March 19, 2024
  • March 19, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பொன்வண்ணன் எனக்கு மாமனாராக நடித்தால் படம் ஹிட் – கார்த்தி
April 7, 2021

பொன்வண்ணன் எனக்கு மாமனாராக நடித்தால் படம் ஹிட் – கார்த்தி

By 0 537 Views

சுல்தான் படம் வெற்றி பெற்றதற்காக நன்றி கூறும் விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படக்குழுவினர் பேசியதாவது…

நடிகர் கார்த்தி –

“இப்படத்தின் கதையை கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக உணர்ந்தேன். நான் என்ன சொன்னாலும் கேட்பதற்கு 8 அடியில் கடா மாதிரி ஒரு பாத்திரம். அதேபோல், குள்ளமாக ஒரு பாதுகாவலர். இதுபோக, 100 அடியாள்கள். என்னை பாதுகாப்பது தான் அவர்களின் வேலை. எப்போதும் என்னைச் சுற்றியே இருப்பார்கள் என்று கேட்கும்போது கற்பனைக் கதை போல தோன்றியது. அனைவரும் அதை விரும்புவோம்.

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், லால் சார் கண்டிப்பாக இப்படத்தில் நடிக்க வேண்டும் என்றார். அவர் கூறியதைப் போல லால் சார் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

மயில்சாமியின் நகைச்சுவையை நான் மிமிக்ரி செய்ய முயற்சி செய்யும் அளவிற்கு அளப்பரியதாக இருக்கும். அதேபோல, யாருக்கு என்ன தேவையோ அதை கடன் வாங்கியாவது செய்யக் கூடியவர். எம்.ஜி.ஆர்.-ன் குணத்தை பின்பற்றி வருகிறார்.

பாடல்களிலும் கதையைக் கூறி யாரையும் எழுந்து போக விடாமல் இசையமைத்த இசையமைப்பாளர்களுக்கு நன்றி.

இப்படத்தை பார்க்க திரையரங்கிற்கு குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள். குழந்தைகள் ஆரவாரத்துடன் பார்த்து மகிழ்வதாக என்னிடம் தொடர்புக் கொண்டு பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. 

மேலும், இப்படம் திரையரங்கிற்கான படம், அதற்காக 3 வருடங்கள் பொறுமையாக இருந்து வெளியிட்ட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிற்கு நன்றி. ஓடிடியில் இப்படத்தை வெளியிட்டிருந்தால் இந்த அளவு பாராட்டுக்கள் வந்திருக்காது.

அதேபோல், பாதுகாப்போடு ஒரு திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பொன்வண்ணன் எனக்கு மாமனாராக நடித்தால் அந்த படம் வெற்றி பெறுகிறது. பருத்திவீரன்,  கடைக்குட்டி சிங்கம் அடுத்து சுல்தான் படங்களில் அவர் எனக்கு மாமனாராக நடித்திருக்கிறார். இதை மற்ற தயாரிப்பாளர்கள் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அனைவர் பற்றியும் பேசிவிட்டு கதாநாயகி ராஷ்மிகாவைப் பற்றி பேசவில்லையென்றால் எப்படி? இப்படத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக நடித்திருந்தார். அவருக்கு இந்த நேரத்தில் மிக்க நன்றி..!”

நடிகர் பொன்வண்ணன் –

“கார்த்தியுடன் அவர் நடித்த முதல் படத்தில் ஒன்றரை வருடம் காலம் பயணித்திருக்கிறோம். அதன்பிறகு, நீண்ட வருடங்களுக்கு பிறகு ‘சுல்தான்’ படத்தில் தான் பணியாற்றினோம். அதற்கிடையில், அவர் பல நிலைகளில் நடித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார். ஆனால், கார்த்தியிடம் முதல் படத்திற்கும், ‘சுல்தான்’ படத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. சில பொறுப்புகள் கூடியிருப்பதை மட்டும் தான் பார்த்தேன்..!”

மயில்சாமி –

“என்னால் மறக்க முடியாத படம் ‘சுல்தான்’. இந்தப் படத்தில் நடித்தபோது என் இரண்டு பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து விட்டேன். தயாரிப்பாளரை எஸ்.ஆர்.பிரபு என்று அழைக்கக் கூடாது. மகாபிரபு என்று தான் அழைக்க வேண்டும். இரண்டு பிள்ளைகளின் திருமணம் சமயத்தில் பொருளாதார உதவி செய்தவர் எஸ்.ஆர்.பிரபு..!”

