வழக்கமாக சீசா என்றால் நமக்கு பாட்டில்தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் அதுவல்ல. மேலும் கீழும் இறங்கி ஆடும் சீசா பலகையைத்தான் இப்படிக் குறிப்பிட்டு இருக்கிறார் இயக்குனர் குணா சுப்பிரமணியம்.
இப்போதைய ட்ரெண்டின் படியே கொலையும், அதைச் சார்ந்த குற்றப்புலன் விசாரணையும் தான் கதைக்களம். ஆனால் ஏன் நடந்தது… எப்படி நடந்தது என்பதில்தான் ஒவ்வொரு இயக்குனரும் வித்தியாசப்படுத்தி நம்மை ரசிக்க வைக்கிறார்கள்.
இந்தப் படத்தில் வெறும் விசாரணை என்றில்லாமல் மருத்துவ ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சில விஷயங்களைச் சொல்லி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.
ஒரு கோடீஸ்வரர் வீட்டில் காவலாளி இறந்து கிடக்க அந்த வீட்டில் வசித்து வந்த இளம் கணவனும், மனைவியும் காணாமல் போகிறார்கள். அதைத் துப்பறிய ஆரம்பிக்கும் போது பல திடுக்கிடும் திருப்பங்கள் போலீஸ் அதிகாரி நட்டிக்கு தெரிய வருகிறது.
காக்கி சட்டை போட்டாலே நட்டி நட்ராஜுக்கு கம்பீரம் வந்து விடுகிறது. ஆனால் ஆக்சனுக்கு எல்லாம் பெரிய வேலை இல்லாமல் இருந்த இடத்திலிருந்து துப்பறிந்து கொண்டிருக்கிறார்.
காணாமல் போனதாகத் தேடப்படும் இன்னொரு நாயகன் நிஷாந்த் ரூசோவுக்கு பைபோலார் டிஸ்ஆர்டர் என்கிற மனப் பிறழ்வு கொண்ட வேடம். இந்த வேடத்தில் நடிப்பது கடினம் என்கிற அளவில் பல்வேறு முகம் காட்டி உணர்ச்சிகளையும் காட்டி பாராட்டத்தகுந்த அளவில் நடித்திருக்கிறார்.
அவரது மனைவியாக வரும் பாடினி குமார், பார்வைக்கு அழகுடனும், நடிக்கத் தெரிந்தும் இருக்கிறார். ஒரு பக்கம் காதல், இன்னொரு பக்கம் பாசம் என்று அவருக்கு எல்லாமே சிக்கலாக அமைந்தது பரிதாபத்துக்குரியது.
சில படங்களில் கதாநாயகனாக நடித்தாலும் இந்தப் படத்தில் வெறும் சப்-இன்ஸ்பெக்டராக நடிக்க ஒத்துக்கொண்ட ஆதேஷ் பாலாவை அவரது நடிப்பு ஆர்வத்துக்காகப் பாராட்டலாம்.
நிஷாந்த் நண்பராக நடித்திருக்கும் மூர்த்தி தான் பாவம், உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி என்பதையெல்லாம் தாண்டி எல்லா பக்கமும் இடிபடுகிறார்.
இறந்து போன வீட்டு வேலைக்காரர் மாஸ்டர் ராஜநாயகன், பாடினியின் தந்தை இயக்குநர் அரவிந்தராஜ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தேவையை நிறைவு செய்து இருக்கிறார்கள்.
பாடல்களிலும், பின்னணி இசையிலும் அடையாளம் தெரிகிறார் இசையமைப்பாளர் சரண்குமார்.
ஒளிப்பதிவாளர்கள் பெருமாள் மற்றும் மணிவண்ணன் திருப்தியாகப் பணியாற்றி இருக்கிறார்கள்.
இவர்களுடன் இந்தப் படத்தை தயாரித்து இருக்கும் டாக்டர் கே. செந்தில்குமாரும் ஒரு மருத்துவராகவே வருகிறார். அவரே இந்தப் படத்தின் கதையையும் எழுதி இருக்கிறார் என்பது ஆச்சரியமான விஷயம்.
இதுபோன்ற கிரைம் திரில்லர் படங்களில் பெரும்பாலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது போதைக்கு அடிமையானவர்கள்தான் குற்றத்தின் இலக்காக்கப்படுவார்கள். ஆனால் இதில் கண்ணுக்குத் தெரியாமல் இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருக்கும் ஒரு முக்கிய விஷயத்தைத் தொட்டு அதை மெசேஜ் ஆக சொல்லி இருப்பது சிறப்பு.
பின் பாதியில் விறுவிறுப்பு எடுக்கும் திரைக்கதை முன்பாதியிலும் அதே அளவு கவனத்துடன் அமைக்கப்பட்டிருந்தால் முழுமையான படமாக ரசிக்கப்பட்டிருக்கும்.
இருந்தாலும் சமூக மாற்றத்துக்கு இது போன்ற படங்கள் வருடத்துக்கு ஒன்று இரண்டாவது வரவேண்டும். அந்த வகையில் இந்தப் படம் வரவேற்கத் தகுந்த முயற்சி.
சீசா – பாஸ்தான்..!
– வேணுஜி