கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த வாரம் முதல் மார்ச் 31ம் தேதி வரை படப்பிடிப்புகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டதன் விளைவாக சினிமா சங்கங்களின் கூட்டமைப்பான பெப்ஸியைச் சேர்ந்த சுமார் 25,000 தொழிலாளர்கள் வேலையின்றி முடங்கியுள்ளனர்.
அவர்களில் 15,000 பேரின் வாழ்வாதாரம் அன்றாடம் படப்பிடிப்பு நடந்தால் மட்டுமே என்று இருக்க, டிவி தொடர்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு விட மிகவும் பாதிப்படைந்து இருக்கிறார்கள்.
இதனால் பெப்சி அமைப்பின் தலைவரான ஆர்.கே.செல்வமணி இன்று நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமாவினால் வளர்ச்சி பெற்றோரிடம், அன்றாடப் பாட்டுக்கு வழியின்றி வறுமையில் வாடும் தொழிலாளர்களுக்கு ஒரு குடும்பத்துக்கு ஒரு மூட்டை அரிசி வாங்கித்தரும் அளவில் பொருளுதவி புரிந்தால் நலமாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து முதல் உதவியாக சூர்யா, கார்த்தி, சிவகுமார் தங்கள் சார்பாக பெப்ஸிக்கு ரூ.பத்து லட்சம் நங்கொடை அளித்தனர்.
அவர்களைத் தொடர்ந்து இன்று மாலை சிவகார்த்திகேயன் தன் சார்பில் பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவ ரூ.பத்து லட்சம் வழங்கினார்.
தொடர்ந்து நல்ல மனங்கள் உதவிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!