ஒரு ஸ்டாரை உசுப்பேற்றி முதல்வராக்க எத்தனையோ கதைகளை இதுவரை சினிமா இயக்குநர்கள் யோசித்திருக்கிறார்கள்… இது அதில் ஒரு வகை.
இந்தப் படத்தைப் பார்த்தபோது மூன்று கேள்விகள் எழுந்தன.
1.ஒரு மாநில முதல்வராக இத்தனை எளிதாக முயற்சி செய்தால் போதுமானதா..?
அல்லது
2. சினிமாக்காரர்களின் அரசியல் அறிவு இவ்வளவுதானா..?
அல்லது
3. ரசிகர்களால் இவ்வளவு மலிவாக சொன்னால்தான் புரிந்துகொள்ள முடியும் என்று ரசிகர்களின் அறிவை மட்டமாக நினைத்து இப்படி படமெடுக்கிறார்களா..?
ஏற்கனவே கே.பாக்யராஜ் விலாவாரியாக சொல்லி அரவக்குறிச்சி முதல் அன்டார்டிகா வரை சர்கார் கதை அத்துப்படி ஆகிவிட்டதால் அதைத் தனியாக சொல்லத் தேவையில்லை.
அப்படியே கதை தெரியாமல் படம் பார்த்தாலும் அடுத்து இதுதான் என்று எளிதாக யூகிக்கக் கூடிய அளவில்தான் ஏ.ஆர்.முருகதாஸும், ஜெயமோகனும் மெனக்கெட்டிருக்கிறார்கள்.
கருத்தளவில் பாராட்டத்தக்க படத்தின் ஒரே அம்சம் 49பி என்ற தேர்தல் சட்டப்பிரிவை நமக்குத் தெரிவித்திருப்பதுதான். 49ஓ எப்படி நமக்கு இப்போது புழக்கத்தில் உள்ளதோ அப்படி இந்த 49பியைப் புரிந்துகொண்டால் கள்ள ஓட்டுப் போட்டவர்களிடம் இருந்து நம் ஓட்டை மீட்க முடியும் என்பது இதுவரை யாரும் சொல்லாத புதிய செய்தி. அதற்கு மட்டும் ‘சர்கார்’ டீமுக்கு வாழ்த்துகள்.
ஆனால், எந்தப் பொத்தானை அமுக்கினாலும் குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே ஓட்டுவிழும் அளவுக்கு தேர்தல் முறைகேட்டு தொழில்நுட்பம் முன்னேறி விட்ட இந்தக் காலக்கட்டத்தில் இந்த 49பி எடுபடுமா என்பதும் அடுத்த கேள்வி..!
விஜய்யைப் பொறுத்தவரை ‘சுந்தர் பிச்சை’ போல வெளிநாடு வாழ் தமிழராக கோட்டு சூட்டுடன் மிடுக்காக அழுக்குப் படாமல் (அதுவும் முதல் பாதி வரைதான்…) வருவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒரு மில்லி கிராம் கூட சதை ஏறிவிடாமல் மெயின்டெயின் செய்யப்படும் அவர் உருவம் வழக்கம்போலவே ஆடைகளுக்குப் பொருத்தமாகவும், ஆட, அடிக்கப் பொருத்தமாகவும் அமைந்து போகிறது. இன்னும் 25 வருடம் அவர் ஹீரோவாகவே பயணப்படலாம்.
ஆனால், இந்தக் கதையைப் பொறுத்தவரை மேற்படி ’49பி’யைப் பிடிக்கும் வரைதான் அவரது ‘கார்ப்பரேட் மா(ன்)ஸ்டர் மைன்ட்’ ஒர்க் அவுட் ஆகிறது. அதைத் தாண்டிய ‘அலிபாபாவும் 40 திருடர்களும் காலத்திய’ அடாசு கமர்ஷியல் திரைக்கதைக்கு அவர் ஒரு டீக்கடைக்காரராகவோ, மெக்கானிக்காகவோ, மீனவராகவோ… யாராகவோ இருந்துவிட்டுப் போயிருக்கலாம்.
