April 2, 2025
  • April 2, 2025
Breaking News
March 28, 2025

வீர தீர சூரன் பார்ட் 2 திரைப்பட விமர்சனம்

By 0 107 Views

ஒரு சூரனின் வீர தீரத்தை சொல்வதுதான் கதை. அந்த சூரன் சீயான்தான் என்று சொல்லத் தேவையில்லை.

ஆனால் படம் ஆரம்பித்து 20 நிமிடங்கள் கழித்துதான் திரையில் வருகிறார் விக்ரம். அதுவரை பரபரக்கும் திரைக்கதையில் எஸ்.ஜே. சூர்யாவும், மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவும் மாறி மாறி ஸ்கோர் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் இன்னும் கொஞ்ச நேரத்தில் சீயான் திரையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொள்ளப் போகிறார் என்கிற ‘கெத்து’தான்.

பெரியவர் ரவி அவர் மகன் கண்ணன் என்று மிரட்டிக் கொண்டிருக்கும் இரு பெரும் தாதாக்களைப் பலகாலம் காத்திருந்து ஒரே இரவுக்குள் என்கவுண்டரில் போட்டுத் தள்ளத் துடிக்கிறார் எஸ். பி.அருணகிரி.

இந்தப் பாத்திரங்களில் முறையே தெலுங்கு நடிகர் பிருத்வி, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் எஸ்.ஜே.சூர்யா வருகிறார்கள்.

இதற்கு எஸ்.ஜே.சூர்யா குறித்து இருக்கும் நாள் ஒரு திருவிழா இரவு.

இந்த விஷயம் சூட்டோடு சூடாக பிருத்விக்கு எட்ட, மகன் சுராஜைத் தலைமறைவாக இருக்கச் சொல்லி அனுப்புகிறார். ஆனால் வெறி கொண்ட சுராஜோ அதே இரவில் எஸ்பியை தீர்த்துக்கட்டத் துடிக்கிறார். அதே வெறி பிரித்விக்கும் இருந்தாலும் கொஞ்சம் விவேகமாக சிந்தித்து அந்தப் பழி தங்கள் மேல் வரக்கூடாது என்று, ஒரு காலத்தில் தங்கள் ‘ரூட்டு தல’ யாக இருந்த காளி என்கிற விக்ரமிடம் உதவி கேட்கிறார்.

ஆனால், இதையெல்லாம் விட்டு வெகு தூரம் விலகி வந்த விக்ரம் தன்னுடைய காதல் மனைவி துஷாரா, இரு குழந்தைகள் மற்றும் அம்மாவுடன் அமைதியான வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், பெரியவர் காலில் விழுந்து கேட்பதில் மனம் உருகிய அவர் மனைவியின் பேச்சையும் மீறி எஸ்பி எஸ்.ஜே.சூர்யாவை தீர்த்துக்கட்டப் புறப்பட, அந்த இரவுக்குள் என்னென்ன காட்சிகள் எப்படி எப்படி அரங்கேறின, எத்தனை திருப்பங்கள் நிகழ்ந்தன, எப்படி முடிந்தன என்பதெல்லாம் பரபரவென்று மூச்சு முட்டும் திரைக்கதையில் நடந்து முடிகின்றன.

ஆனாலும் சீயானைப் போல் வேறு ஒரு முதல்நிலை ஹீரோவுக்கு இப்படி ஒரு தில் இருக்க முடியாது. படம் முழுவதும் ஒரே ஒரு அழுக்கு வேட்டி, அழுக்கு சட்டைதான் அவரது காஸ்டியூம். ஒரு சின்ன பிளாஷ்பேக்கில் மட்டும் பட்டு வேட்டியும், பட்டுச்சட்டையும் அணிந்திருக்கிறார் – அது அவரது திருமண நாள் என்பதால்.

அதையும் ஒரு காட்சியில் அவிழ்த்துப் போட்டுவிட்டு வெறும் அரைக்கால் சட்டையுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சேரும் இளைத்த உடலில் மலைக்க வைக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் மற்றவர்களைக் காட்டிலும் நடிப்பதற்கான ஸ்கோப் இல்லாத வேடம் சீயானுக்கு. அவர் நடிப்பை காட்டவென்று தனியான காட்சிகள் எதுவும் இல்லை.

