தலைப்பைப் பார்த்த உடனேயே தெரிந்திருக்கும் ‘இது குழந்தைகளுக்கான படம்’ என்று. தலைப்பில் இருப்பது போலவே ஒரு வகுப்பில் பயிலும் இரு பள்ளிச் சிறுவர்கள் மற்றும் சிறுமி என்ற மூவர்தான் இந்தப் படத்தில் முக்கியப் பாத்திரங்களை ஏற்கிறார்கள்.
கைலாஷ், பிரணதி, வேதாந்த்தான் அந்த மூவர். இந்த மூவரில் ஒருவன் குறைவான மதிப்பெண் எடுத்து விட்டான் என்பதற்காக மீதி இருவரும் தங்கள் மதிப்பெண்ணைக் கொடுத்து அவனைக் காப்பாற்ற நினைக்கும் அளவுக்கு ‘மார்க்’க பந்துக்கள்.
இவர்களில் கைலாஷின் பெற்றோரான வெங்கட் பிரபுவும், சினேகாவும் ஐடி துறையில் வேலை செய்வதால் எப்போதும் பிசியாக இருக்கிறார்கள்.
தங்கள் மகன் தனி ஆளாக வளர்கிறானே என்ற நினைப்பு கூட இல்லாமல் அடுத்த குழந்தை பெறுவதற்கு 1008 கண்டிஷன் போட்டு நிறுத்துகிறார் சினேகா. தனிமையில் சிக்கித் தவிக்கும் கைலாஷுக்கு ஒரு நாய்க்குட்டியாவது வளர்க்க ஆசை உண்டாக, அதற்கும் ‘வள்’ என்று விழுகிறார் சினேகா.
ஆனால் நண்பனின் ஆசைக்காக பிரணதியும் வேதாந்தும் அவனது பிறந்தநாளுக்கு நாய்க்குட்டியைப் பரிசளிக்க முடிவு செய்கிறார்கள். அதற்கும் சினேகா ஒத்துக் கொள்ளாத நிலையில் வெங்கட் பிரபுவின் பெரு முயற்சியால் அந்த நாய் கைலாஷ் வீட்டில் குடியேறுகிறது.
அந்தக் குடியிருப்பில் இருக்கும் அத்தனை பேரின் தேவைகளையும் நிறைவேற்றும் இன்னொரு சிறுவன் பூவையார். பள்ளிக்கு செல்ல வசதி இல்லாத அவன் எல்லாருடைய வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்யக்கூடியவன், அப்படியே கைலாஷின் நாயையும் பாதுகாத்து வருகிறான்.
இந்த நிலையில் வெங்கட் பிரபுவும் சினேகாவும் வெளியூர் செல்ல நேர பிரணதியும், வேதாந்தும் கைலாஷ் வீட்டில் வந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து நாய் காணாமல் போகிறது.
நாயைத் தேடி வீட்டை விட்டு வெளியேறும் மூவரும் என்னென்ன பாடுபட்டார்கள் – நாய் திரும்பக் கிடைத்ததா என்பதுதான் இயக்குனர் அருணாச்சலம் வைத்தியநாதன் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தின் கதை.
மூன்று குழந்தைகளுமே கொள்ளை அழகு. சிறிய வயது ஜிவி பிரகாஷ் போலிருக்கும் கைலாஷ்தான் கிட்டத்தட்ட கதையின் நாயகன். உயிர்ப்பான கண்களும், உணர்ச்சிகளுக்கு ஒத்துப் போகும் முகமும் அவனை சில வருடங்களிலேயே ஒரு ஹீரோவாக்கி விடக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
பிரணதி உலகறிந்த சூப்பர் சிங்கர் என்பதால் அதைப் பயன்படுத்தி படத்தில் பாடவும் வைத்து விட்டார் இயக்குனர். கிட்டத்தட்ட படத்தில் நான்கு இடங்களில் பாடுகிறார் பிரணதி. ஆனால் எல்லா இடத்திலும் “சிங்கார வேலனே தேவா…” பாடலை பாடியிருக்க வேண்டாம். வேறு பாடல்களையும் பாட வைத்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.
குண்டுப் பையன் வேதாந்தும் அற்புதமாக நடித்திருக்கிறான். சூப்பர் ஹீரோக்களின் கனவில் வாழும் அவனுக்கும் படத்தில் ஓரிடத்தில் சண்டை போடவும், அடி வாங்கவும் வாய்ப்பு கிடைக்கிறது.
கண்டிப்பான அம்மாவாக சினேகாவும் கலகலப்பான அப்பாவாக வெங்கட் பிரபுவும் கூட பொருத்தமான ஜோடியாகி இருக்கிறார்கள்.
