நீரிழிவு நோய் மையங்களுக்குப் போட்டியாக அங்கங்கே முளைத்து வருகின்றன செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள். அவற்றில் என்ன விதமான மோசடிகள் நடக்கின்றன – அல்லது நடக்கலாம் என்பதை முன்வைத்து சொல்லப்பட்ட கதை இது.
இதை ஹைப்பர் லிங்க் முறையில் நான்கு தனித்தனி கதைகளாகச் சொல்லி ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக ஒன்று சேர்க்கும் இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன், அதில் சமுதாயத்துக்கான ஒரு கருத்தையும் சொல்லியிருக்கிறார்.
ஒரு பக்கம் குழந்தை பிறக்க வழி இல்லாத நிலையில் விவேக் பிரசன்னாவும் சாந்தினி தமிழரசனும் மன வலியுடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் தரும் நண்பனாக அனந்த் நாக் இருந்து வருகிறார்.
இன்னொரு பக்கம் பார்த்தோசும் பூர்ணிமா ரவியும் தற்காலக் காதலர்களாக வருகிறார்கள். பூர்ணிமா ராவின் தந்தை ஆட்டோ ஓட்டுநராக மாரிமுத்துவும், தாயாக ரமாவும் வருகிறார்கள்.
மற்றொரு பக்கம் கார்களைத் திருடி விற்கும் வேலையை செய்து வருகிறார் ஈஸ்வர். அதற்காகக் கடத்தப்படும் காரில் ஒரு சடலம் இருக்க, போலீஸ் பிடிக்கிறது.
நான்காவது இழையில் செயற்கைக் கருத்தரிப்பு மையம் ஒன்றே நடத்தி வருகிறார் பிரதீப், கே.விஜயன். இவை எல்லாமும் சந்திக்கும் புள்ளியில் என்னென்ன விளைவுகள் என்பது மீதிக் கதை.
இந்தப் படத்தில் கதைநாயகனாகத் தேர்வு பெற்று இருக்கிறார் விவேக் பிரசன்னா. அதற்காகத் தனியான மெனக்ககெடல் எதுவும் இல்லாமல் அவருடைய வழக்கப்படியே பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். குழந்தையில்லாத குறையை… அதுவும் அது தன்னால்தான் என்று தெரிந்து அதை உள்ளே வைத்துப் புழுங்கும் பாத்திரத்தில் அருமையாகச் செய்திருக்கிறார்.
சாந்தினியின் நடிப்பும் கச்சிதம். குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்தவர் அதன் பின் கருத்தரிக்கும் நிலையின் மகிழ்ச்சியை மிகச் சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
நண்பனாக வரும் அனந்த் நாக் கொடுக்கும் அதிர்ச்சி, உண்மையிலேயே பேரதிர்ச்சிதான்.
ரசிக்க வைக்கும் பூர்ணிமா ரவி – பார்த்தோஷ் ஜோடியில் இருவருமே பாத்திரம் உணர்ந்து நடித்திருந்தாலும் பூர்ணிமா ரவி சற்று தன் பங்கைத் தூக்கலாகச் செய்து மனதில் இடம் பிடிக்கிறார். அவருடைய பாத்திரத் திசைமாற்றம் அபாரம்.
பூர்ணிமா ரவியின் தந்தையாக நடித்திருக்கும் மாரிமுத்து மற்றும் ரமா நடுத்தர குடும்பத்துப் பெற்றோரைக் கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இன்ஸ்பெக்டராக வரும் சஞ்சீவ், கான்ஸ்டபிளாக வரும் வையாபுரி மற்றும் முதல் அமைச்சராக வரும் நிழல்கள் ரவி என அனைவரும் தங்கள் அனுபவ நடிப்பை அசால்டாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
சீனிவாசன் ஒளிப்பதிவும், ஆர்.எஸ். ராஜபிரதாப்பின் இசையும் படத்தின் தேவையை நிறைவு செய்திருக்கின்றனர்.
இப்படி ஒரு கதைக்குள் ஒரு மெசேஜையும் சொல்ல நினைத்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம். எதிர்காலத்தில் செயற்கை கருத்தரிப்பு மையத்துக்குப் போனால் மட்டுமே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிற நிலை வரலாம் என்ற எச்சரிக்கை மணியை அவர் அடித்திருக்கிறார். அதற்குத் தீர்வாக ஆதரவற்ற ஒரு குழந்தையை தத்தெடுத்தல் நலம் என்ற செய்தியும் சிறப்பு..
என்ன ஒன்று… இந்தப் பிரச்சினையை ஒரு ஆய்வுக்குள்ளாக்கி அதன் அடிப்படையில் திரைக்கதையை அமைத்திருந்தால் உண்மையும், நம்பகத் தன்மையும் மிகுந்திருக்கும்.
ட்ராமா – செண்டிமெண்டல் த்ரில்லர் டிராமா..!
– வேணுஜி