ஷங்கரிடம் சினிமா பயின்றவரும், ‘பிப்ரவரி 14’, ‘ஆயிரம் விளக்கு’ படங்களின் இயக்குநர் எஸ்பி ஹோசிமின் ஒரு இடவெளிக்குப் பின் மீண்டும் கலக்க வந்திருக்கிறார் ‘சுமோ’ வை எடுத்துக்கொண்டு.
டைரக்டர் ஹரிதானே 10, 15 ‘சுமோ’வை எடுத்துக்கொண்டு படங்களில் கலக்குவார் என்று ‘கடி’க்க வேண்டாம். ஹோசிமின் வருவது சுமோ காரில் அல்ல… நிஜ மல்யுத்த ஜப்பானிய வீரர் ‘சுமோ’வுடன்.
உலகிலேயே கடினமான மல்யுத்தமான ‘சுமோ’ வீரருடன் படத்தில் மோதப் போவது நம்ம மிர்ச்சி ஷிவா. கேட்டாலே வரும் சிரிப்பு படம் பார்த்தால் எத்தனை மடங்காகும் என்று யோசித்துப் பாருங்கள். இதற்காக ஜப்பான் சென்று ஒரிஜினல் மல்யுத்த சுமோ வீரரான ‘யோஷினோரி தஷிரோ’வைப் பிடித்து நடிக்க வைத்திருக்கிறார் ஹோசிமின். ஜப்பான் சென்று அவரை நேருக்கு நேர் சந்திக்கிறாராம் மிர்ச்சி ஷிவா.
ஷிவா இந்தப்பட ஹீரோவானது மட்டுமில்லை, படத்தின் திரைக்கதை, வசனமெழுதியிருப்பதும் அவர்தானாம். அவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கும் படத்தில் யோகிபாபு, விடிவி கணேஷும் இருக்கிறார்கள். நகைச்சுவைக்குக் கேட்கவா வேண்டும்..?
நடிகப் பட்டாளம் இப்படி இருக்க தொழில்நுட்பக் கலைஞர்களும் மிரட்டலாக இருக்கிறார்கள் படத்தில். ஒளிப்பதிவை ராஜீவ் மேனனும் இசையை நிவாஸ் கே.பிரசன்னாவும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா தொடங்கி ஜப்பான், ஹாங்காங்கில் படம் பிடிக்கப்பட்ட ‘சுமோ’வை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார். இன்று வெளியிடப்பட்ட படத்தின் முதல்பார்வை அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
படத்தையும் சீக்கிரம் காட்டுங்க ஹோசிமின்..!