December 2, 2024
  • December 2, 2024
Breaking News
April 3, 2023

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் ‘ரெயின்போ’வில் ராஷ்மிகா மந்தனா

By 0 276 Views

எஸ். ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தனது அடுத்த தயாரிப்பு ‘ரெயின்போ’ திரைப்படத்தை அறிவித்துள்ளது. நடிகை ரஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க, ஃபேண்டஸி கலந்த காதல் திரைப்படமாக உருவாகவுள்ளது. 

தங்களின் முதல் படைப்பிலிருந்தே, தனித்துவமான கதைககளன்களுடன், தரமான திரைப்படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம். ‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’, ‘கைதி’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தொடர்ந்து தங்களின் முத்திரையைப் பதித்து வரும் ட்ரீம் வாரியர், தங்களின் அடுத்த தயாரிப்பாக ராஷ்மிகா நடிப்பில் ‘ரெயின்போ’ படத்தை அறிவித்துள்ளது. 

சாந்தரூபன் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் தேவ் மோகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கே எம் பாஸ்கரன் ஒளிப்பதிவை கவனிக்கவுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளாராக தேசிய விருது பெற்ற பங்களான் பொறுப்பேற்றுள்ளார். 

“வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு படைப்பாக ‘ரெயின்போ’ இருக்கும் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. எங்களின் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஏகோபித்த வரவேற்பையும், வாழ்த்தையும் தந்து வரும் ரசிகர்கள், ‘ரெயின்போ’வையும் அதே அளவு ரசிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம். படத்தின் அற்புதமான நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இதைச் சாத்தியமாக்குவார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ். ஆர். பிரபு

படத்தின் அறிமுக இயக்குநர் சாந்தரூபன் பேசுகையில், “இதுவரை இந்திய சினிமா பார்த்திராத ஒரு காதல் ஃபேண்டஸி கதையாக ‘ரெயின்போ’ இருக்கும். ராஷ்மிகாவின் வேறொரு பரிமாண நடிப்பை நீங்கள் திரையில் பார்ப்பீர்கள். புதுமையான கதைக்களன் கண்டிப்பாகப் படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் ஆச்சரியப்படுத்தும்” என்று கூறியுள்ளார். 

நடிகை ரஷ்மிகா பேசுகையில், “ஒரு பெண் கதாபாத்திரத்தின் பார்வையில் சொல்லப்படும் கதையில் முதல் முறையாகப் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்துக்குத் திரையில் உயிர் கொடுக்க ஆவலாக இருக்கிறேன். உங்களை பொழுதுபோக்கும், ஆச்சரியப்படுத்தும் ஒரு படமாக ரெயின்போ இருக்கும். அந்தப் பெண் கதாபாத்திரத்துடனான ரசிகர்களின் பயணம் உற்சாகமானதாக இருக்கப் போகிறது. அதற்குத் தயாராகுங்கள்” என்று கூறியுள்ளார். 

இன்று பூஜையுடன் ‘ரெயின்போ’ படத்தின் தயாரிப்பு தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு ஏப்ரல் 7 அன்று ஆரம்பமாகிறது.