ஒரு வீடு- நான்கு ஜோடிகள் இதை வைத்துக்கொண்டு ஒரு முழுப் படத்தை முடித்து விட்டார் இயக்குனர் சக்திவேல்.
ஆனால் அதை எப்படி சொன்னால் சுவாரசியமாக இருக்கும் என்பதில்தான் அவரது சவால் அமைந்திருக்கிறது.
பிரவீன் ராஜா – சாக்ஷி அகர்வால், அர்ஜுனன் – சஹானா, விவேக் பிரசன்னா – ஸ்வயம் சித்தா, டேனியல் அன்னி போப் – ஜமுனாதான் அந்த நான்கு ஜோடிகள்.
இவர்களில் பிரவீன் ராஜாவின் பிறந்தநாளை ஒட்டி மற்ற மூன்று நண்பர்களும் தங்கள் இணையருடன் அதில் கலந்து கொள்ள வருகிறார்கள்.
ஜாலியாக போய்க்கொண்டிருந்த கெட் டுகெதர், விவேக் பிரசன்னாவின் சின்னப் புத்தியால் திசை மாறி, ஒரு சவாலில் வந்து முடிகிறது. அதன்படி அனைவரும் தங்கள் செல்போன்களை டைனிங் டேபிள் மீது வைத்துவிட வேண்டும். யாருக்கு என்ன அழைப்பு அல்லது மெசேஜ் வந்தாலும் அதை எல்லோருக்கும் தெரியும்படி எடுத்து காட்ட அல்லது பேச வேண்டும் என்பதுதான் அந்த சவால்.
தங்களுக்குள் எந்த ஒளிவு மறைவும் இல்லை திறந்த மனத்துடன் இருக்கிறோம் என்று தங்கள் இணையருக்கு தெரியப்படுத்துவதுதான் இந்த சவாலின் நோக்கம்.
ஆனால் அப்படியா இருக்கிறது சமூகம்? ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கும் ரகசியங்கள் அத்தனையும் செல்போனில் தானே அடக்கமாக இருக்கிறது? இந்நிலையில் ஒவ்வொருவருக்கும் மெசேஜும, அழைப்புமாக வர முடிவு என்ன ஆனது என்பதுதான் கதை.
நான்கு ஜோடிகளும் கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள். ஒரே லொகேஷன், ஒரே விஷயம் என்கிற நிலையில் இவர்களது உணர்ச்சிகளின் மூலமே படத்தை நகர்த்த வேண்டிய சூழலில், அனைவரும் தேவைக்கு அதிகமாகவே எக்ஸ்பிரஷன்களை கொட்டித் கீர்த்திருக்கிறார்கள்.
அதிலும் ஒவ்வொருவராக மாட்டிக்கொண்டே வர, படத்தின் ஆரம்பத்திலேயே கதை நாயகன் பிரவீன் ராஜா மனைவிக்கு தெரியாமல் ஒரு காரியத்தைச் செய்து இருப்பதை நமக்கு காட்டி இருப்பதால் இவர் எப்போது மாட்டப் போகிறார் என்கிற பதை பதைப்பு கூடிக் கொண்டே போகிறது.
ஆனால், எல்லோருமே ஒரு பிரச்சினைக்குள் இருக்கிறார்கள் என்பதை முதலில் சொல்லிவிட்டதால் அவர்கள் எப்படி அந்த சவாலுக்கு ஒத்துக் கொண்டார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
அத்துடன், கடைசியில் அவர்கள் எந்தத் தப்புமே செய்யாதவர்கள் என்பது போல திரைக் கதை அமைக்கப்பட்டிருப்பதால் ஒவ்வொரு அழைப்புக்கும் அவர்கள் மாட்டிக் கொண்டது போல ஓவர் எக்ஸ்பிரஷன்கள் கொடுத் திருப்பதும் தவறாகப் போகிறது.
ஒரு வீடுதான் லொகேஷன் என்றாலும், அந்த வீட்டில் எல்லா பகுதிகளையும் பயன்படுத்திக் கொள்ளாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பது, டைனிங் டேபிளிலேயே உட்கார்ந்து பேசுவது என்பதையெல்லாம் தவிர்த்து இருந்தால் நமக்கு சலிப்பு ஏற்படாமல் இருந்திருக்கும்.
அந்த வகையில் ஒளிப்பதிவாளர் பிரசாந்த் DFTech க்கு வேலை எளிதாகப் போய்விட்டது.
இசையமைப்பாளர் வசந்த் இசைப்பேட்டையின் இசைக்கும் பெரிய வேலை இல்லை என்றாலும் கிடைத்த வாய்ப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
சிறிய சிந்தனையை வைத்துக்கொண்டு படத்தை சுவாரஸ்யப் படுத்த முயற்சித்திருக்கும் இயக்குனர் சக்திவேல் அதைத் திறம்பட செய்திருந்தால் குறிப்பிடத்தக்க படமாக பெயர் வாங்கியிருக்கும்.
இருந்தாலும் சீரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கலாம்.
ரிங் ரிங் – பக் பக்..!
– வேணுஜி