சினிமாவைப் பொறுத்தளவில் எல்லாமே ஹீரோதான் என்ற நிலைதான் இன்றும், அன்றும். ‘அப்படி இல்லை’ என்பதை அந்த ஹீரோவே சொன்னால்தான் உண்டு. ஆனால், அவர்களும் அப்படிச் சொல்லாமல் எல்லாப்புகழையும் தாங்களே அறுவடை செய்துகொண்டு போகிறார்கள்.
இவர்களுள் வித்தியாசமான ஹீரோ விஜய் ஆண்டனி. அவரே நடித்து இசைமைத்திருக்கும் படமான ‘திமிரு புடிச்சவன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் “இயக்குநர்தான் ஒரு படத்தின் ஹீரோ…” என்று சொல்லியதுடன் நிற்காமல் படத்தின் இயக்குநர் கணேஷாவுக்கு ஆளுயர மாலை ஒன்றை அணிவித்து அவரை கௌரவப்படுத்தினார்.
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் படம் இது. ‘ஸ்கிரீன்சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட்’ தமிழகம் முழுக்க வெளியிடும் இந்தப் படம் வரும் தீபாவளி அன்று வெளியாகிறது.
பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கலைஞர்களையும் தனித்தனியாக தேடிப்பிடித்து அழைத்து மேடையில் ஏற்றினார் விஜய் ஆண்டனி. அவர்களுள் படத்தில் முக்கியக் கேரக்டரில் நடித்திருக்கும் சிந்துஜா என்ற திருநங்கையும் ஒருவர்.
அவர் பேசுகையில் “தமிழ் சினிமாவில் ஒரு திருநங்கையை ஒரு முழுநீள கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த விஜய் ஆண்டனி, கணேஷா சாருக்கு நன்றி. முதல் திருநங்கை சப் இன்ஸ்பெக்டர் ப்ரீத்திகா அவர்களின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். திருநங்கைகள் வாழ்வில் இந்தப் படம் முக்கிய திருப்பமாக இருக்கும்..!” என்று நெகிழ்ந்தார்.
விஜய் ஆண்டனி பேசும்போது, “”தனிமரம் தோப்பாகாது என்பது போல இதில் என் பங்கு குறைவுதான். இந்தப் படத்தை உருவாக்க கணேஷா சார் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார். கடந்த இரண்டு படங்கள் வியாபார ரீதியாக சரியாகப் போகவில்லை. படத்தின் வேலை முடிந்ததால் தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம்.
முடிந்த படத்தைத் தள்ளிக்கொண்டே போனால் கடன்தான் அதிகமாகும். அதனால்தான் இதை வெளியீடு விட்டு அடுத்த ‘கொலைகாரன்’ பட வேலைகளைப் பார்க்கப் போகிறேன்.
தீபாவளிக்கு ஆரம்பித்து தீபாவளிக்கு முடிவது போலான கதை என்பதால் அதற்குப் பொருத்தமாகவும் இருப்பதோடு இயக்குனருக்கும் தீபாவளிக்கு ஒரு படம் வெளியாகட்டும் என்றும் ரிலீஸ் செய்கிறோம். இதைத் தவிர வேறெந்த காரணமும் இல்லை.
இந்தப் படத்தில் ரொமான்ஸ் இல்லை, இந்த படத்துக்குப் பிறகு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கப் பயிற்சி எடுக்க இருக்கிறேன்..!” என்றார்.
பார்த்து சார்… ‘மி டூ’ வில சிக்காத அளவுல பயிற்சி எடுங்க..!