உங்களுக்கு, எனக்கு ஏன் எல்லோருக்குமே தெரிந்த ஊரறிந்த… உலகறிந்த கதைதான். மனிதனின் அவசியத் தேவைகளான உணவு, உடை, வீடு இவற்றில் மத்திய மற்றும் அதற்கும் கீழான நடுத்தர வர்க்கத்தின் நிலை எப்போதும் மோசம்தான். அதிலும் அடுத்தவரை நம்பியிருக்கும் வாடகை வீட்டுப் பிரச்சினை அலாதியானது.
அதை இயல்பு கெடாமல் துயரங்களைத் துருத்தாமல் கொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளர் – இயக்குநர் செழியன் பாராட்டுக்குரியவர். அத்துடன் நில்லாமல் 32 உள்நாட்டு, வெளிநாட்டுப் பட விழாக்கள் பாராட்டி விருது வழங்கியிருப்பதே அதற்குச் சான்று. அந்தப் பெருமையே இந்தப் படத்தைத் தவிர்க்காமல் பார்த்துவிட ஆவலைத் தூண்டியிருக்கிறது.
கதை மேற்படி சொன்னதுதான். காதல் மணம் செய்த மனைவி, பள்ளி செல்லும் மகன் என்று வாழும் சினிமா கதாசிரியர்தான் கதை நாயகன். அவர்கள் குடியிருக்கும் வீட்டை உடனடியாகக் காலிசெய்யச்சொல்லி வீட்டு உரிமையாளர் சொல்லிவிட, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர்களுக்கு வேறு வீடு கிடைத்ததா என்பதுதான் படம்.
சாதாரண தொழிலாளிகளுக்கே வீடு கிடைக்காத நிலையில் முறையான வருமானம் இல்லாத சினிமா கதாசிரியரை நம்பி எப்படி வீடு விடுவார்கள்..? அந்தப் போராட்டத்தையும் அவர்கள் வாழ்க்கை முறையையும் துல்லியமாகவே திரை மொழியில் சொல்லியிருக்கிறார் செழியன்.
கதை (எழுதும்) நாயகனாக வரும் சந்தோஷ் ஸ்ரீராம், பாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாக செய்திருக்கிறார். கதை எழுதும்போது கதையின் பாத்திரங்களில் மனம் லயித்து அவர் அழுவதும், வீட்டு உரிமையாளரின் இம்சை தாங்காமல் அவர்களைப் பிடி பிடியென்று பிடிக்கப்போய் அது முடியாமல் திரும்புவதும் நல்ல நடிப்பு முத்திரைகள்.
அவரது மனைவியாக வரும் ஷீலா ராஜ்குமாரும் உணர்வுகளை உண்மையாக வெளிப்படுத்தியிருக்கிறார். கணவன் அளவுக்கு பொங்கியெழ முடியாவிட்டாலும் தன்னளவில் வீட்டுக்குள் வீட்டு உரிமையாளரைத் திட்டித் தீர்ப்பது இயல்பான பதிவு.
விரலுக்கேற்ற வீக்கமாக வசதிக்கேற்ற வீடு கிடைத்தும் அந்த வீட்டுக்குத் தாங்கள் அட்வான்ஸ் கொடுப்பதால் அங்கே தங்கியிருக்கும் நோயாளிகளான வயசாளிகள் தங்களைப் போன்றே துன்பப்பட நேரும் என்று புரிந்து அங்கிருந்து அவர்கள் விலகுவதும், அதைத் தனியாக சொல்லிக்காட்டாத இயக்குநர் நம்மைப் புரிந்து கொள்ள வைத்திருப்பதும் தேர்ந்த பதிவு.
அதேபோல் தங்கள் வசதிக்கு மேலேயே ஒரு வீடு கிடைக்க, அது தங்கள் வசமாகிவிடாதா என்று எதிர்காலக் கனவு ஆரம்பித்து விடுவதும் எல்லா நடுத்தரக் குடும்பவாசிகளின் வேட்கை. வாடகை வீடே பிடிக்க முடியாத நிலையில் எல்கேஜி படிக்கும் மகனின் எதிர்காலம் குறித்து ஷீலா கனவு காண்பது மனதை நெகிழ வைக்கும் இடம்.
அதேபோல் அட்வான்ஸ் கொடுக்க தன் கதையை இன்னொருவர் பெயரில் விற்றுவிட சந்தோஷ் முயலும்போது தன் சொற்ப நகைகளைக் கொடுத்து ஷீலா அதைத் தடுப்பது கண்கலங்க வைக்கிறது.
வாடகை வீடு என்ற பெயரில் சிறைச்சாலைகளைப்போல் இருக்கும் பல வீடுகளைக் காட்டி, அதன் உரிமையாளர்கள் போடும் கண்டிஷன்களையும் காட்டி பதைபதைக்க வைக்கிறார் செழியன்.
பெரும் செல்வந்தர்கள் பொய்களாலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் உலகில் சந்தோஷ் சொன்ன ஒற்றைப்பொய் அவரது ஆசை வீட்டுக் கனவைக் கலைத்துப்போடுவதில் முடிகிற படம் பார்ப்பவர்களின் மனத்தில் அப்படியொரு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
சந்தோஷ் – ஷீலாவின் மகனாக வரும் குட்டிப்பையன் தருணும் நடிப்பது தெரியாமலேயே வாழ்ந்திருக்கிறான். அவர் சுவற்றில் வரைந்த படங்களை அவனை விட்டே அழிக்கச்சொல்வது அவன் அளவில் பெருத்த வலி. அடுத்து குடிபோகும் வீட்டில் தான் சுவற்றில் வரைய மாட்டேன் என்பதும் நெகிழ்ச்சியான இடம். தங்கள் அனுபவத்தில் தான் வரைந்த வீடு படத்தில் அவன் ‘டூலெட்’ போர்டு வரைவதும், வீடு பார்ப்பதை அவன் நடித்துக் காட்டுவதும் ஓவியமான காட்சிகள்.
வீட்டு உரிமையாளராக வரும் ஆதிராவும் தன் நடிப்பால் நம் மனத்தில் பதட்டத்தை ஏற்படுத்துகிறார். வாடகைப் பணத்தை வாங்கிக் கழுத்தைச் சொரிவது மட்டும் சினிமா க்ளிஷே.
வாழ்க்கையாகிப் போன படத்தில் வீட்டு உரிமையாளர்களில் நல்லவர்களே இல்லை என்பது போன்ற மாயை தெரிவது மட்டும் நம்பும்படியாக இல்லை. அதேபோல் ஆயிரம் ஆயிரமாக சின்மாவில் சந்தோஷ் சம்பாதித்துக் கொண்டு வருவதும் நம்பகமாக இல்லை. அதுபோன்றே கிடைத்த வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில் வாடகைக்கு இருப்பவர்களின் பொறுப்பும் இல்லையா என்ன..?
அடுத்து வாடகைக்கு வரவிருப்பவர்கள் வீடு பார்க்க வரும்போது ஏன் சந்தோஷும், ஷீலாவும் குற்றவாளிகள் போல் கூனிக் குருகி நிற்கிறார்கள் என்பதும் புரியவில்லை.
இப்படி சில குறைகளைத் தாண்டியும் படம் விருதுகளுக்கு உரியதாக இருக்கிறது.
டூ லெட் – நம்ம ஊரின் நல்ல படைப்பு உலகமெல்லாம் சுற்றி நம் பார்வைக்கு வந்ததில் ‘டூ லேட்..!’
-வேணுஜி