November 25, 2024
  • November 25, 2024
Breaking News
October 17, 2024

சார் திரைப்பட விமர்சனம்

By 0 132 Views

சினிமாவுக்கு வாத்தியார் பெருமை சேர்த்தது ஒரு காலம். இது வாத்தியார்களைப் பெருமைப்படுத்தும் சினிமாப் படம்.

எல்லோருக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என்கிற அடிப்படையில் கிராமப்புறங்களில் பணி புரியும் வாத்தியார்களின் பங்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வலியுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் போஸ் வெங்கட்.

அத்துடன் கல்வி போதித்து அறியாமையைப் போக்குவது என்பது ஒரு தலைமுறையில் சாத்தியப்படக்கக்கூடிய விஷயம் அல்ல என்பதையும் மூன்று தலைமுறைக் கதை களாகச் சொல்லி ஆழமாக உணர்த்தியும் இருக்கிறார்.

ஆண்டான்களின் அடிமைகளாக இருக்கும் தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்ற கல்வி ஒன்றுதான் சரியான ஆயுதம் என்பதைப் புரிந்து கொண்ட பருத்திவீரன் சரவணனின் தந்தையார் கதை நடக்கும் கிராமத்தில் பள்ளி ஒன்றைத் துவங்குகிறார். ஏவலாளிகள் கல்வி அறிவு பெற்றுவிட்டால் தங்களுக்கு அடிமைகளாக இருக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து வைத்திருக்கும் ஆண்டான் ஜெயபாலன் அதைத் தடுக்கப் பல வகையிலும் முயற்சிக்கிறார். 

அதில் ஒன்று, வேட்டைக்குப் போகும் சாமியாக வருடம் தோறும் வேடம் தரிப்பது. பள்ளிக்கூடம்  வேட்டைக்கு சாமி போகும் வழியில் இருப்பது தெய்வ குற்றம் என்று நம்ப வைக்கப் போராடுகிறார். 

அது எடுபடாத நிலையில் பள்ளி ஆரம்பித்த பெரியவரை அடித்து போட்டு பைத்தியமாக்குகிறார். ஆனாலும் அவரது மகன் சரவணன் படித்து அந்தப் பள்ளியைத் தன் பொறுப்பில் எடுத்து நடத்துகிறார். ஜெயபாலனின் மகனும் இப்போது சாமியாடியாக இருக்க, அந்தத் தலைமுறையிலும் பள்ளிக்கூடத்தை இடிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. 

அதுவும் தோல்வியடைய சரவணனை இப்போது பைத்தியம் ஆக்குகிறார்கள். மூன்றாவது தலைமுறையாக சரவணன் இடத்தில் அவரது மகன் விமல் ஆசிரியராகவும், எதிர் அணியில் ஜெயபாலனின் பேரன் சிராஜ் சாமியாடியாகவும் ஆக, இந்தத் தலைமுறையில் யார் வென்றார்கள் என்பதுதான் மீதிக்கதை.

கிராமத்து பள்ளி ஆசிரியர் வேடத்தை விமலுக்கு என்றே ஒதுக்கி விட்டார்கள் போலிருக்கிறது. அவரது பேண்ட் சட்டையைப் போலவே ஆசிரியர் வேடமும் அவருக்கு சரியாகப் பொருந்துகிறது. நண்பன் வேடத்தில் இருக்கும் வில்லனை அடையாளம் தெரியாத அப்பாவியாக இருக்கும் விமலைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.

அவர்தான் ஹீரோ என்றாலும் நடுத்தர மற்றும் வயதான வேடத்தில் வரும் பருத்திவீரன் சரவணனுக்குதான் படத்தில் அதிக பொறுப்பு இருக்கிறது. பைத்தியமாகிவிட்ட தந்தை இறந்து போன நிலையில் அவரைக் கட்டி வைத்திருந்த சங்கிலியை எடுத்துக் கூரையின் மேல் போடும்போது அவர் முகத்தில் அத்தனை திருப்தி தெரிகிறது. 

