May 4, 2024
  • May 4, 2024
Breaking News
October 9, 2023

எனக்கு என்டே கிடையாது திரைப்பட விமர்சனம்

By 0 237 Views

தன்னம்பிக்கை இருப்பவர்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் முதல் படம் இயக்கும்போது அந்தப் படத்தில் தானே ஹீரோவாக நடிப்பார்கள். இதற்கு பார்த்திபனில் இருந்து பிரதீப் வரை உதாரணங்கள் சொல்லலாம். 

அந்த வரிசையில் சேர்கிறார் இந்தப் பட இயக்குனர் விக்ரம் ரமேஷ்.

இந்தப் படத்தின் முதன்மை நாயகனாக, கால் டாக்ஸி டிரைவராக வரும் அவருக்கு பெப்ஸி நழுவி விஸ்கியில் விழுந்தது போல் அடுத்தடுத்து அதிர்ஷ்டங்கள் கிடைக்கப்பெறுகின்றன – ஒரு பப்பில் இருந்து நாயகி ஸ்வயம் சித்தாவை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் போது.

மிகப்பெரிய கோடீஸ்வரியாகத் தெரியும் ஸ்வயம் சித்தா தனது பங்களாவுக்குள் விக்ரம் ரமேஷையும் அழைத்து மதுவோடு சேர்த்து தன்னையும் பரிமாறுகிறார்.

அதுவரை அதிர்ஷ்டம் அவரது தோளில் கை போட்டு நிற்க, அதற்கு அடுத்த நொடியில் இருந்து துர்ப்பாக்கியம் காலை வார ஆரம்பிக்கிறது.

அந்த வீட்டுக்குள் யாரும் இல்லை என்று விக்ரம் ரமேஷ் நினைக்கையில் ஒரு அறையில் ஒருவர் கொலையுண்டு இருப்பதைக் காண்கிறார். அது தொடர்பான வாக்குவாதத்தில் துரதிர்ஷ்டவசமாக ஸ்வயம் சித்தாவும் இறந்து போக, முழுவதும் ஹைடெக் ஆக அமைக்கப்பட்டிருக்கும் அந்த வீட்டுக் கதவைக் கூட அவரால் திறந்து வெளியேற முடியவில்லை. அதற்கு ஒரு பாஸ்வேர்ட் தேவைப்படுகிறது.

இரண்டு பிணங்கள் இருக்கும் வீட்டுக்குள் அவர் கூண்டுக்குள் அகப்பட்ட எலியாக சிக்கிக் கொள்ள, இரண்டாவது ஆளாக ஒரு திருடன் பாஸ்வேர்டைத் தெரிந்து கொண்டு அந்தக் கதவைத் திறந்து உள்ளே நுழைகிறான். 

மூன்றாவதாக அரசியல்வாதி ஒருவரும் அந்த வீட்டுக்குள் நுழைய மூவரும் வெளியேற வாய்ப்பு இன்றி உள்ளே சிக்கிக் கொள்கிறார்கள். இந்த பிரச்சனையிலிருந்து எப்படி மீண்டார்கள் என்பதை திக் திக் நிமிடங்களோடு, திறமையாகவும் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் விக்ரம் ரமேஷ்.

ஸ்வயம் சித்தாவைத் தவிர (அவரைக் கூட மிகச் சிலரால் மட்டுமே அடையாளம் காண இயலும்) படத்தில் வரும் அனைவரும் புதுமுகங்களே. ஆனால் ஒருவர் நடிப்பிலும் குறை சொல்ல முடியாமல் இருப்பது இயக்குனரின் திறமையால் மட்டுமே.

விக்ரம் ரமேஷின் அமைதியான நடிப்பும் அழகான முகமும் அவரை ஹீரோவாக ஒத்துக் கொள்ள வைக்கிறது. நான் நடிக்கிறேன் பேர்வழி என்று அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக அவர் நடித்திருப்பதே அந்தப் பாத்திரத்துக்கு வலு சேர்க்கிறது.

சிறிது நேரமே வந்தாலும் ஸ்வயம் சித்தா நம்மை ரொம்பவே கவர்கிறார். அந்த சில் சிரிப்பும் ஜில் அழைப்பும் எந்த ஆண் மகனையும் இடறி விழவே செய்யும்.

அதிலும் மது விருந்தில் சைட் டிஷ் ஆக உப்பையும் எலுமிச்சம் பழத்தையும் எப்படி உட்கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுத்துவிட்டு, கடைசி பெக்கை நான் சொல்வது போல் முடிக்க வேண்டும் என்று அந்த உப்பையும் எலுமிச்சம் பழத்தையும் தன் உதட்டில் வைத்துக் கொண்டு விக்ரம் ரமேஷை முடிக்க சொல்வது வசிய ரசனை.

அந்த வீட்டுக்குள் இரண்டாவதாக வரும் திருடனாக தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமனே நடித்திருப்பதும் அவர் நடிப்பும் மெத்தப் பொருத்தம்.

அரசியல்வாதியாக வரும் சிவகுமாரும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராமல் நிகழும் மரணங்கள் படத்தின் த்ரில்லை ரொம்பவே கூட்டி இருக்கின்றன.

ஒரே ஒரு வீடு – நான்கைந்து பாத்திரங்கள்… இதை மட்டுமே வைத்துக்கொண்டு சுவாரசியம் குறையாமல் ஒரு படத்தை எடுக்க முடித்த விக்ரம் ரமேஷ் ஒரு நம்பிக்கையான இயக்குனராகத் தெரிகிறார்.

ஆனால் இரண்டாம் பாதியில் பரபரப்பாக செல்லும் திரைக்கதை படத்தொடக்கத்தில் ஜிவ்வென்று இருந்தாலும் இடைவேளையில் கொஞ்சம் டல் அடிக்கிறது.

இனிமேல் என்ன நடந்து விடப்போகிறது என்கிற நினைப்பில் இடைவேளையிலேயே படத்தை விட்டுக் கிளம்புபவர்கள் அதற்குப்பின் வரும் சுவாரஸ்யங்களை நிச்சயமாக இழப்பார்கள்.

இதைப் புரிந்து கொண்டு இடைவேளையில் இன்னும் எதிர்பார்ப்பை கூட்டி இருக்க முடியும். இனிவரும் படங்களில் இந்தத் தவறை விக்ரம் ரமேஷ் செய்யாத இருக்கட்டும். 

படம் மற்றும் தலைப்புக்கான டிசைனை வடிவமைப்பிலும் இன்னும் அவரது ரசனை மேம்பட வேண்டும். தலைப்பு டிசைன் ரொம்பவே குழப்புகிறது.

இந்தப் படம் ஒருவேளை எடுபடாமல் போனால் இந்த மேற்படி சமாசாரங்கள் மட்டுமே முக்கிய காரணங்களாக இருக்க முடியும்.

தளபதி ரத்னம் ஒளிப்பதிவு செய்ய கலாச்சரண் இசையமைத்துள்ளார். இருவருமே பாராட்டுக்குரியவர்கள்.

எனக்கு எண்டே கிடையாது என்று துணிச்சலாக தலைப்பை வைத்திருப்பதிலிருந்து விக்ரம் ரமேஷின் தன்னம்பிக்கை ஒளி விடுகிறது.

அது உண்மைதான் – அவரை இன்னும் பல படங்களில் நாம் சந்திக்க இயலும்..!