தெலுங்கு ஹீரோக்களை நாம் எப்போதுமே கிண்டல் செய்து கொண்டிருக்கிறோம் (படங்களில்தான்…) ஆனால், அவர்கள்தான் இன்று இந்திய ஹீரோக்களுக்கே முன் மாதிரியாக நிஜத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடையாமல் இருக்க இந்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவு மிக்க அவசியமான ஒன்று. ஆனால், அதற்கு உண்டாகும் செலவினங்கள் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களைச் சீர் செய்ய அரசின் நிதி மட்டும் போதாது என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
எப்படி பேரிடர் காலங்களில் தொழிலதிபர்கள் மற்றும் செல்வந்தர்கள், வசதி படைத்த கலைஞர்கள் அரசுக்கு நிதி உதவி அளிப்பார்களோ, அப்படி இப்போதும் நிதி அளிக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது.
அதைப்புரிந்து கொண்டு தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான பவன் கல்யாண் இரண்டு கோடி ரூபாயை பிரதமர் மற்றும் ஆந்திர, தெலங்கானா முதல் அமைச்சர்களின் நிவாரண நிதிக்கு அளித்திருக்கிறார். அவரைப் பார்த்து அவரது அண்ணன் மகனான ராம் சரண் 75 லட்ச ரூபாயை மேற்படி பிரதமர் மற்றும் முதல் அமைச்சர்களின் நிவாரண நிதிக்கு அளித்திருக்கிறார்.
இவர்கள் இருவரைத் தொடர்ந்து பிரபாஸ் 4 கோடி ரூபாய் கொடுத்து இருக்கிறார். (எவ்வளவு பெரிய மனசு ..?) பாதிக்கப்பட்டிருக்கும் சினிமா தொழிலாளர்கள் நலனுக்காக சிரஞ்சீவி ஒரு கோடி ரூபாய் கொடுத்து இருக்கிறார்.
இந்நிலையில் அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் மற்றும் இந்தி ஹீரோக்கள் இவ்வழியில் நிவாரண நிதிக்கு முன்வந்து நிதி அளிப்பார்களா..? அளிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்..!