இந்தியக் குடிமகனாக இன்னும் ஓட்டுரிமையை இங்கே வைத்துக்கொண்டு அமெரிக்காவில் அத்தனைப் பெரிய நிறுவனத்தில் உயர் பொறுப்புக்கு வரமுடியுமா..? என்ற நியாயமான கேள்வியைத் தாண்டி அவரது குழப்பமான ‘கேரக்டரைசேஷன்’ பற்றிக் கேட்டே ஆக வேண்டிய இன்னும் சில கேள்விகள்…
‘சுந்தர் பிச்சை’ இந்தியாவின் பெருமைதானே..? ஆனால், அவரை ஒத்த கேரக்டரான ‘சுந்தர் ராமசாமி’ என்கிற விஜய்யை ஏன் இந்தியாவில் எல்லோரும் (கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள், தொழிலாளிகள் உள்பட) பில்லா, ரங்கா போல் ஒரு இன்டர்நேஷனல் ஸ்மக்ளரைப் பற்றிப் பேசுவதைப் போல் கோபமாகவும், ‘அவன், இவன்’ என்று ஏகவசனத்திலும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அத்துடன் ஒரு இடத்தில் “நான் ஒவ்வொரு தேர்தலுக்கும் இங்கே வருவேன்…” என்று விஜய்யே சொல்லும் அளவுக்கு அவர் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஓட்டுப்போட தமிழ்நாடு வந்து கொண்டுதானே இருக்கிறார்..? ஆனால், அவர் ஏன் இந்தியா வருகிறார் என்று ஏன் ஆளாளுக்கு சிண்டைப் பிய்த்துக் கொள்கிறார்கள்..? அதுவும் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் வேளையில்..?
அவரும் கந்துவட்டிக் கொடுமை கண்டு கொதிக்கிறார் – அதில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை செய்கிறார். சீர் கெட்டுப் போன அரசியல் துறைகளை நேராக்க நினைக்கிறார். அரசியல் ஒரு சாக்கடை போலாகிவிட்டதை உணர்ந்து தன் உலகளாவிய வேலையையும் விட்டுவிட்டு தானே ஒரு முன்மாதிரி அரசியல்வாதியாக இருக்க நினைக்கிறார். இதில் எந்த இடத்தில் அவர் கேரக்டர் ‘கிரிமினல்’ ஆகிறது. அவரே ஏன் தன்னை ஒரு ‘கார்ப்பரேட் கிரிமினல்’ என்கிறார்..?
அவர் கிரிமினல்தனம் என்று சொல்பவை அனைத்தும் சட்டப்படி சரியாகத்தான் இருக்கின்றன. கடைசியில் செத்துப்போன ஒருவரின் ட்விட்டர் அக்கவுண்டில் செய்தி போடுவதைத் தவிர அவர் செய்த ‘கிரிமினல்’தனங்கள் என்ன..?
தனக்காக வாதாட ஜெத்மலானி ரேஞ்சுக்கு ஒரு வழக்கறிஞரை வைத்தும் கூட இவரேதானே அத்தனை சட்ட நுணுக்கங்களையும் எம்.ஜி.ஆர் கணக்காக எடுத்து விடுகிறார்..? இந்தக் கொடுமையில் அந்த ஜெத்மலானிக்கு ஃபீஸ் வேறு கோடிகோடியாகக் கொடுக்கிறாராம். இப்படிப்பட்ட வெள்ளந்தி எப்படி கிரிமினல் ஆவார் பாவம்..?
வில்லன் விஷயத்திலும் அப்படியே… அறிமுகக் காட்சியில் தன் முன்னால் மூன்று சைஸ் சூட்கேட்ஸ்கள் வைக்கப்பட்டிருக்க, முதல் சூட்கேஸில் இருக்கும் ஆவணங்களை சரிபார்த்து, அடுத்த சூட்கேஸிலிருக்கும் பணத்தையும் சரி பார்த்து மூன்றாவது சூட்கேஸில் இருக்கும் ஒரு மீடியாக்காரரை ஓரு கடத்தப்பட்ட சிலையை வைத்தே அடித்துக் கொல்லும் ‘பழ கருப்பையா’ சத்தியமாக பயமுறுத்துகிறார்.
அடுத்து என்னவெல்லாம் செய்வாரோ என்று நாம் நடுங்கினால், அவர் அடுத்த ஐந்தாவது காட்சியில் இருந்து விஜய்யைப் பார்த்து பயப்பட்ட ஆரம்பித்து விடுகிறார். அவருடன் இருக்கும் ‘ரெண்டு’ என்கிற அனுபவ அரசியல்வாதி ராதாரவியும் விஜய்யிடம் “உன் அடுத்த ஓட்டைக் கூட நானே போட்டுக் காட்டவா..?” என்று மிரட்டும்போது மிரள வைக்கிறார். ஆனால், அடுத்த காட்சியிலேயே “நாம்தான் வாயைக் கொடுத்து மாட்டிக்கிடோமோ..?” என்று காமெடியன் ஆகிவிடும்போது “அட போங்கையா…!” என்றாகி விடுகிறது.
வரலட்சுமியை முழு வில்லியாக்க மேற்படி இருவரையும் ‘டம்மி’யாக்கிய முருகதாஸ் அவர் கேரக்டரையாவது அதைவிட பெரியதாகக் காட்டுவார் என்று பார்த்தால் ஆரம்பத்தில் ஏகப்பட்ட பில்டப் கொடுத்து கடைசி கடைசியாக வரலட்சுமியை சாம்பாரில் போட்ட வற மிளகாய் ரேஞ்சுக்கு மாற்றி எடுத்துத் தூறப் போட வைக்கிறார்.
