December 8, 2025
  • December 8, 2025
Breaking News
December 4, 2025

சாவீ திரைப்பட விமர்சனம்

By 0 151 Views

மரண வீடுகளில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து நிறைய தமிழ்ப் படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் பல சீரியஸ் ரகம். இதுவும் அப்படிதான். ஆனால், அதை டார்க் காமெடியாக நகைச்சுவையில் கடத்த முயன்றிருக்கிறார் இயக்குனர் ஆண்டன் அஜித்.

வேற்று மதத்தைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்ததற்காக அவரைத் திட்டமிட்டு அந்தப் பெண்ணின் அண்ணன்கள் கொன்றதாக முதலில் கதை சொல்லப்படுகிறது. ஆனால், அதற்குள் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து விடுகிறது.

அவன்.வளர்ந்து அப்பாவைக் கொன்ற மாமன்கள் மீது கோபமாக இருந்தாலும் அதில் ஒரு மாமன் மகளை காதலிக்கிறான். அகாலமாக அந்த மாமன் இறந்துவிட, அன்றைய இரவில் அவரது பிணத்தைக் காணவில்லை.

பிணத்தை போய் யார் கடத்துவார்கள்? என்ற குழப்பத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் இருக்க என்ன ஆயிற்று என்பதுதான் கதை.

கதையின் நாயகனாக உதயா தீப். “உதயா… நீ ‘ டீப்’ பாக எதையும் செய்ய வேண்டாம்..!” என்று இயக்குனர் சொல்லிவிட்டார் போலிருக்கிறது. சீரியசான காட்சிகளில் எல்லாம் காமெடி செய்து கொண்டிருக்கிறார்.

அவர் மட்டுமல்லாமல் ஏனைய கேரக்டர்களும் அப்படியேதான் செய்கிறார்கள். எந்த இடத்தில் சிரிக்க வைக்க வேண்டும், எந்த இடத்தில் அழ வைக்க வேண்டும் என்கிற எந்த இலக்கணத்தையும் இயக்குனர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

பிணத்தைக் கண்டு பிடிக்கும் வேலையில் வரும் இன்ஸ்பெக்டர் ஆதேஷ் பாலா அவ்வப்போது டென்ஷனுடன் கத்துவதோடு சரி… ஆனால் பிணம் காணாமல் போனதன் பின்னணியில் அவரும் இருக்கக்கூடும் என்கிற சஸ்பென்ஸ் படம் நெடுக வருகிறது.

இவர்களுடன் ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், ப்ரேம் கே சேஷாஸ்த்ரி  உள்ளிட்டோர் பிற பாத்திரங்களை நிறை செய்கிறார்கள்.

புதிதாக ஒரு ஜேனரை கையில் எடுக்க வேண்டும் என்று இயக்குனர் நினைத்திருப்பார் போலிருக்கிறது. அவரது கட்டளைக்கு இணங்க ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் ரொம்பவும் மெனக்கெடாமல் இயல்பாக பணியாற்றி இருக்கிறார்கள். 

ஒரு கட்டத்தில் பின்னணி இசை இருக்கிறதா இல்லையா என்று நமக்கு சந்தேகம் வருகிறது. ஆனால் தேவையான இடங்களில் மட்டும் இசையால் டச்அப் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

விளையாட்டாக ஒரு படம் பண்ண நினைத்திருக்கிறார் ஆண்டன் அஜித் என்பது புரிகிறது. படம் ஓடும் நூற்று சொச்சம் நிமிடங்களில் கிட்டத்தட்ட ஐந்து மரணங்கள் நிகழ்ந்து விடுகின்றன. 

ஆனால் படத்தின் பாத்திரங்கள் எல்லோரும் பெரும்பாலும் சிரித்துக் கொண்டோ சிரிக்க வைத்துக் கொண்டோ இருக்கிறார்கள்.

இதில் சாவி எங்கிருந்து வருகிறது என்பது படம் பார்க்கும் எல்லோருக்கும் எழும் கேள்வி. அவர்களுக்கு ஒரு செய்தி… அது பூட்டைத் திறக்கும் சாவி அல்ல. 

‘ சாவு வீடு’ என்பதன் சுருக்கம்தான் சாவீ.

“கல்யாண வீட்டுக்கு கூப்பிட்டு போக வேண்டும். சாவு வீட்டுக்கு கூப்பிடாமலும் போகலாம்..!” என்பார்கள்.

முடிந்தால் ஒரு நடை போய் வந்து விடுங்கள்..!

– வேணுஜி