December 2, 2024
  • December 2, 2024
Breaking News
October 8, 2023

800 படத்தின் திரை விமர்சனம்

By 0 410 Views

கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் யாரும் எட்ட முடியாத உயரமான 800 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையைச் செய்தவர் இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த முத்தையா முரளிதரன்.

தமிழரான அவரது வாழ்க்கை சாதனைகள் நிரம்பியது என்றாலும் எத்தனை சோதனைகளைத் தாண்டி அதைச் சாதித்தார் என்பதை அந்தப் போராட்ட வலிகளோடு இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ஸ்ரீபதி.

முத்தையா முரளிதரனின் சிறு வயது முதலே அவரது வாழ்க்கை படத்தில் சொல்லப்படுகிறது. கிரிக்கெட் மீதான ஆசையால் அவர் உறைவிட பள்ளிக்குச் சென்றது தொடங்கி பள்ளி, கல்லூரியில் முத்தையா சாதித்தது, இங்கிலாந்தில் அறிமுகமான தொடரில் அதிருப்தி அளித்தது என்று தொடர்ந்து உலகக் கோப்பை வெற்றி, சட்டவிரோதமாக பந்தை வீசுவதாக எழுந்த சர்ச்சை என்று போகிறது திரைக்கதை.

வழக்கமான சினிமா ஹீரோக்களைப் போல் அவர் ஆரம்பத்தில் இருந்தே ஜெயித்து விடவில்லை. மாறாக அவரது முதலாவது இங்கிலாந்து டூரில் இலங்கை தோல்வி அடைந்து அவர் கேலிக்கு உள்ளாக்கப்பட்டுத் திரும்பி வருகிறார்.

இனி அவர் வாழ்க்கையில் கிரிக்கெட் கிடையாது என்று அவரது குடும்பத்தினர் முடிவு செய்து அவரது தந்தை பார்த்து வந்த பிஸ்கட் கம்பெனியில் தொழில்நுட்ப புதுமைகளைப் புகுத்த அது சம்பந்தமான கல்வி பயில வெளிநாடு போகச் சொல்லுகிறார்கள்.

அதற்கான அப்ளிகேஷன் போடும் வேளையில் மீண்டும் கிரிக்கெட் மீதான ஆர்வத்தில் அதைக் கிழித்துப் போடுகிறார் முரளிதரன்.

 

அந்த நேரத்தில் இலங்கை அணியில் சரியான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை என்பதால் அவருக்கு மீண்டும் அழைப்பு வருகிறது. அங்கேயும் சாதித்தாரா என்றால் இல்லை. அத்துடன் அவர் பந்து வீசும் முறை ‘எறிவதாக’ இருப்பதாக ஆஸ்திரேலியா குற்றம் சாட்ட, உடனே சர்வதேச கிரிக்கெட் கிளப்பின் சோதனைக்கு உட்பட சம்மதிக்கிறார். அங்கே அவரது பந்து வீச்சு சரியாக இருப்பதாக அறிவிக்கப் படுகிறது. இல்லையென்றால் அவரது சகாப்தம் அன்றே முடிந்திருக்கும்.

500 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய போதும் அந்தப் பிரச்சினை முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டிருக்க, தன்னை நிரூபிக்க அவர் இரும்புத் தகட்டைக் கையில் அணிந்து பந்து வீசி ஆய்வுக்கு உள்ளாக, அதனால் கை மூட்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வருகிறது.

இப்படியே தொடரும் சோதனையில் ஆயிரம் விக்கெட் எடுக்கக் கூடிய ஆற்றலும், சாத்தியமும் இருந்தும் 800 விக்கெட்டோடு நிறுத்திக் கொள்கிறார் அவர்.

அந்தக் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்துதான் படமே தொடங்குகிறது. முத்தையா முரளிதரனை சிறு வயதில் இருந்து கவனித்து வரும் பத்திரிகையாளர் நாசர்தான் அவரது கதையை விவரிக்கிறார்.

முன்பாதிக் கதை முழுவதும் அவர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை என்பதுடன் முடிய, பின் பாதிக் கதையில்தான் அவர் எடுத்த மொத்த விக்கெட்டுகளும் காட்டப்படுகின்றன.

