பாலியல் வன்முறை செய்தவர்களை பழி வாங்கும் கதைகள் இந்திய படங்களில் நிறையவே வந்துள்ளன. அவற்றில் காமுகர்களை பிடித்துவந்து கொல்வதில் தொடங்கி அவர்களின் ஆணுறுப்பை அறுப்பது வரை பலவிதமான கதைகள் இங்கே சொல்லப்பட்டு இருக்கின்றன.
இப்படிப்பட்ட கதைகள் எல்லாமே சட்டப்படி தவறானவை என்றாலும் அவை மக்களிடம் வரவேற்பு பெறுவதற்கு காரணம், சட்டப்படி அப்படிப்பட்ட குற்றத்துக்கு நீதி மன்றம் சென்றால் நீதி தாமதப்படுவதும் மறுக்கப்படுவதும்தான்.
அப்படியே தாமதப்பட்டு நீதி கிடைத்தாலும் அதன் தண்டனை மிகவும் குறைவானதாகவே இருக்கிறது. ஆனால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு அது காலம் தோறும் தாங்க முடியாத மன வேதனையை ஏற்படுத்திவிடுகிறது.
அப்படி நீதி மறுக்கப்பட்ட ஒரு பெண்ணின் தந்தை அதில் குற்றமிழைத்த இளைஞனை எப்படி காலமெல்லாம் நினைத்து வருந்தும்படி தண்டித்தார் என்பதுதான் இந்த படத்தின் கதை.
வழக்கமாக தன் படங்களில் ஆக்ஷன் காட்சிகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளும் சத்யராஜ் இந்தப்படத்தில் தன் வயதுக்கேற்ற வேடத்தில் ஒரு தந்தையாக தன் மகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய இளைஞனை என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறார்.
பாத்திரத்தின் படி ஒரு மருத்துவராக வரும் அவர் அந்த வழியிலேயே பழி தீர்ப்பதை மிகவும் துல்லியமாக இதுவரை யாரும் செய்யாத வகையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் தீரன்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையாக வருவதனால் அந்த வயதுக்குரிய முதிர்ச்சி, தளர்ச்சி மற்றும் வேதனையுடன் தன் தோற்றத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார் சத்யராஜ். வழக்கமாக அவர் படங்களில் வரும் ‘ ஜொள்ளு’ ‘லொள்ளு ‘ விஷயங்கள் இதில் டோட்டலாக ஆப்சென்ட்.
தாயில்லாத மகளைத் தாயுமானவன் போல் நின்று பாசத்தைப் பொழியும் அழகும், கடைசியில் வில்லன் மதுசூதனராவிடம் பெண்ணைப் பெற்ற தந்தையின் மனத்தை வெளிப்படுத்தும் உருக்கமும் நெகிழ வைக்கிறது.
அவர் மகளாக நடித்திருக்கும் ஸ்மிருதி வெங்கட்டும் அற்புதமான தேர்வு. தன்னை விரும்பும் அல்லது தான் விரும்பும் ஒரு இளைஞனை தன் அப்பாவிடம் அவர் அறிமுகப்படுத்தும் பாணியே தனி.
அவருக்கும் சத்யராஜுக்குமான “டாடிமா…”, “பேபிமா…” உறவில் அத்தனைப் பாசமும், நேசமும் வழிகின்றன.
மகனை யாரோ கடத்தி விட்டார்கள் என்று தெரிந்தும் பதறாமல் அவனை மீட்க காரியமாற்றும் மதுசூதனராவிடம் இயல்பாகவே வில்லத்தனம் வெளிப்படுகிறது. அவரது மைத்துனராக வரும் ஹரீஷ் உத்தமனும் மிரட்டுகிறார்.
அவர்களின் வல்லமையில் நீதி மறுக்கப்பட்டு தீர்ப்பு விற்கப்பட மெடிக்கல் மிராக்கிளாக சத்யராஜ் செய்யும் காரியம் வியக்க வைக்கிறது.
தன் மகளை பலாத்காரம் செய்த மதுசூதன் மகனுக்குத் தேவையான ஒரு அத்தியாவசிய ‘ பொருளைத் ‘ தன் கைவசம் வைத்துக்கொண்டு அவர்கள் இருவரையும் அலைக்கழிப்பதுடன், அவர்களை வைத்தே அவர்கள் தரப்பிலுள்ள அத்தனை துரோகிகளை யும் அழிப்பதும் புத்திசாலித்தனம்.
அப்படி என்ன ‘ பொருள் ‘ அவரிடம் இருக்கிறது என்கிறீ்ர்களா… அது சஸ்பென்ஸ்…! அதற்கான மெடிக்கல் விளக்கத்துக்கு நிறைய ஆய்வு செய்திருக்கிறார் இயக்குனர்.
வில்லனிடம் இருக்கும் ஒவ்வொரு பவரையும் சில மணி நேரங்களில் அடுத்தடுத்து வீழ்த்தி அவனை நிராயுத பாணியாக்கி சத்யராஜ் சாதிப்பது திரைக்கதையில் சிறப்பு.
அதேபோல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பெண் அதற்குப்பின் வாழ்விழந்து பெருமையிழந்து போகும் கதைகளுக்கு மத்தியில் தன் மகளை அவள் விரும்பிய விதத்தில் வெளிநாட்டுக்கு கல்வி பயில அனுப்புவதும், அவள் விரும்பியவனையே வாழ்க்கைத் துணையாக ஆக்குவதும் நேர்மறை சிந்தனை.
அதற்காகவே இயக்குனருக்கு ஒரு சல்யூட்..!
அதைப் புரிந்து கொள்ளும் மணமகனின் பெற்றோராக வரும் சார்லி, ஶ்ரீ ரஞ்சனி பாத்திரப் படைப்புகள் போற்றத் தக்கவை.
அஞ்சியின் ஒளிப்பதிவும், பிரசாத் எஸ்.என்னின் இசையும் நிறைவு.
தீர்ப்புகள் விற்கப்படும் – ஆபரேஷன் சக்சஸ்..!
– வேணுஜி