காதலனும், காதலியும் ஒத்த உணர்வில் இருந்தால்தான் காதல் வரும் என்பதில்லை. அவர்களுக்குள் எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் காதல் மலரும். ஆனால் அந்தக் காதலின் போக்கு எப்படி இருக்கும் என்பதைத் தான் இயக்குனர் இந்தப் படத்தின் மெயின் லைனாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.
நாயகன் ரியோராஜுக்கு பெற்றோரின் திருமண வாழ்க்கை திசை மாறிப் போனதில் திருமணம், குழந்தை உள்ளிட்ட குடும்ப உறவுகளின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது.
ஆனால், நாயகி கோபி ரமேஷ் அப்படியே அவருக்கு நேர்மாறாக திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறார்.
இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்த ஆனால், இவர்களின் வேறுபட்ட எதிர்பார்ப்புகளே இருவருக்குள்ளும் விரிசலை ஏற்படுத்த ஒரு கட்டத்தில் பிரிந்து விடுகிறார்கள்.
ஆனால் அதோடு அந்த பிரச்சனையும் அவர்கள் காதலும் முற்றுப்பெறவில்லை என்பது கோபி ரமேஷ் கர்ப்பமடைந்திருப்பதை அறியும்போது தெரிகிறது.
ஆனாலும் அப்போதும் கூட கருவைக் கலைத்துவிடும்படி சொல்கிறார் ரியோ ராஜ். அவரது வார்த்தைக்கு கோபிகா அடிபணிந்தாரா, அல்லது குழந்தை பெற்று கொண்டு ரியோ ராஜுடன் சேர்ந்து வாழ விரும்பும் அவர் ரியோ ராஜ் மனதை மாற்றினாரா என்பதை எல்லாம் காதல், காமெடி கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஸ்வினீத் எஸ்.சுகுமார்.
காதலிப்பதில் ரியோ ராஜ் எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால் அதை முழுமையாக காட்ட திரைக்கதையும் காட்சியும் ஒத்துழைக்க வேண்டுமே… அந்த வகையில் ரியோ ராஜைக் கொண்டாட முடியாமல் போகிறது.
இந்தக் காலத்தில் இப்படியும் இளம்பெண்கள் இருக்கிறார்களா என்கிற அளவுக்குத் தன் விருப்பத்தை வெளி காட்டாமல் காதலன் மனநிலைக்கேற்ப நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்பும் நாயகி கோபிகா ரமேஷைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.
ஆனால் அந்த பாத்திரத்தை உள்வாங்கி மிகச் சரியாக நடித்திருக்கிறார் கோபிகா.
இவர்களுடன் அருணாச்சலேஸ்வரன், பெளசி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அவரவர் வேலையைக் கச்சிதமாக செய்திருக்கிறார்கள். இவர்களில் அருணாச்சலேஸ்வரன் அடையாளம் தெரிகிறார்.
யுவன் சங்கர் ராஜாவின் சிக்நேச்சரில் அமைந்த பாடல்கள் இதயத்துக்கு நெருக்கமாக இருக்கின்றன. பின்னணி இசையில் அவர் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
திரைக்கதை செய்யாத விஷயத்தை நாம் ஈடு கட்ட வேண்டும் என்று ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம், ஹீரோ ஹீரோயினின் உணர்வுகளை புரிய வைக்க பெரு முயற்சி எடுத்திருக்கிறார்.
மனித வாழ்க்கையில் உறவுகள் எவ்வளவு முக்கியம் என்று புரிய வைக்க முயற்சி செய்திருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் ஸ்வினீத் எஸ்.சுகுமார், அதற்கு அவர் ஒரு காதல் கதையை தேர்ந்தெடுத்ததிலும் குறைவில்லை. ஆனால் காதல் உணர்வுகளை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.
ஒரு காதல் கதையில் காதலனும் காதலியும் சேர்கிறார்களோ இல்லையோ அந்தக் காதல் நம் மனதில் நின்று நிலைபெற்று விட்டால் வெற்றி நிச்சயம். அதில் கொஞ்சம் பின் தங்கி விடுகிறது திரைக்கதை.
அதிலும் இன்றைய இளைஞர்களுக்கு இப்படி எல்லாம் சொன்னால்தான் பிடிக்கும் என்று அவர் பிடித்திருக்கும் ரூட், செம கரடு முரடாக இருக்கிறது. எளிதாகப் போய் சேர நல்ல பாதைகள் இருக்கும் போது இந்த ரூட்டில் போய் எல்லோருக்கும் தெரிந்த ஊரை ஏன் சேர வேண்டும்..?
ஸ்வீட் ஹார்ட் – டபுள் ஸ்க்ட்ராங்… சக்கரை கம்மி..!
– வேணுஜி