நடிகர் காமராஜ் –

“நான் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற போது நீ இதற்காக கடவுளால் படைக்கப்பட்டவன் என்று கூறினார்கள். அதுபோல, சினிமாவிற்காக படைக்கப்பட்டவர் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். அவரிடம் பல திறமைகள் இருக்கின்றது..!”

நடிகர் சென்றாயன் –

“தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பிறந்தேன். அங்கு இருக்கும் திரையரங்கில் நான் சிறு வியாபாரி. இப்போது அந்த திரையரங்கில் நான் நடித்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது. எனது பெற்றோர் பார்த்துவிட்டு நீ நடித்த காட்சிகளுக்கு பலத்த கைத்தட்டல் ஒலிக்கிறது என்று கூறினார்கள்..!”

இசையமைப்பாளர் மெர்வின் (விஜய்) –

“விடியற்காலை 4 மணிக்கு அனைவரும் குடும்பத்துடனும், அதேசமயம் முககவசம் போன்ற பாதுகாப்போடு வந்து பார்த்தார்கள். இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் கதைகூறும் போது எப்படி இருந்ததோ அதைவிட திரையில் நன்றாக வந்திருக்கிறது..!”

ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் –

“கார்த்தியை இப்போது சுல்தான் என்று அழைக்கிறார்கள். அதுபோல, எஸ்.ஆர்.பிரபுவும் சுல்தான்தான். இப்படம் ஆரம்பத்திலிருந்தே பெரிய போராட்டமாக தான் இருந்தது. எங்களுக்கு சவாலாக இருந்தது வெப்பநிலை தான். காலையில் நாங்கள் எதிர்பார்த்த வெப்பநிலை மாலையில் தான் கிடைக்கும். அவ்வளவு நேரமும் காத்திருந்துதான் எடுப்போம்..!”

எஸ்.ஆர்.பிரபு –

“எங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் துறைக்கும் சிறப்பான படம் ‘சுல்தான்’. திரைத்துறையை மட்டுமே நம்பி இருப்பவர்கள் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார்கள். நாங்களும் இடையில் ஓடிடிக்கு போகலாம் என்று நினைத்தோம். அதற்கான வாய்ப்பும் இருந்தது. ஆனால், இப்படம் திரையரங்கிற்கான படம் என்பதால் பிடிவாதமாக திரையரங்கிற்கே கொண்டு செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.

பெரும்பான்மையான விமர்சனங்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தது. ஆனாலும், ஒருசில எதிர்மறையான விமர்சனங்களும் இருந்தது. அதைத்தாண்டி, திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களை புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறார்கள். அதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த சமயத்தில் ‘கர்ணன்’ படமும் வெளியாக இருக்கிறது. அப்படத்திற்கு வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறேன்..!”

நடிகர் லால் பேசும்போது,

“நான் சுலபமாக தமிழில் பேசுவேன். ஆனால், உங்களுக்கு புரிந்துகொள்ள சிரமமாக இருக்கும்.

சுல்தான் மாதிரி பிரமாண்டமான படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி. இப்படத்தில் சண்டை, நடனம், நடிப்பு, உணர்வுரீதியாக என அனைத்தும் இருக்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்ததற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கதாபாத்திரத்தை பிரகாஷ் ராஜ் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது..!”

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் –

“இப்படத்தை பார்த்தவர்கள், முதலில் நான் சென்றேன், பிறகு எனது குடும்பத்தை அழைத்துச் சென்றேன். எனது பெற்றோர்கள் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்கிறார்கள் என்று என்னை தொடர்பு கொண்டு பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இப்படத்தில் எனக்கு அப்பாவாக இருந்தது லால் சார் தான். சுல்தான் என்ன சொன்னாலும் கேட்க வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால், படப்பிடிப்பில் நான் மறந்தாலும் கூட அவர் நினைவு வைத்திருந்து பணியாற்றினார். என் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நன்றாக நடித்திருப்பார் என்று கூறினார். ஆனால், லால் சார் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்த நெப்போலியன் சாருக்கு நன்றி. சுயேட்சையாக தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபை செல்ல வேண்டும் என்று நடிகர் மயில்சாமி அண்ணனை வாழ்த்துகிறேன்..!”