October 5, 2024
  • October 5, 2024
Breaking News
October 6, 2023

ரத்தம் திரைப்பட விமர்சனம்

By 0 232 Views

ஆணவக் கொலை கேள்விப் பட்டிருக்கிறோம். இந்தப் படத்தில் நிறைய வெறுப்புக் கொலைகளைக் காட்டுகிறார் இயக்குனர் சி.எஸ்.அமுதன். அது என்ன வெறுப்புக் கொலை..?

தனக்கு பிடித்த நடிகரைப் பற்றித் தவறாக எழுதிய பத்திரிகையாளர், தனது மதத்துக்கு எதிராக செயல்பட்டதாக ஒருவன் நம்பிய கலெக்டர் – இப்படித் தனி நபர்களின் வெறுப்புக்கு ஆளானவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.

இது வழக்கமாக நாட்டில் நடப்பதுதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால்,  இப்படித் தனி மனித வெறுப்பின் பின்னணியில் வேறு ஒருவரின் சுயநலம் இருப்பதாக நம்புகிறார் படத்தின் ஹீரோவான பத்திரிகையாளர் விஜய் ஆண்டனி.

ஆம்… இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி ஒரு பத்திரிகையாளராக வருகிறார். ‘புலனாய்வு இதழியலி’ல் அவர் ‘ மாஸ்டர் ‘ என்கிறார்கள். சொந்த வாழ்க்கை சோகம் காரணமாக கொல்கத்தாவில் தங்கி விட்ட அவரை மீண்டும் பத்திரிகைத் துறைக்கு வரவழைக்கிறது அவரது நெருங்கிய நண்பரான மேற்படி பத்திரிகையாளரின் மரணம்.

அதைப் பற்றிய விஷயங்களைப் புலனாய்வு செய்யும் போதுதான் நாட்டில் நடக்கும் பல கொலைகளும் நேரடியாக ஒருவரது வெறுப்பைக் காட்டுவதாக இருந்தாலும் அவற்றுக்கெல்லாம் பின்னணியில் ஒரு சூத்திரதாரி இருக்க வேண்டும் என்று நம்புகிறார்.

அவர் நம்பிக்கை சரிதானா, (சரியில்லாமல் போய் விடுமா..?) அப்படியானால் அந்த வில்லன் யார் என்பதெல்லாம் மீதி சமாச்சாரங்கள்.

விஜய் ஆண்டனி வழக்கம்போல்… அவர் ஏற்கும் பாத்திரம் ஏழையாக இருக்கட்டும்… பிச்சைக்காரனாக இருக்கட்டும்… போலீசாக இருக்கட்டும்… பத்திரிகையாளராக இருக்கட்டும்… அதில் ‘அவர்’ மட்டுமே தெரிகிறார் – இதிலும் அப்படியே..!

சண்டைக் காட்சிகளில் கூட ஹஸ்கி வாய்ஸில் பேசிக்கொண்டே பஸ்கி எடுப்பது அவருடைய பிராண்டாகவே ஆகிவிட்டது.

ஆனால், இதில் அவர் குடிக்கிறார் என்பது அவரது கரியரில் புதிய ‘சரக்கு’. சண்டையிடுவதும், குதிரை சவாரி செய்வதும்  கூட புதிய ஐட்டங்கள்.

சொன்னா நம்ப மாட்டீங்க… ஒரு சீனில் மனிதர் கமலுக்கே டஃப் கொடுக்கிறார். ஆமாங்க… மனைவியை லிப் டூ லிப் கிஸ் அடித்து ‘அடடே ஆண்டனி..!’ ஆகிறார். (ஆனால் தேர்ட் அம்பயர் வைத்து அதன் உண்மைத் தன்மையை சோதிக்கும் அளவுக்கு லாங் ஷாட்டில் எடுத்து இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்…)

நாயகனுக்கு ஜோடியாக இல்லாவிட்டாலும் நாயகி நந்திதா ஸ்வேதாவும் ஒரு பத்திரிகையாளராக வருகிறார். ஆரம்பத்தில் கொஞ்சம் பரபரப்பைக் கூட்டுபவர் ஹீரோ கதைக்குள் சார்ஜ் எடுத்ததும், இவர் சார்ஜ் இறங்கிப் போகிறார்.

