March 19, 2024
  • March 19, 2024
Breaking News
April 10, 2021

கர்ணன் படத்தின் திரைவிமர்சனம்

By 0 942 Views

செவி வழியாகச் சொல்லப்பட்டுக் காலத்துக்கும் கடத்தப்படும் கதைகளை ‘கர்ண பரம்பரைக் கதைகள்’ என்பார்கள். ஆனால், இந்தப்படத்தின் ‘கர்ணன்’ கதை நம் காலத்தில் நம் கண் முன்னே நடந்து முடிந்த ஒரு இனப் போராட்டத்தை முன் வைக்கிறது. 

அதற்கு அழுத்தம் சேர்த்தவை ‘பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரி செல்வராஜும், நடிப்பு ‘அசுரன்’ தனுஷும், அசுரனைச் சாத்தியமாக்கிய கலைப்புலி எஸ்.தாணுவும் அடுத்து கைகோத்த படம் இது என்பதே.

கதை நடக்கும் ஊருக்குப் ‘பொடியன் குளம்’ என்று பெயர் வைத்திருப்பதிலேயே மாரி செல்வராஜ் படத்தில் பேசியிருக்கும் அரசியல் ‘பொடி’ நமக்குப் புரிகிறது.

தென் தமிழ்நாட்டில் திருநெல்வேலி பகுதியில் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் நடந்த கதையாக இருந்தாலும், உலகெங்குமே ஒடுக்கப்பட்டவர்களின் குரலையும், கதையையும் ஒத்தே இருப்பதால் உலகக் கவனம் பெறும் படைப்பாகிறது.

அப்படி ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் பெயரில் காதில் கேட்ட மகாபாரத பெயர்களான துரியோதனன், கர்ணன், திரவுபதி என்று வைத்துப் பெருமை கொண்டாலும் அதைக்கூட ஆதிக்க சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை என்பதை படத்தின் இண்டு இடுக்கில் எல்லாம் தூவி கதை சொல்லியிருக்கிறார் மாரி செல்வராஜ்.

தன் கால்களில் சமூகம் கட்டி வைத்திருக்கும் சாதிய கட்டுகளை அறுத்து எறியத் துடிக்கும் இளைய தலைமுறையின் இனப் போராளியாக இந்தப்படத்தில் வருகிறார் தனுஷ். ஒரு இனத்தைக் காக்க முடிவு எடுப்பவன் புஜங்களை தூக்கிக் கொண்டும், பராக்கிரம சாலியாகவும்தான் இருக்க வேண்டும் என்கிற சனாதனமான ‘பாகுபலி’ எதிர்பார்ப்பையும் உடைத்து எறிந்து இருக்கிறார் தனுஷ்.

கழுதையின் கால்களில் கட்டப்பட்டிருக்கும் கட்டுகளைக்கூட அறுக்கத் துடிக்கும் சுதந்திர வேட்கை கொண்ட கர்ணன் பாத்திரத்தில் தனுஷ் நடித்து இருப்பது அசுரனில் அவர் ஏற்றிருந்த பாத்திரத்துக்குக் கொஞ்சமும் குறைவானது அல்ல. 

“கந்தசாமி மவனுக்குக் கண்ணபிரான் பேர் இருக்கலாம். ஆனா, மாடசாமி மவனுக்கு துரியோதனன்னு பேர் இருக்கக் கூடாதா..?” என்று தனுஷ் வாளை ஓங்கும் கட்டம் படத்தின் செய்திக்கும், தனுஷின் நடிப்புக்கும் ஒற்றை சோற்றுப் பதம்.

அவருக்குத் துணையாக வந்தாலும் மலையாள நடிகர் லால் இதில் ஏற்றிருக்கும் பாத்திரம் அற்புதமானது. தனுஷைத் தாண்டியும் லால் நடித்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையல்ல. அந்த பாத்திரத்தை உள்வாங்கி உடல்மொழி, முகக்குறி என்று அனைத்தையும் இம்மி பிசகாமல் கொடுத்திருக்கிறார் லால். இந்தப் படத்தில் இவரது பாத்திரத்துக்கு அடுத்த வருட தேசிய விருதைக் கண்டிப்பாக எதிர்பார்க்க முடியும். அப்போது சொல்வோம் ‘லால் சலாம்..!’

மஞ்சநத்தி பாடலில் வரும் அந்த ‘ரவுட்டு வண்டுக்கு…’ம், அதற்கு லால் வெளிப்படுத்தும் உணர்வும் அபாரம். தனுஷ் சூது விளையாட தன் வயதுக் கிழவியிடம் நைசாக பேசி கொண்டே பத்து ரூபாயை அவர் லவட்டுவதும், அதைக் கிழவி கண்டுபிடித்துவிட அவர் வழிவதும் அழகோ அழகு. அந்த பொக்கைக் கிழவி அதற்கு ஈடாக ஒரு முத்தம் கேட்பதும், அவளுக்கு உச்சிமோந்து அந்த முத்தத்தை அவள் உச்சியில் லால் கொடுப்பதும் வற்றிய நிலத்து வசந்தம்.

இன்னொரு மலையாள வரவான நாயகி ‘ரெஜிஷா விஜயனு’ம் திரவுபதி பாத்திரத்தில் அச்சு அசலாக பொருந்தியிருக்கிறார். “கர்ணனிடம் உன் காதலை சொல்ல வேண்டியதுதானே..?” என்று தோழி கௌரி கிஷன் கேட்க , “நீ கவனிச்சே இல்ல… அப்படி அவனே கவனிப்பான்…” என்று அசால்ட்டாக சொல்லும் அழகில் மிளிர்கிறார் ரெஜி. தன் காதல், தன் கோபம் எல்லாவற்றையும் தனக்குள்ளேயே வைத்து மருகும் அந்தப் பாத்திரம் ரெஜிக்கு இன்னும் பல கதவுகளைத் தமிழில் திறந்து விடும்.