இதையெல்லாம் எப்படி செய்கிறேன் பாருங்கள் என்கிற அலட்டல் இல்லாமல் அவர் பாட்டுக்கு அநாயசமான விஷயங்களை போகிற போக்கில் செய்து கொண்டு போகிறார். கட்டியிருக்கும் வேட்டியை உதறிக் கட்டும்போது மேனரிஸத்திலும் மண்வாசனை பறக்கிறது..!

இடையில் துஷாராவிடம் செய்யும் காதல் சில்மிஷங்கள் எல்லாம் ஆம்பூர் பிரியாணிக்கு அடுத்து வரும் ஸ்வீட் பீடாக்கள்.

மிடில் ஆர்டரில் களம் இறங்கும் தோனியைப் போல பிருத்வி, எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் என்று மூன்று நடிகர்களும் படத்தொடக்கத்திலேயே ரவுண்டு கட்டி அடிக்க சாவதானமாக உள்ளே வந்து படம் முழுவதும் தன் ஆளுமையைச் செலுத்தி அண்டர் பிளேவிலேயே வெளுக்கிறார் சீயான்.

அவருடன் நடிப்பில் ஜோடி போட்டு மிரள வைக்கிறார் துஷாரா. எந்த நேரத்தில் வெளியே போய் என்னென்ன பிரச்சனைகளைக் கொண்டு வருவாரோ என்று கணவன் மீதான சந்தேகப் புதைபதைப்பை படம் முழுவதும் வெளிக்காட்டி இருக்கும் துஷாரா…

பெரியவரும் சீயானும் ரகசியமாகப் பேசுவதை வேவு பார்க்க மகனைத் தூது அனுப்பும் போது செம ‘உஷாரா..!’

பெரியவரிடம் உக்கிரத்தைக் காட்ட முடியாமல் சிரித்துப் பேசிக் கொண்டே அவர் பின்னால் இருக்கும் அடியாளைப் பார்த்து ஒரு மிரட்டு மிரட்டும் போது, எஸ்.ஜே.சூர்யாவின் ‘எஸ்ஜேயிஸம்’ அரங்கேறி விடுகிறது. அதேபோல் எப்படி என்கவுண்டர் செய்யப் போகிறோம் என்பதை ரசித்துச் சொல்வது அந்த ‘எஸ்ஜேயிஸத்தில் ஆஸம்..!

எதிர்பாராத இடைச் செருகலாக விக்ரம் இந்தப் பிரச்சனைக்கு உள்ளே வந்ததும் குழம்பி அந்தக் குழம்பிய குட்டையிலும் ஒரு மீனைப் பிடிக்க நினைப்பது குரளி வித்தை.

முரட்டுத்தனத்தையும், வன்மத்தையும் மட்டுமே நம்புவதை தன் முகக்குறிகளிலேயே உணர்த்தி விடும் சுராஜ் வெஞ்சரமூடுவின் ‘எவர்கிரீன் வஞ்சக மூடு’ வும் ‘ டெரர்’ கிளாஸ். தன்னைக் காட்டிக் கொடுத்த விக்ரமை அவரிடமே போட்டு வாங்கிப் பழிதீர்க்க முயல்வது வேற லெவல் வெறி.

தன் மகனை ஒரே இரவில் காவு கொடுக்க விரும்பாமல் எவர் காலையும் பிடிக்கத் தயாராகும் ரிடையர்டு தாதா பிருத்வியும் அங்கங்கே பிரித்து மேய்கிறார்.

ஆனால் இவர்கள் எல்லோருமே ஊரறிந்த… நாடறிந்த நடிகர்களாக இருப்பதால் இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை.

ஆனால் இவர்களின் அடுத்த வளையத்தில் வெங்கட்டாக வரும் பாலாஜி எஸ்.யுவின் நடிப்பு அபாரம். அந்த ஒரே இரவு தரும் பதட்டத்தில் இரண்டு முறை வலிப்பு வரும் அவரது விசுவாசம், இருளிலும் பிரகாசம்..!

அவர் மட்டுமல்லாமல் பெரியவரின் குடும்பத்தில் உள்ள அத்தனை உறுப்பினர்களும், குறிப்பாக பெண்களும் கூட நாடி நரம்பில் எல்லாம் ஒரு ரவுடித்தனத்தை நடிப்பில் ஓட்டி மிரள வைக்கிறார்கள்.

