‘பிச்சைக்காரன் 2’ வெற்றி படத்தை தொடர்ந்து தொடர்ந்து விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்து வெளியாகிறது ‘ரத்தம்’.
‘தமிழ்ப் படம்’ ‘ரெண்டாவது படம்’ படங்களை இயக்கிய சி.எஸ்.அமுதன் மூன்றாவதாக இயக்கியிருக்கும் இந்தப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் கமல் போரா, ஜி.தனஞ்செயன், பிரதீப்.பி, பங்கஜ் போரா இணைந்து தயாரித்துள்ளனர்.
அக்டோபர் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் ‘ரத்தம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் இயக்குனர் சி.எஸ். அமுதன், நாயகன் விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் கமல் போரா ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
“விஜய் ஆண்டனியை எனக்கு கல்லூரி நண்பராக முன்பே தெரியும். நான் தமிழ்ப் படம் முடித்த போதே இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று பேசினோம். ஆனால் அது ஏனோ தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. ஒரு நாள் விஜய் ஆண்டனி “நீங்கள் கதை கூட சொல்ல வேண்டாம், வாங்க படம் பண்ணலாம் என்றார், அப்போதே இந்த படம் தொடங்கியது..!” என்று ஆரம்பித்த அமுதன் தொடர்ந்தார்.
“பிறகு அவரிடம் இந்த படத்தின் கதையை சொன்ன போது அவருக்கு பிடித்திருந்தது. ஆனால், இப்படி ஒரு படம் பண்ணுவதற்கு தைரியம் வேண்டும். முக்கியமாக இப்படிப்பட்ட கதையில் நடிக்க வேண்டும் என்றால் ஹீரோவுக்கு தைரியம் வேண்டும்.
வழக்கமான கிரைம் திரில்லர் படங்களைப் போன்று இது இருக்காது. பொதுவாக க்ரைம் திரில்லர் படத்தில் கொலையாளி யார்? என்று கண்டுபிடிப்பதுதான் கிளைமாக்ஸ் ஆக இருக்கும்.
ஆனால், நாங்கள் கொலை செய்வது யார்? என்பதை டிரைலரிலேயே காட்டி விட்டோம். அதன் பின்னணியில் ஒரு மர்மம் இருக்கிறது. அதை நோக்கித்தான் கதை நகரும் இதுவரை நாம் பார்த்த படங்களில் இருந்து இதுவே இந்த படத்தை வித்தியாசப்படுத்தும்..!” என்றவரிடம், “படத்தின் தலைப்பிலேயே ரத்தம் என்று இருக்க பட முழுவதும் ரத்தக் களரியாக இருக்குமா..?” என்றால்,
“சொல்லப்போனால் இந்த படத்தை காண தலைப்பை கொடுத்தது விஜய் ஆண்டனி தான். நான் ‘வன்மம்’ என்றுதான் தலைப்பை யோசித்து வைத்திருந்தேன். ஆனால், வன்மத்தை விட ரத்தம் பொருத்தமாக இருந்ததால் அந்த தலைப்பை படத்திற்கு வைத்தோம். அதே சமயம், கொலைகொலையோ இரத்தத்தையோ காட்டி ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழை க்கும் படமாக இது இருக்காது.
எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவுக்கு மட்டுமே கொலை சம்பந்தப்பட்ட காட்சிகளை வைத்திருக்கிறோம்..!” என்றவர் தொடர்ந்து…
“படத்தில் விஜய் ஆண்டனி ஒரு பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றுகிறார். படம் முழுவதுமே பத்திரிகை துறை சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. அதற்காக தொழில்முறை பத்திரிகையாளர்களிடம் ஆலோசனை பெற்றோம் பல பத்திரிகை அலுவலர்களுக்கு சென்று நடைமுறையை கண்டறிந்தும் காட்சிகளை அமைத்திருக்கிறோம்…
படம் எதை நோக்கி செல்கிறது என்பதுதான் நாங்கள் சொல்ல வந்திருக்கும் புதிய விஷயமாக இருக்கும் அதுவே படத்துக்கான சுவாரசியத்தையும் தரும்..!” என்றார்.
விஜய் ஆண்டனி படம் குறித்து கூறும்போது, “க்ரைம் திரில்லர் படங்கள் பல வந்திருக்கிறது, நானும் சில படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், அமுதன் சொன்ன கதை புதிதாக இருந்ததோடு, தற்போது உலகம் முழுவதும் நடக்கக் கூடிய ஒன்றுதான் என்பதால் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்..!” என்றார்.
‘ரத்தம்’ படத்தில் ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மூன்று ஹீரோயின்கள் இருந்தும் வழக்கமான படம் போல் ஹீரோவுக்கு ஜோடியாக யாருமே இல்லை.
“என் ஹீரோயின் என்று சொல்ல வேண்டுமென்றால் நந்திதா ஸ்வேதாவை சொல்லலாம். ஒரு முத்த காட்சி கூட இருக்கிறது. அது இருக்கிறதா, அமுதன் வெட்டி விட்டாரா என்று தெரியவில்லை..!” என்று சிரித்தார் விஜய் ஆண்டனி.
தயாரிப்பாளர் கமல் போராவிடம் தொடர்ந்து விஜய் ஆண்டனி படங்களையே தயாரித்து வருகிறீர்களே என்றதற்கு எனக்கு அமிதாப்பச்சன் படங்கள் மிகவும் பிடிக்கும் அமிதாப்பச்சன் நிறைய படங்களில் விஜய் என்கிற பெயருக்கு கொண்ட கேரக்டரில் தான் நடித்திருக்கிறார.
அதனால் விஜய் என்ற பெயருடைய நடிகர்கள் அனைவரையும் எனக்கு பிடிக்கும் அந்த வகையில் விஜய் ஆண்டனி எனக்கு நெருக்கமாக அவரை வைத்து தொடர்ந்து படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறேன் இன்னும் ஒரு படமும் அவர் நடிப்பில் எங்கள் தயாரிப்பில் இருந்து வெளிவர இருக்கிறது..!” என்றார்
கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு, கண்ணன் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
தெறிக்க விடுங்க. ஆனால், ரத்தம் தெறிக்க வேண்டாம்..!