம்தான் என்றில்லாமல் எல்லாப் பாத்திரங்களை ஏற்றிருப்பவர்களும் அவரவருக்கான அச்சில் பொருந்தி இருப்பது வெற்றிமாறனின் திறமையால் மட்டுமே என்பதை சொல்லத் தேவையில்லை.
வழக்கமாக இது போன்ற சமூக அரசியல் பேசும் படங்கள் ஒரு தரப்பு நியாயத்தைத் தூக்கிப் பிடித்தும் இன்னொரு தரப்பு நியாயத்தை கொஞ்சம் குறைத்துச் சொல்வதும் வழக்கம்.
ஆனால் இதில் அரசு மற்றும் காவல்துறை தரப்பு நியாயங்களையும் தீவிரவாதிகள் என்று அடையாளப் படுத்தப்படுகிற போராளிகளின் நியாயத்தையும் சரிசமமாக துலாக்கோல் பிடித்துச் சொல்லியிருக்கிறார் வெற்றிமாறன்.
அரசாங்க நடவடிக்கை என்றாலே அரசு அதிகாரிகள், காவலர்கள் எல்லாமே ஒரே உணர்வுடன்தான் செயல்படுவார்கள் என்ற பொதுப் புத்தியின் நினைப்பை மாற்றி காவல்துறைக்குள்ளும் பல அடுக்கு ஏற்றத்தாழ்வும் காழ்ப்புணர்ச்சியும் இருப்பதையும், காவல்துறையினருக்கு அரசின் மீது இருக்கும் கோபத்தையும் அவர்களின் நிலையாமையையும் மிகச் சரியாக இதில் சொல்லி இருக்கிறார் அவர்.
அரசு தரப்பின் விளக்கத்தை மட்டுமே தங்களுடைய மீடியாக்களில் செய்தியாக்கி ஆதிக்க வர்க்கத்தின் ஊது குழலாக மாறிப்போன மீடியாக்களையும் ஒரு பிடி பிடிக்கத் தவறாத வெற்றி மாறன்…
“பேரு தமிழரசியா… அதான் பேசறா..!” உள்ளிட்ட வசனங்களில் இந்த மண் பேசும் அரசியல் பொடியைத் தூவவும் மறக்கவில்லை.
நீண்ட காலம் கழித்து இளையராஜாவின் இசை 90களில் படம் பார்த்த அந்த இனிய அனுபவத்தை மீட்டு அல்லது மீட்டித் தருகிறது.
அதே நேரம் இரண்டரை மணி நேரப் படத்தின் இண்டு இடுக்கெல்லாம் பின்னணி இசைக்கிறேன் பேர்வழி என்று வரிசையான படங்களில் வாசித்துத் தள்ளும் சாம் சி.எஸ் போன்ற இசையமைப்பாளர்கள் இந்தப் படத்தில் இளையராஜாவுடைய பின்னணி இசையில் நிசப்தம் சொல்லும் பாடங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
படத்தின் தொடக்கத்தில் பதினைந்து நிமிடங்களுக்கு விரையும் அந்த ஒற்றை ஷாட் ரயில் விபத்துக் காட்சி ஒன்றே போதும் என்று சொல்லிவிட்டுப் போய் விட முடியாது. சூரியை அழைத்துச் செல்லும் காவலர் மலையேறுவதை பிரமாண்ட மலைக்காட்டில் அவர்கள் புள்ளியாகத் தேய்ந்து மறையும் வரையில் மேல் எழும்பும் காட்சியாக நீட்டியிருப்பது அடடா… கிளைமாக்ஸ் காட்சியில் கேமரா தவழ்ந்து, நுழைந்து, பறந்து, விரிந்து… திரையில் பார்த்து அனுபவியுங்கள்..!
கேமராவுக்குப் பின் இத்தனை ஜாலம் புரிந்த வேல்ராஜும் ஒரு காவலராக கேமராவுக்கு முன் வந்து ஆஜர் போட்டிருப்பதும் சிறப்பு.
இந்தப் படத்தில் இடம்பெற்ற அத்தனை கலைஞர்களின் அர்ப்பணிப்புக்கும் தலை வணங்கலாம்…
…என்ற நிலையில் இரண்டாவது பாகத்தைக் காணத் துடிக்கிறது மனம்.
இந்தப் படம் ஒரு சினிமாதான் என்று உணர வைக்க படத்தில் மூன்று, நான்கு இடங்கள் வருகின்றன. அவற்றையும் தன் அடுத்த படங்களில் தாண்டட்டும் வெற்றிமாறன்.
விடுதலை – விடுபடாத தாக்கம்..!
– வேணுஜி