இது அத்தனைக்கும் சூத்திரதாரியாக இருக்கும் இயக்குனர் எஸ்.யு.அருண்குமார், தமிழின் முக்கியமான இயக்குனராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

ஒரு திருப்பத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் கையில் இருக்கும் அதிகாரம் அப்படியே சுராஜின் கைகளுக்குத் திரும்பி அவர் எஸ்.ஜே.சூர்யாவைத் துரத்துவதும் இந்த இருவருக்கும் இடையில் ஒரு பக்கம் தலையையும் இன்னொரு பக்கம் வாலையும் காட்டிக் கொண்டு விலாங்குமீனாக விக்ரம் ஓடிக் கொண்டிருப்பதையும் சிங்கிள் ஷாட்டில் கொண்டு வந்திருக்கும் வித்தையில் கோலிவுட் படத்தை ஹாலிவுட் தரத்துக்கு உயர்த்தி இருக்கிறார் எஸ் யு ஏ.

இந்த ஒரு காட்சியைத் திரைப்படக் கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கலாம்.

விக்ரம் ‘ கிழங்கு ‘ புதைக்கும் காட்சி தரும் டென்ஷனில் கிட்டத்தட்ட நம் இதயம் வயிற்றுக்குள் புதைந்து விடுகிறது.

மேற்படி காட்சிகளுக்கு ஏற்ப ஒளி அமைத்து… அல்லது இருள் அமைத்து படமாக்கிய தேனி ஈஸ்வருக்கு ஒரு படத்துக்கான சம்பளத்தை இனாமாகக் கொடுத்தாலும் தகும்.

தான் நடிக்கும் படங்களைத் தவிர மற்ற எல்லா ஹீரோக்களுக்கும் மிகச் சிறப்பாக இசையமைக்கும் ஜிவி பிரகாஷ், இந்தப் படத்திலும் அதை நிரூபித்திருக்கிறார். விக்ரம் வெகுண்டு எழும் காட்சிகளில் வரும் அந்த தீம் மியூசிக் மட்டுமல்லாது, பரபரப்பான இடங்களிலும் நம்மை நகம் கடிக்கச் செய்யும் நகாசு வேலைகளைப் பார்த்திருக்கும் ஜீவி, பின்னணி இசையில் ஒரு ‘மியான்மர் பயங்கரம்’ காட்டி விடுகிறார்.

எடிட்டர், கலை இயக்குனர் என்று படத்தின் ஒட்டு மொத்த டீமும் இந்த ஓர் இரவு படத்துக்காக பல இரவுகள் தூங்காமல் உழைத்திருப்பது புரிகிறது.

நுணுக்கி நுணுக்கிப் பார்த்தால் நூறு குறைகள் இந்தப் படத்தில் இருக்கலாம். லாஜிக் மீறல்களும் இருக்கவே செய்கின்றன. காலில் கம்பி கட்டி இழுக்கும் கிளைமாக்ஸ் நம்பமுடியாத கம்பி கட்டலாக இருந்தாலும், தொடங்கிய இடம் கடைசியில் மேடை நாடகமாக முடிவடைந்தாலும், மதுரைப் பெரியவர் தெலுங்கு வாடையிலும் மகன் மலையாளத் தமிழிலும் பேசிக் கொண்டிருந்தாலும், முதல் பாதியின் பரபரப்பைப் பின்பாதி தக்க வைக்காமல் போனாலும்…

அதெல்லாம் வழக்கமான ரசிகத் தனத்துக்கு எந்த இடையூறும் தருபவையாக இல்லை.

அதற்கு மேல், படத்தில் பங்கு பெற்ற ஒவ்வொருவரின் அர்ப்பணிப்புக்கும் வந்தனம் சொல்லி சந்தனம் தெளிக்கலாம்.

இந்த பார்ட் 2 வை பார்க்கும்போது முதல் பார்ட்டும், ‘முதலுக்கு மோசம்’ இல்லாமல் வரும் என்று தெரிகிறது..!

சூர(ன் நிகழ்த்தும்) சம்ஹாரம்..!

– வேணுஜி