May 5, 2024
  • May 5, 2024
Breaking News
October 7, 2023

இந்த கிரைம் தப்பில்ல திரைப்பட விமர்சனம்

By 0 183 Views

பெண் இனத்துக்கு கொடுஞ்செயல் புரியும் காமுகர்களை சட்டத்தை மீறி தண்டித்தாலும் அந்த கிரைம் தப்பில்லை என்பதுதான் படத்தின் ஒன் லைன். இதைத் தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு சொல்லி இருக்கிறார் இயக்குனர் தேவகுமார்.

ஒரு பக்கம் கிராமத்துப் பெண் நாயகி மேக்னா இலன், நகரத்துக்கு வந்து மார்டனாகி செல்போன் கடை ஒன்றில் வேலை பார்க்கிறார். அங்கு வரும் மூன்று வாலிபர்களோடு தனித்தனியாக அறிமுகமாகி அவர்களைக் காதலிப்பது போல் நடிக்கிறார். அது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இன்னொரு பக்கம், ஓய்வு பெற்ற இராணுவ வீரரான ஆடுகளம் நரேன். ரகசியமாக தாக்குதல் ஒன்றை அநீதி கண்டு பொங்கும் கோபக்கார இளைஞரான நாயகன் பாண்டி கமலை வைத்து நிறைவேற்ற நினைக்கிறார். இது ஏன் என்பது இன்னொரு கேள்வி.

இரண்டு கேள்விகளுக்குமான பதில்கள்தான் ‘இந்த கிரைம் தப்பில்ல’ படத்தின் மீதிக்கதை.

கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் தேவகுமார். இப்போது நாம் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனையை வைத்து அதற்கு தீர்வு காண முயன்றிருப்பதைப் பாராட்டலாம்.

நாயகன் பாண்டி கமல் கோபக்கார இளைஞர் என்ற கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக படம் முழுக்க நியாயமான சீற்றத்துடன் வருகிறார்.

நாயகி மேக்னா எலன் கிராமத்து உடையில் மட்டுமல்லாமல் நாகரிக உடையிலும் கவர்கிறார். தனது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை அவரால் வழங்க முடிந்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால், பாத்திரத்தின் மெச்சூரிட்டிக்கு ஈடு செய்ய முடியாமல் பார்வைக்கு மிகவும் சிறிய பெண்ணாகத் தெரிகிறார்.

ஆடுகளம் நரேன் தனது அனுபவ நடிப்பை நிறைவாக வழங்கியிருக்கிறார்.

முத்துக்காளை, வெங்கல் ராவ், கிரேசி கோபால், காயத்ரி உள்ளிட்டோர் தங்களது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். ஆனால் தனது பேத்தியின் வயதை ஒத்த பெண்களை வெங்கல் ராவ் சைட் அடிப்பதெல்லாம் ரொம்ப ஓவர்.

பரிமளவாசனின் இசையில் அமைந்த பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன. பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். ஏ.எம்.எம்.கார்த்திகேயனின் ஒளிப்பதிவு ஓகே.

இன்றைய நவீன யுக சினிமாவுடன் போட்டி போட முடியாத தொழில்நுட்ப பற்றாக்குறை பட்ஜெட் குறைவால் ஏற்பட்டிருக்கலாம். இருந்தாலும் நல்ல விஷயத்தை சொல்ல முடிவெடுத்ததை பாராட்டியே ஆக வேண்டும்

‘இந்த கிரைம் தப்பில்ல’ – ஒருமுறை பார்த்தால் தப்பில்ல..!