அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கழக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து செங்கோட்டையன் கூறுகையில், ” தர்மம் தழைக்க வேண்டும் என நாங்கள் நினைத்தோம். அதிமுக மாபெரும் வெற்றியடைய வேண்டி நேற்று கருத்தை வெளிப்படுத்தினேன்.
அதனால் கழகத்தில் இருந்து நீக்கியதற்கு என் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காகவே ஒருங்கிணைப்பை வலியுறுத்தினேன். நான் சொல்வதை கேட்காவிட்டால் வேதனைப்பட போவதில்லை; மகிழ்ச்சியுடன் பயணிப்பேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கட்சிப் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக ஆதரவாளர்கள் வீட்டிற்கு வந்த வண்ணம் இருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்