படத்தில் வரும் ‘ வானம் ‘ பத்திரிகையின் முதலாளியாக வருகிறார் நிழல்கள் ரவி. நாணயமாக நடந்து கொண்டாலும் அவர் நடத்தும் அலுவலகம் கோடீஸ்வரத் தனமாக இருப்பது ஆச்சரியத்தையும்… கூடவே சந்தோஷத்தையும் தருகிறது.

ரம்யா நம்பீசனுக்கு சிறிய பாத்திரம்தான் என்றாலும் ஒரு அழுத்தமான பாத்திரமாக அமைந்திருப்பது மட்டுமல்ல, மனைவியை இழந்த விஜய் ஆண்டனி, கணவனை இழந்த அவர் கையைப் பிடித்து ஆறுதல் சொல்வதும் கூட ஒரு ஆறுதல்தான். 

நகைச்சுவை இயக்குனராக அறியப்பட்ட சி.எஸ்.அமுதன், தான் இயக்கும் இந்த சீரியஸ் படம் நகைப்புக்கிடமாக ஆகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார். முதல் பாதிப் படத்தில் காட்சிகளும் விஷயங்களும் பேசுபொருளும் பிழை இல்லாமல் இருப்பதுடன் பரபரப்பாக நகர்கிறது.

வில்லன் யாராக இருக்கக்கூடும் என்று விஜய் ஆண்டனி ஒரு பக்கம் புலனாய்வு செய்து கொண்டிருக்கும் போது ‘ மடார் ‘ என்று இவர்தான் வில்லன் என்று இடைவேளைக்கு முன்னரே புதிரை விடுவித்து விடுகிறார் அமுதன்.

இனி படத்தில் என்ன சுவாரசியம் இருக்கப் போகிறது என்று நாம் நினைக்குமளவுக்கான அவரது ‘தில்’ ஆச்சரியப்படுத்துகிறது.

ஆனால் பின் பாதியை வழக்கமான கமர்சியல் சினிமாவாகவே அமைத்திருப்பது அவரது வழக்கமான ஸ்பூஃப் பாணியோ என்றே நினைக்க வைக்கிறது. அந்த அளவுக்கு தமிழ் சினிமா அம்மியிலும் மிக்ஸியிலுமாக அரைத்து விட்ட வழக்கமான மசாலாக்கள்

யாராலும் தன்னைப் பிடிக்க முடியாதபடி வில்லன் ஹைடெக் ஆக அத்தனை விஷயங்களையும் சிஸ்டம் சிஸ்டமாக சேகரித்து வைத்திருக்க, அதைத் திருட்டு டி.ஐ.ஜி உதவியுடன் கமிஷனர் அலுவலகத்திலேயே அரும்பாடு பட்டுப் பாதுகாப்பாக வைக்கிறார்கள்.

ஆனால் அதில் இருக்கும் ‘ஹார்ட் டிஸ்க்’ குகள் மட்டுமே போதும் என்கிற அளவில் விஜய் ஆண்டனி எளிதாக அதை ஒரு சிறிய பையில் கொண்டு வந்து விடுகிறார். அது மட்டுமே போதும் எனும்போது வில்லனே அதை சாதுரியமாக எடுத்து ஏன் மறைத்து வைத்திருக்க முடியாது..?

இப்படிப் பின் பாதி முழுக்க நிறைய லாஜிக்குகளுக்கு ஏன்..? எப்படி..? எதற்கு..? என்றெல்லாம் நமக்குக் கேள்விகள் அலைமோதுகின்றன. அதற்கெல்லாம் ஒரே பதில் ‘கமர்சியல் சினிமா என்றால் இப்படித்தான்…’ என்று ஸ்மைலி 😅 போட்டுக் கொள்வதைத் தவிர வேறு எதுவும் இல்லை.

இந்தப் படத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்வது சிறந்த பத்திரிகையாளராக இருக்க, குதிரையேற்றம் உள்பட சண்டைக்கலையும் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான்.

வில்லன் யார் என்று தெரிந்தும் பழிவாங்காமல் கதாநாயகன் விட்டுவிடுவதும், அதற்கு விஜய் ஆண்டனி சொல்லும் காரணமும் புதுமையானவை என்று சொன்னால் இயக்குனர் அமுதன் மட்டுமே மகிழக் கூடும்.

நேர்த்தியான படமாக வந்திருப்பதில் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்தின் பங்கு அல்டிமேட். கண்ணனின் இசையும் கச்சிதம்.

ரத்தம் – நான்காம் தூணின் பயாஸ்கோப் பதிப்பு..!