பிரணதியின் அப்பாவாக வரும் இயக்குனர் அருணாச்சலம் வைத்தியநாதன் தன் பங்கைச் சரியாகவே செய்திருக்கிறார். ஆரம்பத்தில் மகள் பாடுவதை விரும்பாத அவர், மகளின் ஆர்வத்தைப் பார்த்து மனம் மாறுவது நேர்மறைக் காட்சி.
வசதியான வீட்டுப் பிள்ளைகளான கைலாஷ், பிரணதி, வேதாந்த் எப்படி நம்மைக் கவர்கிறார்களோ அப்படியே ஏழைச் சிறுவன் பூவையாரும் நம்மைக் கவர்கிறான். தொலைந்து போன நாயைக் கண்டுபிடிக்க அவனுடைய பேருதவி இந்தக் குழந்தைகளுக்கு தேவைப்படுவது இயல்பாக இருக்கிறது.
சுதர்சன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு ரம்மியமாக இருக்கிறது. வீணை மேதை ராஜேஷ் வைத்யா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். அதில் இசைஞானியின் சாயல் நிறையவே இருக்கிறது – எனவே கவர்கிறது.
ஒரு காலத்தில் விலங்குகளை வைத்துப் படம் எடுத்தால் அந்த விலங்குகள் மனிதர்களைக் காப்பதாக கதை எழுதுவார்கள். இப்போது காலம் மாறிப் போய்விட்டதால் கதையும் மாறிப் போய் மனிதர்கள் எல்லாம் சேர்ந்து விலங்குகளைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த அளவுக்கு விலங்கு நல ஆர்வலர்கள் பெருகிவிட்டார்கள் என்பதை நாம் ஒத்துக் கொள்ளவும் வேண்டும்.
நாயை ‘நாய்’ என்று சொன்னால் கூட பிரச்சனை எழுந்து விடும் அளவுக்கு விலங்குகள் மீதான அக்கறை இப்போது பெருகிவிட்டது நல்ல விஷயம்தான். எனவே இந்த விமர்சனத்தில் கூட ‘நாய்’ என்று வரும் இடங்களில் எல்லாம் அதன் பெயரான ‘மேக்ஸ்’ என்று மேக்ஸிமம் திருத்தி வாசிக்கவும்.
இந்தப் படத்தில் விலங்கு நல ஆர்வலராக சிவாங்கி நடித்திருப்பதும், அவரே, தவறான மாநகராட்சி ஊழியர்களால் உயிர் விடவிருந்த பல தெரு நாய்களைக் காப்பாற்றுவதும் ஆறுதலான விஷயம்.
ஆனால் என்ன ஒன்று… பெருகிவரும் தெரு நாய்களை எடுத்து வீடுகளில் வளர்க்கச் சொல்லி இருந்தால் இந்தப் படத்தைக் கொண்டாடி இருக்கலாம்.
மாறாக வீடுகளில் வளர்ப்பதற்கு வெளிநாட்டு ரக நாய்களே சிறந்தது போலவும், தெரு நாய்களைப் பராமரிக்க விலங்கு ஆர்வலர்கள் இருக்கவே இருக்கிறார்கள் என்பது போலவும் கருத்தைத் தோற்றுவிக்கும் படமாக இதை உணர முடிகிறது.
ஆனால், படைப்பாகப் பார்த்தால் ஒரு இடத்திலும் தொய்வு ஏற்படாமல் குடும்பத்துடன் – முக்கியமாக குழந்தைகளுடன் ரசிக்கக்கூடிய படமாக இருப்பதால் இந்தப் படத்தை அப்படியே ரசிக்கலாம்.
குழந்தை பிறப்பு பற்றி வெங்கட்பிரபு மழுப்ப, கூகுள், அலெக்ஸா வழியாக அதை அறிந்து வைத்திருக்கும் கைலாஷ், அதைப் போட்டு உடைப்பதும் இன்றைய குழந்தைகளுக்கு தகவல் எத்தனை எளிதாகக் கிடைக்கிறது என்பதை உணர்த்துகிறது.
அதேபோல் நாய்க்குட்டி வாங்க பணத்தைத் தன் ‘குறள் பித்தன் ‘ அப்பாவிடம் வாங்கும் வேதாந்தின் சாதுர்யம் ரசிக்க வைக்கிறது.
அருகி வரும் ‘குழந்தைகளுக்கான படங்கள்’ என்ற ஜேனரைத் தூசு தட்டிப் படமெடுத்ததற்காகவும் இந்தப் பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அருணாச்சலம் வைத்தியநாதனைப் பாராட்டியே ஆக வேண்டும்.
ஷாட் பூட் த்ரீ – வாய்ஸ் ஃபார் நாய்ஸ்..!