April 25, 2024
  • April 25, 2024
Breaking News

ஓணான் படத்தின் திரை விமர்சனம்

By on January 2, 2022 0 432 Views

இன்னொரு ராக்கி படம் போல் இருக்குமோ என்று நினைக்க வைக்கும் கொலைக் கள ஆரம்பம்.

நாயகன் திருமுருகன் சதாசிவம் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொள்வதுபோல் டைட்டில் போடும்போது காட்சிகள் விரிகின்றன.

தொடர்ந்து மனைவி குழந்தைகளைக் கொன்றதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக நாளேட்டில் செய்தியும் வருகிறது. 

படங்களில் காமெடியனாக நாம் பார்த்திருக்கும் காளி வெங்கட் இந்தப் படத்தின் முதல் காட்சியில் உடலெங்கும் ரத்த விளாறாக காவல் நிலையத்தில் வந்து சரணடைகிறார். அவர் சொல்லும் கதையில் பிளாஷ்பேக்கில் விரிகிறது.

டைட்டிலில் பார்த்த கொலைகாரர் திருமுருகன் தஞ்சையில் பாபநாசத்துக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்திறகு விலாசம் ஒன்றை தேடி வர, வந்த இடத்தில் பூ ராமுவை ஒரு தாக்குதலில் இருந்து காப்பாற்றுகிறார். எனவே ஆதரவில்லாத திருமுருகனை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார் பூ ராமு.

பூ ராமு தம்பதியுடன் அவர்களின் மகனான காளி வெங்கட் மனைவி குழந்தைகளுடனும், திருமணமாகாத நாயகி ஷில்பா மஞ்சுநாத்தும் இருக்கிறார்கள். அந்த வீட்டின் சில்லரை வேலைகளைச் செய்து வரும் திருமுருகன் மீது ஷில்பா காதல் கொள்ள, அவருக்கே ஷில்பாவைத் திருமணம் செய்து கொடுக்கிறார்கள். அவர்களின் முதலிரவில் தன் குடும்பத்தையே கொலை செய்த மனநோயாளிதான் திருமுருகன் என்ற உண்மை காளி வெங்கட்டுக்குத் தெரிய வருகிறது.

அதைக் குடும்பத்தினரிடம் சொன்னால் திருமுருகன் எல்லோரையும் கொன்று விடுவார் என்று பயந்து மூடி மறைப்பதுடன் இவரே மன நோயாளி போல் ஆகி விடுகிறார். 

அந்த ஊருக்கு திருமுருகன் வந்த காரணம் என்ன..? அவரிடம் இருந்து காளி வெங்கட்டின் குடும்பம் தப்பியதா..? முதல் காட்சியில் போலீசில் சரண் அடையும் காலை வெங்கட் அவரை கொன்று தீர்த்தாரா..? என்ற கேள்விகளுக்கு எல்லாம் மீதி படத்தில் பதில்கள் கிடைக்கின்றன.

ஆனால் நம் எதிர்பார்ப்பை எல்லாம் உடைத்து எதிர்பாராத கதை ஒன்றைச் சொல்கிறார் இயக்குனர் சென்னன்.

பெரிதாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வில்லன் திருமுருகன் (களவாணி) தொடங்கிய இடத்திலிருந்து காணாமல் போய் இப்போது இந்தப் படத்தின் மூலம் நாயகனாகத் திரும்பி வந்திருக்கிறார். ஆனாலும் அவர் அடையாளமான வில்லன் போன்ற நாயகன் வேடம் இதில்.

அவரது உயரத்துக்கும் முகத்தோற்றத்துக்கும் ஒரு மனநோயாளியாகவும் கொலையாளியாகவும் அவரை அடையாளப்படுத்த முடிகிறது. ஆனால் அவர் நல்லவராக வரும் நிமிடத்தில் அவரை அப்படியும் நம்ப முடிவது அவரது நடிப்பின் பலம்.

கிட்டத்தட்ட எல்லா படங்களிலும் காமெடியனாக நாம் பார்த்துவிட்ட காளி வெங்கட்டுக்கு இப்படி ஒரு கொடூர முகம் இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அவர் நடிப்பு வரிசையில் இது ஒரு முக்கிய படம்.

ஒன்றிரண்டு படங்களில் நாம் ஏற்கனவே பார்த்துவிட்ட ஷில்பா மஞ்சுநாத்துக்கு இது முதல் படமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. கிராமத்து இளமை அழகில் ஜொலிக்கிறார் ஷில்பா. அவரது அண்ணியாக வரும் நடிகையும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

மீட்டருக்கு சரியாக நடிக்க தெரிந்த பூராமுவும் இதிலும் கூட்டவும் குறைக்கவும் இல்லாமல் மிகத் துல்லியமாக தன் பாத்திரத்தை நிறைவு செய்திருக்கிறார்.

காளி வெங்கட்டுக்கு வேறு முகம் காட்டி விட்டதாலோ என்னவோ காமெடிக்கு சிங்கம்புலியை இதில் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஏதோ ஓர் இடத்தில் சிரிக்க வைத்தாலும் அது பெரிய அளவில் எடுபடவில்லை.

திரு முருகனின் முதல் மனைவியாக வரும் சனுஜா சோம்நாத் அந்த பாத்திரத்துக்கு ஏற்ற எடுப்பான தோற்றத்தில் மிடுக்காக இருக்கிறார். அவர் அநியாயமாக இறந்து போவது தான் வேதனை.

ரஜீஷ் ராமனின் ஒளிப்பதிவும், ஆன்டனி ஆப்ரகாம் இசையும் படத்தின் பட்ஜெட்டுக்கு நியாயம் செய்து நிறைவைத் தந்திருக்கிறது.

கொலைகள் நடக்கும் இடத்தில் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது திரைக்கதை பிற இடங்களை மெதுவாக நகர்வதைக் கவனித்து சரி செய்திருக்கலாம்.

கொடூரமான கொலைகார படமாக தொடங்கிய கதை மன்னிப்பதே மனிதனின் மாண்பு என்று முடிவது சிறப்பு.

ஓணான் – நிற மாற்றம்..!