சமுத்திரக்கனிக்கு மகன் பிறப்பதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. ‘ மகனை சான்றோன் ஆககுதல் தந்தையின் கடனே…’ என்கிற வார்த்தைக்கேற்ப மகனை அருமையாகவும் பாசத்துடனும் வளர்க்கிறார்.
ஆனால் அப்படி வளர்த்த மகன் உருப்படாமல் வளர்ந்து நின்றால் ஒரு தந்தைக்கு எப்படி இருக்கும்..? தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை செய்வதெல்லாம் தவறான வேலை என்று இருக்கையில் அந்தத் தந்தைக்கும் மகனுக்குமான உறவு எப்படி சென்று முடிந்தது என்பதுதான் படத்தின் கதை.
தமிழ் சினிமாவில் நல்ல தந்தை என்றாலும், நேர்மையானவர் என்றாலும் அது ஒரே ஒருவரைத்தான் குறிக்கும். அவர் சமுத்திரக்கனி.
பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை செய்தாலும் பத்து பைசா லஞ்சம் வாங்காமல் நேர்மையாளராக இருக்கும் சமுத்திரக்கனி, மகன் செல்லாக் காசாகிப் போனதில் காட்டும் தவிப்பும் வேதனையும் நெகிழ்ச்சி.
“நல்ல நிலம், நல்ல விதை… ஆனாலும் எப்படி இப்படி ஒரு விஷச்செடி முளைச்சது..?” என்று மனைவியிடம் மருகும் வேதனையில் கனியின் நடிப்பு தனி(ரகம்).
கதையின் நாயகனாகவும் , கனியின் மகனாகவும் நடித்திருக்கும் தனராஜ் கொரனானியின், தோற்றமும் நடிப்பும் அவரை வெறுக்கச் செய்வதே அந்தப் பாத்திரத்தின் வெற்றி.
ஊரைப் போல் உலகத்தைப் போல் புத்திசாலித்தனமாக லஞ்சம் வாங்கி சம்பாதித்து அப்பாவால் பணக்காரராக முடியவில்லையே என்கிற சுயநல தவிப்பை தன்ராஜ் நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். கடைசியில் அவர் எடுக்கும் முடிவு கொடூரம். அப்பாவின் மீது வெறுப்பை உணர்ந்தாலும் அவர் உயிருக்கு ஆபத்து என்றவுடன் பதறும் நடிப்பில் தன்ராஜ் மிளிர்கிறார்.
சமுத்திரக்கனியின் மனைவியாகவும், தன் ராஜின் அம்மாவாகவும் நடித்திருக்கும் பிரமோதினி, மகனை தண்டிக்கவும் முடியாமல் தண்டிக்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளியாக ஒரு தாயின் பாசத்தை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
வழக்கமாக கதாநாயகன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனைக் காதலிக்கும் வழக்கம் கதாநாயகிகளுக்கு உண்டு. ஆனால் இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருக்கும் மோக்ஷா பளிச்சென்று “உன்னை பிடிக்கவில்லை…” என்று தன்ராஜிடம் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்.
பெற்றவர்களும் ஊரும் வெறுத்தாலும் தனி ஆளாய் நின்று தன்ராஜ் மீது நட்பு பாராட்டும் ஹரிஷ் உத்தமனின் நடிப்பும் நன்று. தன் சூழ்நிலை கருதி ஒரு தகாத செயலைச் செய்ய முடிவு எடுத்தாலும் கடைசியில் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு விடும் அவர் உண்மையிலேயே உத்தமன்தான்.
காமெடியன் வில்லன் தாண்டி இந்தப் படத்தில் சுனிலுக்கு ஒரு குணசித்திர வேடம். ஆரம்பத்தில் வில்லன் போல் தோன்றினாலும், தன்ராஜின் மனம் அறிந்து அவரை தண்டிக்காமல் விடுவது ஆச்சரியம்.
இவர்களுடன் சத்யா, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, பிரித்விராஜ் ஆங்காங்கு சிரிக்க வைக்கிறார்கள்.
அருண் சிலுவேறு இசையில் பாடல்கள் தெளிவாக புரிவதால் யுகபாரதி மற்றும் முருகன் மந்திரம் எழுதிய வரிகள் கதைக்கு ஏற்ப விழுந்து இருப்பதைக் கவனிக்க முடிகிறது.
துர்கா கொல்லிபிரசாத்தின் ஒளிப்பதிவு சமுத்திரக்கனியை விட படத்தின் தன்மைக்கு நேர்மையாக அமைந்திருக்கிறது.
சிவபிரசாத் யானாலாவின் கதையும், மாலியின் வசனங்களும்தான் படத்தின் முக்கிய காரணிகள். இப்படி ஒரு கதை இந்த யுகத்தில் நடப்பது புதிதாகத்தான் இருக்கிறது.
நாயகனாக நடித்திருக்கும் தனராஜ் கொரனானியே திரைக்கதையை எழுதி இயக்கி இருப்பதால் எந்த இடத்திலும் உணர்வு பிசகாமல் உயிர்ப்பாக இருக்கிறது.
இப்படி ஒரு அப்பா – மகன் உறவை இப்போதுதான் தமிழ் சினிமா பார்க்கிறது.
ராமு ராகவம் – தந்தையின் தியாகம்..!
– வேணுஜி