October 18, 2024
  • October 18, 2024
Breaking News
July 16, 2024

டீன்ஸ் திரைப்பட விமர்சனம்

By 0 134 Views

சமீப காலமாகத் தன் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசங்களைக் காட்ட முயற்சிக்கும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இந்தப் படத்தில் இன்னொரு வித்தியாசமான கதைக்களத்தை முயற்சித்திருக்கிறார்.

அமானுஷ்யமாகத் தொடங்கி அறிவியல் பூர்வமாக முடியும் ஒரு புனைவுக் கதை இது.

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் டீன் ஏஜ் என்று சொல்லக்கூடிய பதின் பருவம் மிகவும் முக்கியமானது. குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் ஆகும் இந்தப் பருவ மாற்றம் நிகழ ஆரம்பிக்கும் பருவத்தில் இருக்கும் 13 சிறுவர் சிறுமியர் தாங்கள் பெரியவர்களாகி விட்டதாக நினைக்கின்றனர். 

வீட்டிலும், பள்ளியிலும் தங்களை சிறுவர்களாகவே நடத்துவதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை. எனவே, தாங்கள் பெரியவர்கள்தான் என்று காட்ட நினைக்கும் நேரத்தில் அவர்களில் ஒரு சிறுமியின் பாட்டி பக்கத்து கிராமத்தில் வசிக்க அங்கே ஒரு நாள் செல்லத் திட்டமிடுகின்றனர். அத்துடன் அங்கே பேயை(!)ப் பார்க்க முடியும் என்றும் நம்புகின்றனர்.

ஒரு நாள் காலையில் பள்ளி செல்வது போல் சென்று விட்டு அங்கிருந்து அத்தனை பேரும் ‘எஸ்’ ஆகி அந்தச் சிறுமியின் பாட்டி வீட்டுக்கு செல்கின்றனர். வழியில் ஒரு போராட்டத்தின் காரணமாக எந்த வாகனமும் ஓட முடியாத சூழலில் இவர்கள் அத்தனை பேரும் நடந்தே அந்த கிராமத்துக்குச் செல்ல நேர… வழியில் பல அபாயங்களைச் சந்திக்கின்றனர். 

13 பேரில் ஒவ்வொருவராக திடீரென்று காணாமல் போவதில் அவர்களை பேய்தான் தூக்கிச் செல்கிறது என்று ஒரு கட்டத்தில் அவர்கள் நம்ப உண்மையில் என்ன ஆனது என்பதைப் பின் பாதிக் கதையில் சொல்கிறார் பார்த்திபன். 

முதல் பாதி முழுக்க இந்த 13 சுட்டிகள்தான். தொடக்கத்தில் அவர்களுக்குள் நிகழும் உரையாடல்கள் அந்தப் பருவத்தினரே பேசுவது போல அத்தனை இயல்பாக எழுதியிருக்கிறார் ரா.பா.

அதேபோல் ஒவ்வொருவர் காணாமல் போகும்போதும் நமக்கும் ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் ஏற்படுகிறது அவர்கள் எப்படிக் காணாமல் போகிறார்கள் என்று. 

அந்த முதல் பாதி கதைக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் பின்பாதியில் பார்த்திபனே நடிக்க, அந்தப் பாத்திரத்தில் தொடங்குகிறது அதற்கு இணையான இன்னொரு கதை. 

இரண்டு கதைகளின் முடிவும் ஒரே புள்ளியில் வந்து முடிந்து ஒரு ஆச்சரியத்தை நமக்குத் தருகிறது.

இதுவரை படங்களில் பார்த்த வழக்கமான பார்த்திபனை இதில் நாம் பார்க்க முடியவில்லை. அமெரிக்க நாசாவில் வேலை செய்தவர் என்று அவர் தன்னை கூறிக் கொண்டாலும் வழக்கம் போல அவர் நக்கல் அடிக்கிறாரோ என்கிற சந்தேகம் அவர் பாத்திரத்தின் மீது கடைசிவரை நமக்கு எழுந்து கொண்டே இருக்கிறது. 

அவரது வழக்கமான லொள்ளு சமாச்சாரங்களுக்கு என்றே இடையில் ஒரு சிறிய பாத்திரத்தில் யோகி பாபு வந்து போகிறார். 

அந்த 13 சுட்டிகளும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். இந்த ரண களத்துக்குள் இவர்களுள் ஒரு சிறுவனுக்கும் சிறுமிக்கும்  காதல் வேறு அரும்புகிறது.

அந்தச் சுட்டிகளுள் கடைசியில் நண்பர்களுக்காக தன் வாழ்வையே தியாகம் செய்யும் அந்த ஆதரவற்ற சிறுவன் நெகிழ வைத்து விடுகிறான்.

இசை இமான், இனிமையான இரண்டு பாடல்களைத் தந்து விட்டு பின்னணி இசையில் கதைக் களத்துக்கு ஏற்ப வித்தியாசத்தைக் காண்பித்திருக்கிறார்.

கேவ்மிக் யு.ஆரியின் ஒளிப்பதிவும் நேர்த்தியாக இருக்கிறது. 

முதல் பாதியோடு எழுந்து வந்து விட்டால் இரண்டாம் பாதி இப்படித்தான் இருக்கும் என்று ஒரு கொம்பனாலும் கணிக்க முடியாது. 

அப்படி ஒரு திரைக்கதை அமைப்பு படத்தை வித்தியாசப்படுத்தி இருக்கிறது. 

படத்தில் வரும் சிஜி காட்சிகள் மட்டும் படத்தின் பட்ஜெட்டை நமக்கு நினைவுபடுத்துகிறது. அதற்கு இன்னும் கொஞ்சம் ஒதுக்கி இருந்தால் ஒரு ஆங்கிலப் படம் போல் இருந்திருக்க வாய்ப்புள்ளது.

அனைவரும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காகவே படத்தின் டிக்கெட்டையும் குறைத்து இருக்கிறார் பார்த்திபன். 

இதைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் குழந்தைகளுடன் குடும்பத்தினர் இந்த டீன்ஸ் படத்தை பார்ப்பது நல்ல சான்ஸ்..!

– வேணுஜி