நேற்று விஜய் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததாக ஒரு புயல் கிளம்பியது. அதற்குப்பின் விஜய்யிடமிருந்து வந்த அறிக்கையில் அந்தக் கட்சிக்கும் தனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபட தெரிவித்து இருந்தார் விஜய்.
அப்போதுதான் தெரிந்தது, விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் ஆரம்பித்த கட்சி அது என்று.
விஜய்யிடம் அனுமதி கேட்காமலேயே தன் விருப்பத்தில் எஸ்ஏசி ஆரம்பித்த அந்த கட்சியில் அவரே செயலாளராகவும், பொருளாளராக விஜய்யின் அம்மா ஷோபா இருப்பதாகவும் தெரியவந்தது.
இப்போது அது குறித்தும் எஸ்ஏசி பற்றிய ரகசியம் ஒன்றையும் உடைக்கிறார் விஜய்யின் தாயார் ஷோபா –
“அசோசியேஷன் ஒன்று ஆரம்பிக்கிறேன். அதற்கு கையெழுத்து வேண்டும் என்று என் கணவர் என்னிடம் கேட்டார். நல்ல விஷயம்தானே என்று நானும் கையெழுத்துப் போட்டேன். ஒரு வாரத்துக்கு முன்பு இன்னொரு கையெழுத்து வேண்டும் என்று கேட்டார். கட்சிப் பதிவு செய்வதற்கு என்று நான் புரிந்துகொண்டேன்.
விஜய்க்குத் தெரியாமல் நீங்கள் பண்ணுவதால் நான் கையெழுத்துப் போடமாட்டேன் என்று என் கணவரிடன் சொல்லிவிட்டேன். முதலில் போட்டுக் கொடுத்த கையெழுத்தைக் கூட நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறிவிட்டேன்.
இதனால் நான் இப்போது கட்சிக்குப் பொருளாளர் எல்லாம் கிடையாது. எனக்குப் பதிலாக வேறொருவரைப் பொருளாளராகப் போட்டுக் கொள்வதாக என் கணவர் சொல்லிவிட்டார்.
அரசியல் விஷயங்களை எல்லாம் மீடியாவில் பேச வேண்டாம் என்று விஜய் பல தடவை சொல்லியும் என் கணவர் பேசிக் கொண்டிருக்கிறார். அதனால் விஜய் இப்போது அவரிடம் பேசுவதில்லை. விஜய் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்”.