இறந்தவர் அக்கவுண்டிலிருந்து செய்திகள் அளிப்பது விஜய்தான் என்று கண்டுபிடித்துவிடும் வரலட்சுமி அவரது அடுத்த மூவ் இதுவாகத்தான் இருக்கும் என்று கூட கணிக்க முடியாமல் அப்படியா போய் மீடியாக்களிடம் வாக்குமூலம் கொடுத்து சிக்குவார்..?
படத்தின் இடையிடையே வந்து போகும் கீர்த்தி சுரேஷ் படத்தின் நாயகியா என்பது தெரியவில்லை.
சொந்தமாகக் கதை எழுத முடியாவிட்டாலும் ஏ.ஆர்.முருகதாஸ் தன் கிளைமாக்ஸ்களை செவ்வனே வைப்பார். ஆனால், இந்தப்படத்தில் அதுவும் மிஸ்ஸிங். உலகையே தன் புத்திசாலித்தனத்தால் விலைக்கு வாங்கும் வல்லமை பெற்ற விஜய்யும் கூட தன் கிரிமினல், மான்ஸ்டர் மைன்டெல்லாம் செயலற்றுப் போய்விட தள்ளாடிக்கொண்டு ‘ஃபேஸ் புக்’ லைவ்வில் வந்து “உங்க ஓட்டைப் போய்ப் போடுங்க…!” என்று உணர்ச்சி மேலிட்டுக் கத்த அதுவரை ஓட்டுப் போடப் போகாமலிருந்த அத்தனைபேரும் கிளம்பி ஓட்டு சாவடிக்குப் போவது பத்து வடிவேலு காட்சிகள் பார்த்ததைப் போல ‘குபீர்’ சிரிப்பை வரவழைத்து விடுகிறது.
சரி… இவ்வளவுக்கும் பிறகு விஜய் சி.எம் ஆவது ஆவார் என்று பார்த்தால் அவர் எதிர்க்கட்சித் தலைவராகத்தான் ஆவேன் என்று அடம் பிடிக்கிறார். பிறகு ஏன் இதுதான் எங்க ‘சர்கார்’ என்று முழங்குகிறார்..? அர்ஜுனே சி.எம் ஆகிவிட்ட நிலையில் ரஜினிக்கும், விஜய்க்கும் சினிமாவில் கூட சி.எம். ஆக ஏன் இவ்வளவு பயம்..? அப்புறம் ஏன் இத்தனைப் பாடு..?
‘சர்ர்ர்ர்’ என்று காரில் வந்து இறங்கும் ஓபனிங் காட்சியைத் தவிர சர்கார் என்பதற்கு படத்தில் பொருள் இல்லையே..?
வில்லிக்குப் பெயர் ‘கோமளவல்லி’யாம். ‘அம்மா’ இல்லை என்றதும் முருகதாஸுக்கு எவ்வளவு தைரியம் பாருங்கள்…? அத்துடன் தேர்தலுக்குக் கொடுத்த இலவச மிக்சியைத் தூக்கி நெருப்பில் போடும் காட்சியில் அவரே வலிய வந்து நடித்திருக்கிறார். என்னா ரியாக்ஷன்..? கோடிகளில் சம்பளம் வாங்கும் உங்களுக்கு அந்த இலவசங்கள் அற்பமானவையாகத்தான் இருக்கும் சர்கார் சார்..! அது இல்லாத வீடுகளுக்கும் சென்று ச்சும்மா ஒரு விசிட் அடித்துப் பாருங்கள்..!
அது மட்டுமில்லாமல் கிடைத்த இடங்களில் எல்லாம் மீடியாக்காரர்கள் ‘முட்டாள்கள்’ என்று வலிந்து சொல்லியிருக்கும் முருகதாஸ் அரசியல் மற்றும் செய்தித்துறை குறித்து இன்னும் நிறைய ‘கற்க’ வேண்டிய நிலையில் இருக்கிறார்.
இருக்கும் பாஸிட்டிவ்வான அம்சங்களில் கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவும், ஸ்ரீகர்பிரசாத்தின் படத்தொகுப்பும் அமைந்திருக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு விரல் புரட்சி தவிர வேறு எந்தப் பாடலும் எடுபடவில்லை. அவர்தான் பின்னணி இசை அமைத்தாரா என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி யாராவது அறிந்து சொல்லலாம்.
விவேக்கின் பாடல்களில் செந்தமிழ் வரிகளும் புரியவில்லை… சென்னைத் தமிழ் வரிகளும் புரியவில்லை. விஜய் ஒருவர் மட்டும்தான் யுஎஸ்பி என்றாலும் மற்ற அம்சங்களில் இவ்வளவு ‘வீக்’காகாவா இருக்க வேண்டும்..?
சர்கார் – முன்பாதி ‘ஷார்ப்’பான ‘கத்தி…’ பின்பாதி தீபாவளி ‘துப்பாக்கி..!’
– வேணுஜி