அதேபோல் அகிம்சை வழியிலேயே எதிராளிகளை அவர் வகையில் வென்றெடுத்து, தானும் பைத்தியமாக்கப்படும்போது மேலே போட்ட சங்கிலியை எடுத்து தனக்குத்தானே பிணைத்துக் கொள்ளும்போது கண்ணீர் மல்க வைக்கிறார். 

கதாநாயகி வேண்டுமே என்பதற்காக சாயா தேவியை நாயகி ஆக்கி இருக்கிறார்கள். சாயா சும்மா வந்துவிட்டு போய் விடக்கூடாது என்பதற்காக பின் பாதியில் அந்தக் கேரக்டருக்கும் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறார் இயக்குனர்.

நட்பாக இருந்து நண்பர்களையே போட்டுத் தள்ளத் துடிக்கும் நயவஞ்சக வில்லனாக நடித்திருக்கும் சிராஜ், சிறப்பாக வருவார். 

முரட்டு மீசை ஜெயபாலனுக்கு ஒரு நாற்காலியில் உட்கார வைத்தால் கூடப் போதுமானது. விழிகளை உருட்டியே வில்லத் தனம் காட்டிவிடுகிறார்.

ஒரே வீட்டில் மாமனார், பிறகு கணவர், அதற்கு அடுத்து மகன் என்று பைத்தியங்களாக ஊர்க்காரர்களால் உருவகப் படுத்தப்பட ரமாவின் நிலைதான் கொடுமையானது.

சிந்து குமாரின் இசையில் பாடல்கள் மணியாக ஒலிக்கன்றன. நெடுநாள் கழித்து தமிழ் சினிமாவில் பாடல் வரிகளும் கவனிக்க வைத்திருக்கின்றன.

இனியன் ஜே.ஹரிஷின் ஒளிப்பதிவு படத்திற்கு உயிரூட்டி இருக்கிறது. 

படத்துக்கு கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் போஸ் வெங்கட் பாராட்டுக்குரியவர். ஆண்டாண்டு காலமாய் ஆண்டு வரும் ஆண்டான்களுக்கு ஆசிரியர்கள் உருவில் அவர் கொடுத்திருக்கும் சவுக்கடி இந்தப் படம்.

ஆசிரியரின் சிறப்பு பற்றி சரவணன் தன் மகன் விமலுக்கு புரிய வைக்கும் இடம் ஹைலைட்.

ஆனால், இந்த சீரியஸான படத்தில் கொஞ்சம் வணிக நோக்கம் கருதி முதல் பாதியில் இரண்டு டோஸ் அதிகமான காதலைச் சேர்த்து விட்டிருக்கிறார். பள்ளிக்குள் காதல் என்பது பானைக்குள் ஊற்றிய பாயாசம் போல் ஒட்டாமல் இருக்கிறது. 

அத்தனை படித்த குடும்பத்தில் இருப்பவர்கள் தந்தையார் பைத்தியமாகிவிட்டால் அப்படித்தான் மாட்டுத் தொழுவத்தில் கட்டிப் போடுவார்களா..?

என்னதான் சரவணனே விரும்பி ஏற்றுக் கொண்டாலும் அவரை வெளியே சங்கிலியால் கட்டிப்போட்டு வைத்திருக்க உள்ளே அவர் மனைவியும் மகனும் எப்படி நிம்மதியாகத் தூங்குகிறார்கள் என்பது புரியவில்லை. இந்த லாஜிக் மீறல்களைத் தவிர்த்து இருக்கலாம்.

இப்படிச் சில குறைகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் ஆசிரியர்களின் பெருமைகளைச் சொல்லும் இந்தப் படத்துக்கு அரசு வரிவிலக்கு கொடுத்து கௌரவிக்க வேண்டும். 

செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று இந்த படம் வெளியாகி இருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.

சார் – குரு வணக்கம்..!

– வேணுஜி