இதுவரை படங்களில் நாயகனின் நண்பனாக வந்து அவன் குரலையே காமெடியாக எதிரொலித்துக் கொண்டிருந்த யோகிபாபுவுக்கு இந்தப்படத்தில் நாயகனுக்கு எதிர் வரிசையில் நிற்கும் வித்தியாசமான வேடம். எல்லாப் படங்களிலும் சிரிக்கவைக்கும் யோகிபாபு இதில் நம்மை அழுக வைப்பார் என்பது நாம் முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு மாற்றம்.

அவர் மாத்திரமல்லாமல் ஜி.எம்.குமார், சண்முகராஜன், பூ ராமு, அழகம்பெருமாள் என்று ஒவ்வொருவரும் அந்த ஊர்க்காரர்களாகவே மாறி இருப்பது ரசவாத வித்தை. அதைப்போலவே தனுஷின் அக்காவாக வரும் லட்சுமி ப்ரியாவும், அம்மாவாக வருபவரும் அப்படியே அந்தப் பாத்திரங்களில் உறைந்து போயிருக்கிறார்கள்.

‘சதுரங்க வேட்டை’ படத்துக்கு பிறகு நட்டி நடராஜ் இந்தப் படத்தில் ‘கர்ண வேட்டை’யாடி தன் திறமையை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். அவரது சன்னமான தேகமே இதில் ஆதிக்க மனம் கொண்ட காவல் அதிகாரியாக மிரட்டுவதற்கும் துணை போய் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

போலீஸ் ஸ்டேஷனில் காத்திருக்கும் முதியவர்களை எதிர்பாராமல் நட்டி தாக்கும் காட்சியில் அடுத்து நமக்குதான் அடி என்று ஜி.எம்.குமார் நடுங்குகிறாரே ஒரு நடுங்கல்… நம்மை ரத்தம் உறையச் செய்கிறது. கொடூர வில்லன் லிஸ்டில் ‘நட்டி’க்கு போட்டு வைங்க ஒரு சீட்.

இதில் வரும் ஊர், படத்துக்காக போடப்பட்ட ஒரு செட் என்றால் அதைப் படம் பிடித்த கேமரா கூட நம்பி இருக்காது. அத்தனை நிஜத் தோற்றம். அப்படி நம்மை நம்ப வைப்பதில் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் பங்கு நூறு விழுக்காடு இருந்திருக்கிறது.

பாடல்களைப் பட வெளியீட்டுக்கு முன்பே நம் காதுகளில் ஏற்றி விட்டதால் ஒவ்வொரு பாடல் வரும் போதும் ஒய்யாரமாக குதூகலிக்கிறது உள்ளம். அத்துடன் பின்னணி இசை படத்தை உலகத் தரத்திற்கு உயர்த்திக் காட்டுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. சந்தோஷ் நாராயணன் சீக்கிரமே ஹாலிவுட்டுக்கு ஃபிளைட் ஏறத் தயாராகலாம்..! அந்த ‘உட்றாதீங்க எப்போவ்…’ அப்படியொரு உணர்வு பூர்வம்..!

செய்திப் படமாக எடுத்திருக்க வேண்டிய ஒரு சமுதாய அரசியல் படத்தை வணிக ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் ரசிக்க வைத்த மாரிசெல்வராஜ் இந்த முறையும் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் கடந்த படத்தில் அவர் அநாயசமாகக் கடந்து வந்த வன்முறைப் பாதையில் இதில் ரத்தம் உறைந்து போயிருப்பது உறுத்துகிறது.

அதிலும் ஆட்டின் கழுத்தை அறுப்பது போல் நட்டியின் கழுத்தை தனுஷ் கரகரவென்று அறுப்பதும் அதை பல வினாடிகளுக்கு நீட்டித்துக் காண்பிப்பதும் வன்முறையில் ‘சுப்ரமணிய புர’ உச்சம். வாளின் வேலை வெட்டி வீழ்த்துவதன்றி அறுப்பது அல்லவே..? மெதுவான கதை நகர்த்தலும் பொதுவான குறையாக உணரப்படுகிறது.

கடந்த படத்தில் ‘கருப்பி’ என்ற வேடத்தில் ஒரு நாய் வந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குறியீடாக ஆனதைப் போல் இந்தப் படத்திலும் ஒரு கழுதையை மாரிசெல்வராஜ் பயன்படுத்தியிருப்பது நல்ல உத்தி. கலைப் படங்களில் பயன்படுத்துவதைப் போல தனுஷின் இறந்துபோன தங்கை பாத்திரத்தை அங்கங்கே ‘சிறு தெய்வ தரிசன’மாக அவர் கையாண்டிருப்பதும் மேன்மையான பதிவு.

காலில் விழுந்து மட்டுமே சாதிக்க நேர்ந்த சாதி அது என்பதைப் பல பாத்திரங்களின் மூலம் நமக்குப் புரிய வைத்திருப்பதும், அதன் மீதான கர்ணனின் கோபத்தை வெளிப்படுத்தி இருப்பதும் நுட்பமான இயக்க முத்திரை. 

மன்னர்களின் வாளையே வியந்து போற்றி வந்திருக்கும் நமக்கு மாரி செல்வராஜ் கர்ணனை ஏந்த வைத்திருக்கும் இந்த ‘வாள்’ ரொம்பவே புதிது..! நெல்லை மொழியிலேயே சொன்னால் புரிய ‘வேண்டியவாளுக்கு’ இது புரியும்..!

கர்ணனை – காணாம விட்றாதீங்க..!

– வேணுஜி