பெருமைமிக்க தமிழரான வான் இயற்பியல் விஞ்ஞானி சுப்ரமணியன் சந்திரசேகர் மறைந்த நாள் (August 21, 1995) இன்று.
இவர் ஆங்கியேர் கால இந்தியாவில் இப்போதைய பாகிஸ்தான் பகுதியான லாகூரில் சுப்பிரமணியன்- சீதாலட்சுமி தம்பதிக்கு 1910-ம் வருடம் அக்டோபர் 19-ம் தேதி பிறந்தவர். அவர் லாகூரிலும், பிறகு லக்னோவிலும் வாழ்ந்த பின், சென்னை வந்தவர் 11 வயதில் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.
பின்னர் மாநிலக்கல்லூரியில் இயற்பியல் படித்தார். அப்போதுதான் அவருடைய சித்தப்பா சர். சி. வி. ராமனுக்கு நோபல் பரிசு கிடைத்தது. சந்திரசேகரின் அம்மா சீதாலட்சுமி உலகப் புகழ்பெற்ற நாடகாசிரியர் ஹென்ரிக் இப்சனின் நாடகத்தைத் தமிழாக்கியவர். அம்மாவின் அறிவார்ந்த ஆற்றலும் இளம் சந்திரசேகருக்கு மாபெரும் தூண்டுதலாக இருந்தது.
சந்திரசேகர் 19 வயதிலேயே ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். 1930-ம் ஆண்டு, இந்திய அரசின் பண உதவி பெற்று, மேல்படிப்புக்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்குப் போனார். அவர் தனது 19 –வது வயதில் ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தையும் குவாண்டம் கோட்பாட்டையும் பயன்படுத்தி ஒரு வானியல் கோட்பாட்டை உருவாக்கினார்.
விண்வெளியில் உள்ள ஒரு நட்சத்திரத்தின் இறுதிக் காலம், அது எவ்வளவு பொருள்நிறையைக் கொண்டதாக உள்ளது என்பதைப் பொறுத்ததாக அமைகிறது. மிக அதிகமான பொருள்நிறையை கொண்டுள்ள நட்சத்திரங்கள் தங்களின் இறுதிநாளில் நியூட்ரான் நட்சத்திரங்களாகவோ அல்லது கருந்துளை (Black Hole) களாகவோ மாறுகின்றன.
பொருள்நிறை குறைவாக உள்ள அல்லது நடுத்தரமான பொருள்நிறை உள்ள நட்சத்திரங்கள், உதாரணமாக நமது சூரியனைவிட ஏறத்தாழ எட்டு மடங்கு பொருள்நிறை குறைவாக உள்ள நட்சத்திரங்கள் ‘வெள்ளைக் குள்ளன்’ (White Dwarf) எனும் ஒரு அடர்த்தியான நிலையை அடைகின்றன.இந்த நிகழ்ச்சிப்போக்கை நாம் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு வரையறையை கணித அவதானிப்புகள் மூலம் அவர் அறிவித்தார். அவரது இந்த வரையறைதான் நட்சத்திரங்களின் பிறப்பு, வளர்ச்சி, இறப்பு பற்றிய ஆய்வில் இன்றும் வழிகாட்டுகிறது. அது ‘சந்திரசேகர் லிமிட்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஆய்வுக்காக இவருக்கு, 1983- ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வில்லியம் ஏ.பவுலர் என்பவரோடு இணைத்து வழங்கப்பட்டது.
1937 – ல் சந்திரசேகர் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகச் சேர்ந்தார். 1995 -ல் 84 வயதில் இறக்கும்வரை அதே பல்கலைக்கழகத்திலேயே பணிபுரிந்தார். இவர் 1953 முதல் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்ந்தார். அமெரிக்காவில் 50 முனைவர் பட்டதாரிகளை உருவாக்கினார். அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா உள்ளிட்ட பல இடங்களுக்கு அவரது நினைவாகப் பெயர்கள் சூட்டப் பட்டுள்ளன.
அண்டத்தைப் பற்றி அறிந்தவராக இருந்ததாலேயோ என்னவோ கடவுள் நம்பிக்கை இல்லாதவராகவே தன் வாழ்நாள் முழுவதும் அவர் வாழ்ந்திருக்கிறார்.