இலங்கையில் தமிழராக பிறந்ததால் அதில் ஏற்படும் நெருக்கடி, ஆயுதப் போராட்டத்தை நம்பாமல் அமைதியை விரும்பியதால் தமிழ் மக்கள் மத்தியில் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடி, இயற்கையாக வளைந்த கையுடன் இருந்ததால் விளையாட்டில் ஏற்பட்ட நெருக்கடி என்று அவரது இன்னல்கள் யாவும் படத்தில் சரியாகக் காட்டப்பட்டு இருக்கின்றன.

இரண்டாம் பாதியில் ஈழப் போராளிகளின் தலைவரை முத்தையா முரளிதரன் சந்திப்பதைக் காட்டும் காட்சி முக்கியமானது. எல்.டி.டி.இ.தலைவர் பிரபாகரனை அந்தப் பாத்திரத்தில் நடிக்கும் நரேன் பிரதிபலிக்கிறார்.

தலைவரிடம் முரளிதரன், “நீங்கள் ஏன் ஆயுதத்தை ஒதுக்கி வைத்து விட்டு அமைதியை விரும்பக் கூடாது..?” என்று தைரியமாகக் கேட்கிறார். அதற்கு தலைவரோ, “இந்த ஆயுதத்தை நாங்கள் கையில் எடுத்ததால்தான் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்படுகிறோம்..!” என்று பதில் சொல்கிறார். அந்த காட்சியில் கைத்தட்டலில் அரங்கமே அதிர்கிறது.

முத்தையா முரளிதரனுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடி போலவே இந்தப் பட இயக்குனர் ஸ்ரீபதிக்கும் இலங்கையையும் தவறாக சொல்லி விடக்கூடாது, தமிழரான முரளிதரன் வாழ்க்கையையும் நியாயப்படுத்த வேண்டும், ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற நாட்டு கிரிக்கெட் வீரர்களையும் தவறாக சித்தரித்து விடக்கூடாது என்கிற ஏகப்பட்ட நெருக்கடிகள் இருந்திருப்பது புரிகிறது.

அதையெல்லாம் அற்புதமாகக் கடந்து ஒரு அருமையான வாழ்க்கை சரித்திரத்தை படைத்திருக்கிறார் எம்.எஸ்.ஸ்ரீபதி.

 

முரளிதரனாக நடித்திருக்கும் மதுர் மிட்டலை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர் இயல்பிலேயே நல்ல நடிகர் என்பது ஒரு புறம் இருக்க, முரளிதரன் பந்து வீசும் லாவகத்தை அப்படியே திரையில் கொடுத்ததற்காகவும், முரளியின் உடல் மொழியைப் பிரதி எடுத்து நடித்ததற்காகவும் அவருக்குப் பல விருதுகள் காத்திருக்கின்றன.

அவருக்கு அடுத்தபடியாக இலங்கை கிரிக்கெட் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா வேடத்தில் நடித்திருப்பவரும் உருவ அமைப்பிலும் சரி, பாத்திரப் படைப்பிலும் சரி மனதில் நிறைகிறார். முரளிதரனின் வெற்றிப் பாதையில் அர்ஜுனாவின் உறுதுணை நிரம்பவே இருந்திருக்கிறது.

முரளிதரனின் தந்தையாக வேல ராமமூர்த்தி மற்றும் முரளிதரனின் மனைவியாக மஹிமா நம்பியார் நடித்திருக்கிறார்கள்.

எல்லோரும் இலங்கைத் தமிழ் பேசிக் கொண்டிருக்க வேல ராமமூர்த்தியின் தமிழில் மட்டும் மதுரை வாடையை மறைக்க முடியவில்லை.

கமர்சியல் படங்களில் அதிரடி கிளப்பும் ஆர்.டி. ராஜசேகரா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தது என்று கேட்க வேண்டி இருக்கிறது. வாழ்க்கைக் கதையான இதற்கு எத்தனை நியாயமாக ஒளிப்பதிவு செய்ய வேண்டுமோ அத்தனை நியாயமாகவும் சரியான கோணங்களிலும் பதிவு செய்திருக்கும் அவருக்கும் விருதுகள் காத்திருக்கின்றன.

ஜிப்ரானின் இசையும் படத்தின் உணர்வுகளை மிகச் சரியாகக் கடத்தி இருக்கிறது.

படம் முடிந்த போது ஒரு முழுமையான படத்தைப் பார்த்த திருப்தி ஏற்பட்டது நிஜம்.

பல சர்வதேச விருதுகளை இந்த 800 படம் தட்டி வரப்போகிறது.

800 – அவுட் ஆஃப் 1000.

– வேணுஜி